அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்ற 19ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டாவது நேரடித் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
குஜராத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 156 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 18 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டி சம்பியனானது.
ராசிக் சலாம், புவ்ணேஷ்வர் குமார், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், விராத் கோஹ்லியின் அபார துடுப்பாட்டம் என்பன றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சம்பியன் பட்டத்தை தக்க வைக்க உதவின.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு முதலாவது ஓவரை மிகவும் நிதானத்துடன் ஆரம்பித்து 5 ஓட்டங்களைப் பெற்றது.
ஆனால், அடுத்த இரண்டு ஓவர்களில் வெங்கடேஷ் ஐயர், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் குஜராத் பந்துவீச்சாளர்களை விரட்டி விரட்டி அடித்து 50 ஓட்டங்களைக் குவித்தனர்.
அவர்கள் இருவரும் 27 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.
எனினும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவின் முதல் இரண்டு விக்கெட்கள் ஒரு ஓட்ட வித்தியாசத்திலும் அடுத்த இரண்டு விக்கெட்கள் 2 ஓட்டங்கள் வித்தியாசத் திலும் வீழ்ந்தன.
வெங்கடேஷ் ஐயர் 32 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டம் இழந்தார். (62 - 1 விக்.)
அவரைத் தொடர்ந்து தேவ்டத் படிக்கல் (1), அணித் தலைவர் ரஜாத் பட்டிதார் (15), க்ருணல் பாண்டியா (1) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி ஆட்டம் இழந்தனர். (91 - 4 விக்.)
எனினும் விராத் கோஹ்லி, டிம் டேவிட் (24) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர் செய்து வெற்றியை அண்மிக்க உதவினர்.
விராத் கோஹ்லி நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 42 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 75 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஜிட்டேஷ் ஷர்மா ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ராஷித் கான் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட முன்னாள் சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் கடும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூசூரு அணியின் மிகவும் துல்லியமான பந்துவீச்சு, சிறப்பான களத்தடுப்பு என்பன குஜராத் டைட்டன்ஸ் அணியைக் கட்டுப்படுத்தின.
தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தர் மாத்திரம் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி குஜராத் டைட்டன்ஸ் அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார்.
அதிரடிக்கு பெயர் பெற்றவர்களும் இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிசிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியினருமான சாய் சுதர்சன் (12), அணித் தலைவர் ஷுப்மான் கில் (10) ஆகிய இருவரும் முறையே புவ்ணேஷ்வர் குமார், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகியோரின் பந்துவிச்சுகளில் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து நிஷாந்த் சிந்து (20), ஜொஸ் பட்லர் (19), அர்ஷாத் கான் (15), ராகுல் தேவாட்டியா (7), ஜேசன் ஹோல்டர் (7), ராஷித் கான் (7) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
வொஷிங்டன் சுந்தர் 5 பவுண்டறிகள் உட்பட 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். கெகிசோ ரபடா ஆட்டம் இழக்காமல் 3 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ராசிக் சலாம் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் புவ்ணேஷ்வர் குமார் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்
கடந்த 18 ஐபிஎல் சீசன்களில் சாம்பியன் பட்டங்கள் வென்ற அணிகளின் பட்டியல்.
- 2008 - ராஜஸ்தான் ராயல்ஸ்
- 2009 - டெக்கான் சார்ஜர்ஸ்
- 2010 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2011 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2012 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- 2013 - மும்பை இந்தியன்ஸ்
- 2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- 2015 - மும்பை இந்தியன்ஸ்
- 2016 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- 2017 - மும்பை இந்தியன்ஸ்
- 2018 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2019 - மும்பை இந்தியன்ஸ்
- 2020 - மும்பை இந்தியன்ஸ்
- 2021 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2022 - குஜராத் டைட்டன்ஸ்
- 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2024 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- 2025 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- 2026 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!