கூடுவாஞ்சேரியில் கொலை செய்த 38 வயதுடைய நிஷா என்ற பெண்ணின் உடலை அப்புறப்படுத்த, கொலையாளிகள் போட்ட திட்டம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'யூ - டியூப் தளத்தில்' வீடியோ, தலை, கண்கள், மூக்கு உள்ளிட்ட பாகங்களை தனியாக வெட்டி எடுத்ததோடு, கத்தியால் சதையை உரித்து நொதிக்க வைத்தது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை புறநகர், கூடுவாஞ்சேரியில் வசித்த ஹயாத்துன் நிஷா, 38, என்ற பெண்ணை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டிய, மாணிக் உத்தீன் லஸ்கர், 22, அவரது மனைவி பகாபதி மாஜி, 21, ஆகியோரை, ஒடிசாவில் போலீசார் கைது செய்தனர்.
அவர்களை நேற்று முன்தினம் தாம்பரத்திற்கு அழைத்து வந்த போலீசார், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து நேற்று விசாரித்தனர்.
மொத்தம் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையில், கொலைக்கான காரணம் குறித்தும், கொலையை அரங்கேற்றியது குறித்தும், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல், சினிமாவையே மிஞ்சும் வகையில் இருப்பதாக, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கொலையாளிகள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட ஹயாத்துன் நிஷா, ஒடிசாவை சேர்ந்தவர். அங்கு திருமணமாகி, கணவர் மற்றும் ஆண் குழந்தையுடன் 10 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்துள்ளார்.
கருத்து வேறுபாடால் கணவரை பிரிந்த அவர், மாடம்பாக்கத்தில் தங்கி, தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை பிரிந்துள்ளார்.
பின், தன்னுடன் பணிபுரிந்த மாணிக் உத்தீன் லஸ்கர், அவரது மனைவி பகாபதி மாஜி, ஆகியோருடன், நான்கு மாதங்களுக்கு முன் பழகியுள்ளார்.
அப்போது ஹயாதுன் நிஷாவிற்கும், மாணிக் உத்தீனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறி உள்ளது. இந்த விஷயம், பகாபதி மாஜிக்கு தெரிந்து சண்டை பிடித்துள்ளார். பின் அவரும், அவர்களுக்கு பச்சைக்கொடி உள்ளார்.
இதையடுத்து, கூடுவாஞ்சேரி, மசூதி தெருவில் ஒரு வீட்டில் ஜூன் மாதம் மூவரும் குடியேறி, ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். ஹயாத்துன் நிஷாவின் மகன், தாயின் நடவடிக்கை பிடிக்காமல் தனியாக பிரிந்து சென்றார்.
இந்நிலையில் ஹயாத்துன் நிஷா, இரு மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்துள்ளது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, மாணிக் உத்தீனிடம் நிர்பந்தித்து உள்ளார். ஆனால் அவர், கருவை கலைக்கும்படி கூறவே, மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் அதிருப்தியடைந்த ஹியாதுன் நிஷா, இருவர் மீதும் போலீசில் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணிக் உத்தீன், மனைவி பகாபதி மாஜியிடம் சேர்ந்து, ஹயாத்துன் நிஷாவை கொலை செய்துள்ளனர்.
கொலைக்கு அவர்கள் போட்ட திட்டம்தான் பகீரென இருக்கிறது.
ஆக., 2ம் தேதி, கொடிய விஷம் கலந்த உணவை, ஹயாதுன் நிஷாவுக்கு கொடுத்து கொன்றுள்ளனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க உடலை எவ்வாறு அழிக்கலாம் என, 'யூ - டியூப்' வாயிலாக பல வீடியோக்களை பார்த்துள்ளனர்.
அதன்படி, உடலை குளியலறைக்குள் வைத்து பல துண்டுகளாக மாணிக் உத்தீன் வெட்டியுள்ளார். வெட்டப்பட்ட உடல் பாகங்களை டிராலி பெட்டியில் வைத்தபோது, இழுத்து செல்ல முடியாத அளவுக்கு கனமாக இருந்துள்ளது.
இதனால், வெட்டப்பட்ட தலையை மொட்டையடித்து, கண், காது, மூக்கு ஆகியவற்றை தனியே எடுத்துள்ளார். உடலின் சதை பகுதிகளை கத்தியால் தனியாக உரித்து எடுத்து, அதை பிரியாணி பாத்திரத்தில் போட்டுள்ளார்.
அந்த சதை பகுதியை மாவு பதத்திற்கு கொண்டு வர, பிரியாணி பாத்திரத்தில் 14 லிட்டர் வினிகர் மற்றும் சில வேதி பொருட்களை கலந்துள்ளார். காற்று புகாமல் இருக்க, பாத்திரத்தை மூடி, மைதா மாவு கலவையால் அதை பூசி உள்ளார்.
பின், எலும்புகளை மட்டும் துண்டாக்கி தனித்தனி பிளாஸ்டிக் பைகளில் பொதிந்து, டிராலி பெட்டியில் வைத்துள்ளார். இந்த வேலைகளை செய்து முடிக்க, 24 மணி நேரத்திற்கும் மேலாக செலவிட்டுள்ளார். இதற்கு உடந்தையாக, அவரது மனைவியும் இருந்துள்ளார்.
ஆக., 3ம் தேதி மாலை, அந்த டிராலி பெட்டியை கூடுவாஞ்சேரியிலிருந்து புறநகர் ரயிலில் ஏற்றிய அவர்கள், பூங்கா ரயில் நிலையம் சென்றனர். பின், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்துவிட்டு, மீண்டும் கூடுவாஞ்சேரி வீட்டுக்கு வந்துவிட்டனர்.
ஆக., 4ல், அங்கிருந்த உடைமைகளை எடுத்துக்கொண்டு, சொந்த ஊருக்கு செல்வதாக, அக்கம் பக்கத்தில் இருந்தோரிடம் கூறிவிட்டு, ஏற்கனவே அவர்கள் தங்கியிருந்த பல்லாவரத்தில் ஒரு வீட்டில் தங்கினர். 'ஆன்லைன்' வாயிலாக விமான டிக்கெட் புக் செய்து, ஆக., 6ல் விமானம் வாயிலாக அசாம் தப்பித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொலையாளிகள் இருவரையும் விசாரிக்க, கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார், ஆறு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!