news@ilakkiyainfo.com

பிரிவுகள்

புலி ஆதரவு பாடல்: ’அரசாங்கத்தின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது’

06 Jun, 2026

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் மட்டக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நேற்று (05) நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பாடகர் ஒருவர்  பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் சொல்லிசை (ராப்) பாடல் பாடினார் என கூறி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் திசைகாட்டி தேசிய மக்கள் சக்தி தரப்பினர் இதே போன்றதொரு பாடலை வெளியிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், திசைகாட்டியின் ஜனாதிபதி வேட்பாளர் மேடையில் ஏறி, பிரபாகரனைப் புகழ்ந்து பாடிய பாடலுக்குக் கைகளை அசைத்து நடனமாடியபோது அது அவர்களுக்குச் சரியாகத் தெரிந்ததாகவும், அதற்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாயவில்லை என்றும் சாடினார்.

ஆனால் ஒரு சாதாரண இளைஞன் அதனைச் செய்யும்போது மட்டும் சட்டம் பாய்வதாகவும், சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான பாடல்களை உருவாக்கிய, அதற்கு மேடைகளில் கைகளை அசைத்து ஆதரவு வழங்கிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது அரசியல் உள்நோக்கங்களை நிறைவேற்ற முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.

அதேநேரம் இந்தக் கூட்டத்தில் மாகாண சபை தேர்தலைச் சட்டப்பூர்வமாக நடத்துவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு, இதற்காக வேட்புமனுக்களைத் தயாரிப்பதற்கான பிரத்தியேகக் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கட்சியின் கீழ்மட்டக் கிளைகள் மற்றும் அமைப்புகளைப் பலப்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்குள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய சுயாதீனக் குழுக்களுடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்கவுக்கு அரசியல் குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும், கட்சியின் பிரதித் தலைவர் பதவிகளின் எண்ணிக்கை மூன்றில் இருந்து ஐந்தாக உயர்த்தப்பட்டு, குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்த இரண்டு புதிய பதவிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். (a)

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!