"பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்” – வடக்கு மக்களுக்கு ஆளுநர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
வட மாகாணத்தில் வெசாக் பண்டிகை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த ஆண்டு வட மாகாணத்தில் வெசாக் பண்டிகையையொட்டி தன்சல் வழங்குதல் மற்றும் வெசாக் அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவி வரும் தகவல்களுக்கு எந்தவித உண்மையும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய எந்த தீர்மானமும் ஆளுநர் செயலகத்தால் எடுக்கப்படவில்லை என்றும், அதுபற்றி எந்தவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும் மிகவும் பொறுப்புடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் இன மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து, மக்களிடையே குழப்பத்தை உருவாக்கும் நோக்கில் சில தரப்பினரால் திட்டமிட்டு இவ்வாறான போலியான செய்திகள் பரப்பப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கீழ்த்தரமான மற்றும் காழ்ப்புணர்ச்சி கொண்ட போலி பிரச்சாரங்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வ முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் அடிப்படையற்ற சமூக ஊடக தகவல்களை நம்பாமல், இன மற்றும் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் தொடர்ந்து பேணுமாறு ஆளுநர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!