வரலாற்றுப் பின்னணி: 1949ஆம் ஆண்டு சீன உள்நாட்டுப் போரின் போது கம்யூனிஸ்டுகளிடம் தோல்வியடைந்த குவோமிங்டாங் (Nationalist Kuomintang) தேசியவாத அரசு தாய்வான் தீவுக்குத் தப்பிச் சென்றது. அன்று முதல் தாய்வான் தனக்கெனத் தனித்துவமான நாணயம், இராணுவம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்போடு தன்னாட்சியுடன் இயங்கி வருகிறது.
எனினும், தாய்வானைத் தனது நாட்டின் ஒரு பிரிக்க முடியாத பகுதி என உரிமை கோரும் பெய்ஜிங், தேவைப்பட்டால் பலத்தைப் பயன்படுத்தியாவது அதனைப் பிரதான நிலப்பரப்புடன் 'மறுஇணைப்பு' செய்வோம் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கணினி சில்லுகள் (Microchips) மீதான உலகளாவிய தங்கியிருப்பு: நவீன தொழில்நுட்ப உலகின் உயிர்நாடியாக விளங்கும் அதிநவீன கணினி குறைக்கடத்தி மென்பொருள்களில் (Semiconductors) சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை தாய்வானிலேயே (குறிப்பாக TSMC நிறுவனத்தால்) உற்பத்தி செய்யப்படுகின்றன.
தாய்வான் கடற்பரப்பில் ஏற்படும் ஒரு சிறிய இராணுவ முரண்பாடு அல்லது கடல்சார் முற்றுகை கூட உலகளாவிய ஸ்மார்ட்போன், கார் உற்பத்தி முதல் இராணுவ வன்பொருள்கள் வரை ஒட்டுமொத்த சர்வதேசத் தொழில்நுட்பத் துறையையும் முடக்கும் பேராபத்தைக் கொண்டுள்ளது.
முதலாவது தீவுச் சங்கிலி (First Island Chain) வியூகம்: பசிபிக் பெருங்கடலில் சீனாவின் கடற்படை ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா வகுத்துள்ள 'முதலாவது தீவுச் சங்கிலி' என்ற மூலோபாயப் பாதுகாப்பு வளையத்தின் மையப்புள்ளியாக தாய்வான் அமைந்துள்ளது.
தாய்வான் சீனாவின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் சென்றால், சீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கிப் போர்க்கப்பல்கள் எவ்விதத் தடையுமின்றி பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளுக்குள் நுழைந்து, குவாம் தீவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கும், ஒட்டுமொத்த சர்வதேசக் கடல்சார் வர்த்தகப் பாதைகளுக்கும் நேரடி அச்சுறுத்தலாக மாறும்.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் மூலோபாயப் பாதுகாப்பு சமநிலையைக் குலைக்கும் வகையில், தாய்வானின் கிழக்குக் கடற்பரப்பில் சீனா தனது கடலோரக் காவல் படை மற்றும் கடல்சார் ஆராய்ச்சி உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி முன்னெப்போதும் இல்லாத தீவிரமான சாம்பல் வலய (grey-zone) கூட்டுப் பயிற்சியொன்றை முன்னெடுத்துள்ளது.
இத்தீவின் பாதுகாப்பை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்காவிற்கும், பிராந்தியத்தில் தனது இறையாண்மையைப் பறைசாற்றத் துடிக்கும் சீனாவிற்கும் இடையிலான அடுத்தகட்ட மோதல் களம் ஆழ்கடலுக்குள் நகர்வதை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகின்றது.
தாய்வானின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நுழைந்த சீனக் கடலோரக் காவல் படையின் ரோந்துக் கப்பலொன்று, அப்பகுதியால் பயணித்த வெளிநாட்டு வர்த்தகக் கப்பல்களை வானொலி மூலம் தொடர்புகொண்டு மிரட்டும் தொனியில் விசாரணை நடத்தியுள்ளது.
