பயங்கரவாத தடைச் சட்டம் இப்போது ராஜபக் ஷ குடும்பத்தையும் துரத்தத் தொடங்கி விட்டது.
அது துரத்துகிறதோ இல்லையோ, அவர்கள் ஓடத் தொடங்கி விட்டார்கள்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்வதை தடுத்து உத்தரவு பிறப்பிக்க கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். அவர் கைது செய்யப்படக் கூடும் என தகவல்கள் பரவி வருகின்ற நிலையிலே, அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
ஆனால், அவரை கைது செய்யவுள்ளதாக கூறப்படுவதெல்லாம் வெறும் வதந்தி தான் என்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவு முறையான சாட்சியங்களின் அடிப்படையிலேயே ஒருவரைக் கைது செய்வதா என்பதை தீர்மானிக்கும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருக்கிறார்.
கோட்டாபாய ராஜபக் ஷ தனக்குத் தானே தொப்பியை போட்டுக் கொண்டு, நீதிமன்றத்தை நோக்கி ஓடியிருக்கிறாரோ தெரியவில்லை.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் சுரேஷ் சலே தான் என, அசாத் மௌலானாவின் சாட்சியத்தில் கூறப்பட்டுள்ளதாக, அண்மையில் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ்.
அவரைவிட சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகள் இருப்பதாக கருதப்படுகின்ற சூழலில், கோட்டாபய ராஜபக் ஷ தன்னைக் கைது செய்யக்கூடாது என உத்தரவிடக் கோரி, நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
இதற்கு முன்னர் இராணுவப் புலனாய்வு பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரி கேணல் கெலும் மத்துமகே மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோரும் இவ்வாறான மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வருண ஜயசுந்தரவின் ரிட் மனுவை நீதிமன்றம் விசாரித்த போது, அவரை கைது செய்யும் எந்த திட்டமும் இல்லை என சட்ட மா அதிபர் தரப்பு கூறியதை அடுத்து அந்த வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
கேணல் கெலும் மத்துமகேயின் மனு 22ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ளது.
அரசபலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட பின் னர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் நான்கு மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
அவரை வெளியே கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகள், பிரசாரங்கள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் உத்தரவு அவரை விடுவிக்க முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது.
அவர் ஆபத்தான நிலையில் உள்ளார், விரைவில் தற்கொலை செய்து கூடிய நிலையில் இருக்கிறார், உண்ணாவிரதம் இருப்பதால் அவரது உடல் சோர்ந்து கொண்டிருக்கிறது, விரைவில் உயிரிழந்து விடுவேன் என்பதால், கண்ணை தானம் செய்வதற்கும், சொத்துக்கள் தொடர்பான உயிலை எழுதி வைப்பதற்கும், சட்டத்தரணியை சந்திக்க கோரியிருக்கிறார் என்றெல்லாம் பிரசாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
இவை அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டம் மோசமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை தாண்டி, அவருக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் மேற்கொள்ளப்படுகிறது, யாரையோ இலக்கு வைத்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன என்பதையே மையப்படுத்தியிருந்தன.
சுரேஷ் சலேயை வாய் திறக்க வைப்பதன் மூலமாக, கோட்டாபய ராஜபக் ஷவை இந்த வழக்கில் சிக்க வைப்பதற்கு, அரச தரப்பு அல்லது குற்றப்புலனாய்வு பிரிவு முயற்சிப்பதாக ராஜபக் ஷவினர் நம்புகிறார்கள்.
அதன் உச்சக்கட்டமாகவே இப்போது கோட்டாபய ராஜபக் ஷ தன்னை கைது செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். ஏற்கெனவே அவர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தடை விதிக்கப்பட்ட பின்னர் தான், சுரேஷ் சலே விவகாரம் இன்னமும் தீவிரம் பெற்றது. இப்போது அடுத்த கட்டத்திற்கு சென்று, ராஜபக் ஷவினர் தங்களை நீதிமன்றத்தின் ஊடாக தற்காத்துக் கொள்ள முற்படுகிறார்கள்.
இது ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான விவகாரத்தில், இவர்களின் தொடர்புகள் குறித்த பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டால், தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், நீண்ட காலம் வெளியே வர முடியாத நிலை ஏற்படும். பிணையில் வெளிவர முடியாத சூழலும் உருவாகும் என்பது ராஜபக் ஷ வினருக்கு நன்றாகத் தெரியும்.
இந்த சட்டத்தை பயன்படுத்தி, பல நூறு பேரை அவர்கள் சிறைக்குள் அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள்.
கோட்டாபய ராஜபக் ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்திலும், ஜனாதிபதியாக இருந்த போதும், பெரும் எண்ணிக்கையான தமிழ் இளைஞர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கான, தடுப்பு காவல் உத்தரவில் கையெழுத்திட்டவர். அதே சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படக் கூடிய சூழல் உருவாகலாம் என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதனால் தான் அதிலிருந்து தப்பிப்பதற்கான எல்லா வழிகளையும் அவர்கள் நாடத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது, சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்று பிரசாரப்படுத்தப்படும் போக்கும் தீவிரமடைந்திருக்கிறது.
இதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அமைப்புகளையும் கூட அவர்கள் தங்களின் வசதிக்கேற்ப பயன்படுத்த முற்படுகிறார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டம் தவறான நோக்கில் பயன்படுத்தப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அந்தச் சட்டமே தவறானது என்னும் போது, அது எவ்வாறு சரியாக செயற்படுத்தப்படும்?
அதேவேளை, ராஜபக் ஷ முகாம் கூறுவது போல, சட்டத்தின் ஆட்சியும் இங்கு நடக்கவில்லை. சட்டம் சமத்துவமான முறையில் பயன்படுத்தப்படவும் இல்லை.
சுரேஷ் சலே பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற ஒரு சந்தேக நபர்.
அவர் குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, வழங்கப்பட்டிருந்த பல வசதிகள் ஏனையவர்களுக்கு கிடைத்திருக்கமாட்டா.
இதனை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளிப்படுத்தியிருக்கிறார்.
சுரேஷ் சலேயை தினமும் சந்திக்க, அவரது மனைவிக்கும் மகனுக்கும் மகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், தனது மனைவி தன்னை பார்வையிடுவதற்கு பல வாரங்கள் போராடியே அனுமதியை பெற முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேவேளை, தமிழ் இளைஞர்கள் வருடக்கணக்காக போராடி கூட, தமது உறவினர்களை சந்திக்க முடியாத நிலை இருந்தது.
எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய உறவினர்கள், பல ஆண்டுகள் அங்குமிங்குமாக அலைய நேரிட்டது.
அதேவேளை, சுரேஷ் சலேயை அவரது சட்டத்தரணி தினமும் சந்திப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என, குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு சுரேஷ் சலேயின் மனைவி கடிதம் அனுப்பியிருந்தார்.
தடுப்பிலுள்ள ஒருவரை சட்டத்தரணி தினமும் பார்வையிட வேண்டிய அவசியம் இல்லை, அதுவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற போது, வழக்குத் தொடர்பாக கலந்துரையாடும் தேவை இல்லை என்று அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.Travel Guides & Travelogues
கடந்த காலங்களில் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையும் கொழும்பு தேசிய மருத்துவமனையும் கூட, கைது செய்யப்பட்ட முக்கிய பிரமுகர்கள் வசதியாக தங்குவதற்கான இடங்களாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன.
தற்போதைய ஆட்சியிலும் கூட அந்த நிலை நீடிக்கிறதா?
சுரேஷ் சலே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், அவரை மனைவி தினமும் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறான அனுமதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையவர்களுக்கு கிடைத்திருக்கிறதா? நிச்சயமாக இல்லை.
அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாளோ, மாதத்தில் ஒரு நாளோ தான் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் என்பதற்காக அவருக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா?
அப்படியானால், பாரபட்சம் காட்டப்படுகிறது என்பது தெளிவாகிறது.
சட்டத்தின் ஆட்சியோ சமத்துவமான ஆட்சியோ நடத்தப்படவில்லை என்பது உறுதியாகிறது.
சுரேஷ் சலே ஒரு பயங்கரவாத செயல் ஒன்றுக்கு மூளையாக செயற்பட்டதாகவோ, அல்லது அதற்கு துணை போனதாகவோ குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்.
பயங்கரவாத செயல் ஒன்றை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களுக்கு இவ்வாறான வசதிகள் கிடைத்திருக்கவில்லை.
ஆனால் அரச புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்து கொண்டே, பயங்கரவாத செயல் ஒன்றுக்கு துணை போனதாக குற்றம்சாட்டப்படுகின்ற ஒருவருக்கு இவ்வாறான வாய்ப்புகள் கிடைக்கின்றன.
பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதத்தில் கூட, வேறுபட்ட கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
சுரேஷ் சலே தனது மடிக்கணினி மற்றும் ஐபோன் கடவுச் சொற்களை வழங்க மறுக்கும் நிலையில் அதனை வெளியிடக்கூடாது என்றும், விடுதலை புலிகள் தொடர்பான பல இரகசியத் தகவல்களை கொண்டிருக்கின்ற சுரேஷ் சலே அவற்றை வெளிப்படுத்தக் கூடாது எனவும் முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்து விட்டன.
இதற்கு பின்னரும் இரகசியமாக பேண வேண்டிய விடயங்கள் என்ன?
அப்படி இருக்கிறது என்றால், அதனை சுரேஷ் சலே தனித்துவமாக, தனது தனிப்பட்ட பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியம் இல்லை.
அவை அரச இரகசியங்களே தவிர, சுரேஷ் சலேயின் தனிப்பட்ட இரகசியங்கள் அல்ல.
தனிப்பட்ட இரகசியங்களாக பாதுகாக்க முற்படுகின்ற விடயங்களை சுரேஷ் சலே வெளிப்படுத்தக் கூடாது என ஒரு முன்னாள் படை அதிகாரி – முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார் என்றால் அதன் அர்த்தம் என்ன?
நாட்டின் பொலிஸ் கட்டமைப்பை அவர்கள் நம்பவில்லை. எந்த பொலிஸ் கட்டமைப்புக்கு அமைச்சராக இருந்தாரோ அவரே, அதனை நம்பாத நிலையில் இருக்கிறார்.
இது அந்த கட்டமைப்பின் தோல்வி இல்லையா?
சுபத்ரா
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!