வித்யா கொலை வழக்கின் குற்றவாளிக்கு அரச செலவில் இறுதி சடங்கு: வெளியான புதிய தகவல்
யாழ்ப்பாண சிறைச்சாலையில் உயிரிழந்த வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 46 வயதான ஜெயக்குமார், யாழ்ப்பாண சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வடக்கு மக்களிடையே மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த கைதியின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோதும், குடும்பத்தின் பொருளாதார நிலைமையை காரணமாக காட்டி அவரது மனைவி இறுதி சடங்கை நடத்த முடியாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அரச செலவில் இறுதி சடங்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அரச செலவில் இறுதி கிரியைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சடலம் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உடற்கூறு பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, செய்தி சேகரிக்க முயன்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், சில காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பின்னர் வைத்தியசாலை அதிகாரி ஒருவர், செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு எந்தவித தடையும் இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!