சிங்கப்பூர், லைபீரியா மற்றும் பெனின் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான வணிகக் கப்பல்களிடம் அவற்றின் ஆரம்பப் புள்ளி, சேருமிடம் மற்றும் மாலுமிகளின் விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு சீனா கட்டாயப்படுத்தியுள்ளது. சர்வதேசக் கடல்சார் சட்டங்களை முற்றிலும் மீறும் வகையில் தாய்வானின் கிழக்கே சீனா இவ்வாறானதொரு விசாரணையை முன்னெடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த அச்சுறுத்தலுக்கு இணையாகவே, சீனாவின் அதிநவீன சிவில் ஆராய்ச்சி விண்கலங்கள் மற்றும் கப்பல்கள் தாய்வானின் கிழக்கு ஆழ்கடற்பரப்பில் தீவிரமான கடற்படுக்கை வரைபடமாக்கல் (Seabed Mapping) பணிகளில் ஈடுபட்டுள்ளன.
தாய்வானின் கிழக்குக் கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலின் கண்டத்தட்டு (Continental Shelf) மிகவும் செங்குத்தாகச் சரிந்து ஆழ்கடலாக மாறுகின்றது. இந்த நீருக்கடியில் உள்ள நிலப்பரப்பின் தன்மை, நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்திற்கு மிகவும் சாதகமான அமைப்பாகும். எனவேதான், இப்பகுதியின் ஒலியியல் மற்றும் நிலப்பரப்புத் தரவுகளைத் திரட்டுவதில் பெய்ஜிங் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆழ்கடல் வரைபடமாக்கலின் பின்னணிகடற்படுக்கையின் துல்லியமான வரைபடங்கள் நீர்மூழ்கிக் கப்பல் போரின் (Submarine Warfare) வெற்றியைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணியாகும். ஆழ்கடலில் பயணிக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிவது பொதுவாக சோனார் (Sonar) அலைகளின் எதிரொலிப்பிலேயே தங்கியுள்ளது.
கடற்படுக்கையின் நிலப்பரப்பு, நீரின் வெப்பநிலை, உப்புத்தன்மை போன்ற ஹைட்ரோகிராபிக் தரவுகள் சீனாவிற்குத் துல்லியமாகத் தெரியவரும்போது, அது தனது சொந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை எதிரிக்குத் தெரியாமல் மறைத்து இயக்கவும், அதேநேரம் அமெரிக்க மற்றும் அதன் கூட்டுப் படைகளின் அணுசக்தித் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை (SSNs) எளிதாகக் கண்டறிந்து முறியடிக்கவும் வழிவகுக்கும்.
அமெரிக்க கடற்படையின் முன்னாள் நீர்மூழ்கிக் கப்பல் தளபதியும் பாதுகாப்பு ஆய்வாளருமான தோமஸ் ஷுகார்ட்டின் கூற்றுப்படி, வெறும் ஐந்து நாட்கள் நடத்தப்படும் வரைபடமாக்கல் மூலம் சீனாவிடம் ஏற்கனவே உள்ள தரவுகளை விடப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால், இது தாய்வானை முழுமையாகத் தனிமைப்படுத்துவதற்கான ஒரு 'புதிய இயல்புநிலையை' (New Normal) உருவாக்கும் சீனாவின் மூலோபாய உத்தியாகும்.
இந்தக் கடல்சார் வரைபடமாக்கல் நடவடிக்கை, சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையின் பாரிய விரிவாக்கத்துடன் ஒத்துப்போகின்றது. செயற்கைக்கோள் விபரங்களின்படி, சீனா இந்த ஆண்டில் மட்டும் இரண்டு புதிய ரக நீர்மூழ்கிக் கப்பல்களை இரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 'Type 095' ரக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும், ஷங்காய் கப்பல் கட்டும் தளத்தில் கண்டறியப்பட்ட கன்னிங் டவர் (Conning Tower) இல்லாத முற்றிலும் மாறுபட்ட 'Sailless' நீர்மூழ்கிக் கப்பலும் அடங்கும்.
