news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மட்டக்களப்பில் 5 மனித கொலை : பிள்ளையான் உட்பட மூவருக்கு நீதிமன்றின் உத்தரவு

04 Aug, 2026

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 'பிள்ளையான்' மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உள்பட 3 பேரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  செவ்வாய்க்கிழமை (04) காணொளி ஊடாக உத்தரவிட்டதுடன், 'பொலிஸ் பாய்ஸ்' என்பவருக்குத் திறந்த பிடியாணை  பிறப்பித்தார்.

2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவரும், காத்தான்குடியில் ரி.எம்.வி.பி. கட்சி உறுப்பினர் உட்பட இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், வவுணத்தீவு கரையாக்கம்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய வகையில், ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சி.ஐ.டி. (குற்றப் புலனாய்வுத் திணைக்களம்) கைது செய்தது.

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ் உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2026ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் திகதி சி.ஐ.டி.யினர் வழக்குத் தாக்கல் செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த வழக்கு   செவ்வாய்க்கிழமை (04) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களான பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலையிலிருந்து இணையவழி காணொளி ஊடாக (Zoom) ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, பிள்ளையான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரராஜா ஆஜராகி, பிள்ளையான் தற்போது வெலிசறை கடற்படை முகாம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குச் சிறைச்சாலையிலிருந்து செல்லும் உணவை அந்த முகாமில் இருக்கும் இராணுவத்தினரும் கடற்படையினரும் பரிசோதனை செய்வதால் அது சிதைவடைந்துவிடுவதாகவும், அதனால் அதனைச் சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, சாப்பாட்டை அவ்வாறு பரிசோதனை செய்யாமல் தருமாறும், அவரது 73 வயதுடைய தாயார் சுகயீனமுடன் இருப்பதால் அவருடன் கையடக்கத் தொலைபேசி ஊடாக 2 அல்லது 3 நிமிடங்கள் கதைப்பதற்கு அனுமதி வழங்குமாறும் சட்டத்தரணி கோரிக்கை முன்வைத்தார். இதன்போது நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளிடம் அங்குள்ள நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றுமாறு தெரிவித்தார்.

இதேவேளை, சி.ஐ.டி. சார்பில் ஆஜரான அதன் பொறுப்பதிகாரி, கடந்த வழக்கு விசாரணையின் போது குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு முன்வைக்கப்பட்ட கோரிகை தொடர்பில் விளக்கமளித்தார். குறித்த நபர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பதால் அவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டவரை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பாகச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிக்கை ஒன்றைச் சி.ஐ.டி. பணிப்பாளர் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நீதவான் பிள்ளையான் உட்பட 3 பேரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், லண்டனில் உள்ள 'பொலிஸ் பாய்ஸ்' என்பவருக்குத் திறந்த பிடியாணைப் பிறப்பித்துக் கட்டளையிட்டார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!