எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி ஏற்படும் என டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை: உலக சந்தையில் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
21 May, 2026
காசநோய் பாதிப்புக்கு உள்ளாகி, மும்பை நகராட்சி மருத்துவமனையில் 5 மாதங்கள் கழித்து 18-06-1948 அன்று ஹரிலால் இறந்து விட்டார். வாழும்போது தந்தை சொல்லைக் கேட்காத மகன், மறையும் போது தந்தையை நினைத்து நினைத்து சோகத்தோடும், ஏக்கத்துடனும், ஏமாற்றத்துடனும் மறைந்தார்.
மகாத்மாவின் மரணத்தின்போது, இரண்டாவது மகன் மணிலால் தென்னாப்பிரிக்காவில் இருந்தார். பீனிக்ஸ் ஆசிரமத்தின் நிர்வாகியாகவும், இந்தியன் ஒப்பினியன் இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தார்.
அண்ணல் உருவாக்கிய உண்மையான, உன்னதமான சமூக நலப் போராளி அவர். 25 முறை அரசால் கைது செய்யப்பட்டவர்;
சுமார் 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர், அண்ணல் நடத்திய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று 9 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர். மகாத்மா காந்தி உள்பட எவருமே இவ்வளவு அதிக காலம் சிறைவாசத்துக்கு உள்ளாகியவர் அல்லர்.
"மணிலால் வழியாகவே நான் காந்தியைக் கண்டேன்' என்றார் தென்னாப்பிரிக்காவின் தேசப் பிதாவாகக் கருதப்படும் நெல்சன் மண்டேலா.மரணச் செய்தி கேட்டபோது, மணிலால் மனம் வருந்தினார்.
இந்தியாவுக்கு வரவில்லை; தன் கடமையைத் தொடர்ந்தார் மணிலால். "என் தந்தையை இழந்து விட்டேன்; என்துயரத்தை விளக்க இயலாது. அவரது உடல் மறைந்து விட்டது; ஆனாலும், அவரது ஆன்மா உலகை என்றும் வழிநடத்துமாக!' எனப் பதிவு செய்துள்ளார்.
மகாத்மாவின் மரணத்தின்போது, அவரது மூன்றாவது மகன் ராமதாஸ் செய்தி அறிந்தவுடன், தன் மனைவி நிர்மலா பென்னுடன் நாகபுரியிலிருந்து புதுதில்லிக்கு விரைந்தார்.
இவர்தான் மகாத்மாவின் ஈமக்கிரியைகளைச் செய்தவர். கங்கையில் அண்ணலின் அஸ்தியைக் கரைத்ததும் இவரே.
ஆரம்பத்தில் இவருக்கு அரசியல் ஆர்வம் இருந்தது. ஆனால், தன் வாரிசுகள் அதிகார அரசியல் பீடத்துக்கு வரக் கூடாது என்பதில் மகாத்மா காந்தி உறுதியாக இருந்தார்.
அதை முழுமையாக ஏற்றுக் கொண்ட ராமதாஸ், தன் மனைவி நிர்மலா பென்னுடன் இணைந்து வார்தாவின் சேவா கிராமம் ஆசிரமத்தை, தன் வாழ்நாள் இறுதிவரை நடத்தினார்.
ஆசிரமத்தை தன் உழைப்பின் மூலம் ஈட்டிய வருமானத்தைக் கொண்டே நடத்திய முன்மாதிரி சமூக சேவகராகத் திகழ்ந்தார்.
அண்ணலின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தி ஆரம்பம் முதல் இறுதிக்காலம் வரை தனது தந்தையுடன் இருந்தவர். மகாத்மா காந்தியின் நெருக்கமான உதவியாளராகவும், கிட்டத்தட்ட நண்பராகவும் இருந்தார். புகழ்பெற்ற புணேஒப்பந்தத்தில் மகாத்மா காந்தியின் சார்பில் கையொப்பமிட்டவர் இவரே!
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!