தாய்வான் மீதான இராணுவ நடவடிக்கையின் போது, இத்தீவின் கிழக்கு ஆழ்கடலில் இருந்து இயங்கும் அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களே சீனப் படைகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சீன மேற்பரப்புக் போர்க்கப்பல்களையும் தரையிறங்கும் படைகளையும் மிக எளிதாகத் தாக்கக்கூடும். இந்த ஆபத்தை முன்கூட்டியே முறியடிப்பதற்காகவே சீனா பசிபிக் பெருங்கடலுக்குள் தனது சிவில் மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகளைப் பலவந்தமாகப் புகுத்தி வருகிறது.
நடைமுறை ரீதியிலான இணைப்புசீனாவின் அதிகாரப்பூர்வ இராணுவ விவகார சமூக ஊடகக் கணக்கான 'யுவான் தியான்டியன்' (Yuyuan Tantian) விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் "கடல்சார் களத்தில் நாட்டின் இறையாண்மை உரிமைகளையும் அதிகார வரம்பையும் செயல்படுத்துவதாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தாய்வானின் கிழக்குக் கடற்பரப்பு இப்போது சீனாவின் தினசரி மேலாண்மை கட்டமைப்புக்குள் (Daily Management Grid) இணைக்கப்பட்டு விட்டது என்றும் அது பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தாய்வானைச் சுற்றியுள்ள அனைத்துக் கடற்பரப்புகளும் பிரதான நிலப்பரப்பிற்குச் சொந்தமானவை என்பதை பெய்ஜிங் உத்தியோகபூர்வமாக உணர்த்தியுள்ளது.
இது ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் நீண்டகால மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். தாய்வான் மீது உடனடியாக ஒரு நேரடி இராணுவத் தாக்குதலைத் தொடுப்பதற்குப் பதிலாக, இத்தீவு ஏற்கனவே பெய்ஜிங்கின் கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளது என்ற தோற்றத்தை சர்வதேச ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
தொடர்ச்சியான இராணுவப் பயிற்சிகள், கடல்சார் தடைகள் மற்றும் சிவில் அமைப்புகளை பயன்படுத்தி அதிகார வரம்பை நிலைநாட்டுவதன் மூலம் 'மறுஇணைப்பை' (Reunification) ஒரு நடைமுறை உண்மையாக மாற்றுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.
பிராந்திய எதிர்வினைகளும் பொருளாதாரத் தாக்கமும்
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தாய்வான் அரசாங்கம் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் பிராந்திய அமைதியைக் குலைக்கும் நடவடிக்கை என்றும் சாடியுள்ளது.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையில் மே மாதம் நடைபெற்ற இருதரப்பு எல்லையோர உடன்படிக்கைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே சீனா இந்த ஐந்து நாள் ஆழ்கடல் பயிற்சியை முன்னெடுத்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தனக்கு தாய்வான் மீது நேரடித் தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை என ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளதாகக் கூறப்பட்டாலும், 2027 ஆம் ஆண்டிற்குள் தாய்வானைக் கைப்பற்றுவதற்கான போருக்கு முழுமையாகத் தயாராக இருக்குமாறு அவர் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். சீனா தாய்வானைச் சுற்றி ஒரு முழுமையான கடல்சார் முற்றுகையை ஏற்படுத்தக்கூடும் என்பதே அமெரிக்காவின் முதன்மை அச்சமாகும்.
உலகளாவிய கணினி குறைக்கடத்தி மென்பொருள் (Computer Chips / Semiconductors) விநியோகச் சங்கிலியில் தாய்வான் வகிக்கும் முக்கியத்துவம் காரணமாக, இந்த பிராந்தியத்தில் ஏற்படும் சிறியதொரு முரண்பாடும் உலகப் பொருளாதாரத்தைப் பேரழிவிற்குள்ளாக்கும். ஒருவேளை அமெரிக்கா இந்த முற்றுகையை உடைக்க முயன்றால், அது இரு வல்லரசு நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இடையிலான மிக மோசமான ஆழ்கடல் போராக வெடிக்கும் ஆபத்துள்ளது என்பதை இந்த புவிசார் அரசியல் நகர்வுகள் எச்சரிக்கின்றன..
(லியோ நிரோஷ தர்ஷன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!