news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாடு முழுவதும் அதிரடி சோதனை: ஒரே நாளில் போதைப்பொருள்களுடன் 998 பேர் கைது

26 May, 2026

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய விசேட நடவடிக்கையின் கீழ், ஒரே நாளில் 998 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை ஒடுக்குவதற்காக நேற்று நாடு முழுவதும் 996 விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளில், போதைப்பொருள் வைத்திருந்தது, கடத்தியது மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் 998 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், போதைப்பொருள் வலையமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக சந்தேகிக்கப்படும் 8 பேருக்கு எதிராக நீதிமன்றத்தின் மூலம் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு கடுமையாக அடிமையான நால்வர் அடையாளம் காணப்பட்டு, அவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்புவதற்கான பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த விசேட நடவடிக்கைகளின் போது பெருமளவிலான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, 422 கிராம் ஹெரோயின், 3 கிலோ 53 கிராம் ஐஸ், 2 கிலோ 219 கிராம் கஞ்சா, 7 கஞ்சா செடிகள், 25 கிராம் குஷ், ஒரு கிலோ 225 கிராம் ஹஷீஷ், 1,027 போதை மாத்திரைகள், 252 கிராம் மதனமோதகம் மற்றும் 147 கிராம் மாவா போன்ற போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தகைய விசேட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், பொதுமக்களும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து தகவல் வழங்க வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!