;மேற்கு ஆசியாவில் போர் சூழல் நிலவும் நேரத்தில், சீனாவுக்கு சென்றுவந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ‘நண்பர்’ என்றும், ‘பெரும் தலைவர்’ என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை அழைத்தார் ட்ரம்ப். ஆனால், அங்கிருந்து அவர் வெறுங்கையுடனே அமெரிக்காவுக்குத் திரும்பியிருக்கிறார்.
மே 14, 15 ஆகிய நாட்களில் டொனால்டு ட்ரம்ப் மேற்கொண்ட சீனப் பயணத்தில், ஒன்றிரண்டு உறுதியான உடன்படிக்கைகள் தவிர, வேறு பெரிய ஒப்பந்தங்கள் இல்லாதது, அவரது தனிப்பட்ட குணாதிசயத்தை மையமாகக் கொண்ட வெளிநாட்டு கொள்கையின் அபாயங்களைக் காட்டுகிறது.
தனது வசீகரம், தனிப்பட்ட சினேகம் ஆகியவற்றின் மூலம் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையே அந்த வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படை என்று சொல்லலாம்
.சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக ரகசியமான, பலத்த பாதுகாப்புகள் கொண்ட தலைமை வளாகமான ஜோங்நான்ஹாயில் இரண்டாம் நாளை ட்ரம்ப் கழித்தார்.
தன்னை ‘மார் எ லகோ’விற்கு அழைத்து ட்ரம்ப் விருந்தோம்பியதற்கு ஈடாக, இங்கு அவரை அழைத்து வந்ததாக ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
சீனாவின் அதிகார மையமாக விளங்கும் ஜோங்நான்ஹாய், சில நேரத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையுடன், அல்லது ரஷ்யாவின் கிரெம்லினுடன் ஒப்பிடப்படுகிறது.
நூற்றாண்டுகள் பழைமையான சிவப்பு சுவர், தலைநகரின் மற்ற பகுதிகளிலிருந்து இந்த இடத்தைப் பிரிக்கிறது; அந்தச் சுவருக்குள் நுழைந்த அமெரிக்கத் தலைவர்கள் மிகச் சிலரே.
இதற்கு முன்னர் இந்த சிறப்பைப் பெற்றவர்கள் ரிச்சர்ட் நிக்சன், ஜார்ஜ் வி புஷ் மற்றும் பராக் ஒபாமா. அங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கடுமையானவை. உயர்மட்ட கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்குப் பொறுப்பான சிறப்பு ராணுவப் பிரிவு இந்த இடத்தைக் கண்காணிக்கிறது.
இந்த வளாகத்தின் படங்கள் எண்மின் (டிஜிட்டல்) வரைபட தளங்களில் வராதவாறு கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
ஷி ஜின்பிங் உறவு, ட்ரம்ப்பின் முதல் பதவிக் காலத்திலிருந்து ஏற்றத் தாழ்வுகளைக் கண்டுள்ளது. அவர்களுக்கு இடையில் நிகழும் ஒவ்வொரு தொடர்பிலும் ஏதோ ஓர் ஆச்சரியம் இருக்கும்.
ட்ரம்ப், ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் முதன்முதலில் 2017-ம் ஆண்டு ட்ரம்ப்பின் மார் எ லகோ இல்லத்தில் சந்தித்தனர்.
அப்போது ட்ரம்ப், ராணுவ மரியாதை அணிவகுப்பு, தடபுடல் விருந்து என்று ஷியை அசத்தினார்.
அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, பீஜிங்கில் மிக ஆடம்பரமான அரசு முறை வரவேற்பை ஏற்பாடு செய்து, ட்ரம்ப்புக்கு ஒரு சிறப்பான விருந்தை ஷி அளித்தார்.

(Forbidden City)
அரசு முறை விஜயத்திற்கும் கூடுதலாக (state visit-plus) என அழைக்கப்பட்ட அந்த விஜயத்தில், ட்ரம்ப் தடைசெய்யப்பட்ட நகரத்தை (Forbidden City) பார்வையிட்டார்.
இது சீன அரசின் பெருமையையும், வரலாற்றுத் தொடர்ச்சியையும் குறிக்கும் ஓர் அடையாளச் செயல்.
அத்தருணம், சீன அதிகாரிகள் தனிப்பட்ட ஓபரா (opera) நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்து, நெருக்கமும், பெருமையும் காட்டும் முயற்சியாக ட்ரம்ப்பை, ஷி அருகில் அமர வைத்தனர்.
அந்தப் பயணத்தின்போது, வர்த்தகத்தில் அமெரிக்காவைப் பயன்படுத்திக்கொண்டதற்காகச் சீனாவுக்கு ‘மிகுந்த பாராட்டு’ அளிப்பதாக ட்ரம்ப் கூறினார்.
தான் சீனாவைக் குற்றம் சொல்லவில்லை என்று கூறியவர், ‘ஒரு நாடு தனது மக்களின் நலனுக்காக மற்றொரு நாட்டைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால், அதை யார் குற்றம் சொல்ல முடியும்?’ என்று பேசி, தான் ஒரு நடைமுறைவாதி (pragmatist) என்று காட்டிக்கொண்டார்.
எனினும், ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, சீனாவுக்கு எதிராகக் கடுமையான பொருளாதார கொள்கைகளை முன்னெடுத்து, உலகின் இரு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே பதற்றத்தை மீண்டும் தூண்டினார்.
பதவியேற்ற சில மாதங்களுக்குள், பல நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு புதிய கட்டண வரிகளை அவர் விதித்தார்.
அதில் சீனா மிகவும் பாதிக்கப்பட்டது. கடுமையான வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்ட போதிலும், இரு அரசுகளும் இறுதியில் பேச்சுவார்த்தைக்குத் திரும்பின.
கடந்த ஆண்டு, செப்டம்பர் 3-ம் தேதி, ரஷ்யா, வட கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களை சீன ராணுவ அணிவகுப்புக்கு ஷி ஜின்பிங் அழைத்தார்.
அதன் மூலம், அமெரிக்காவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்துவதாக அவர் உணர்த்தினார். அப்போது, ‘நீங்கள் [இணைந்து] அமெரிக்காவுக்கு எதிராகத் திட்டமிடும்போது - விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு என் அன்பான வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்’ என்று தனது சமூக வலைதளத்தில் ட்ரம்ப் எழுதினார்
.அந்த அணிவகுப்பை ‘அழகானது’, ‘மிகவும் கவர்ச்சியானது’ என்று ட்ரம்ப் கேலியாகப் பாராட்டினார். ‘அவர்கள் ஏன் அதைச் செய்தார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன்;
அவர்கள் நான் பார்க்கிறேனா என்று எதிர்பார்த்தார்கள் — நான் பார்த்தேன்’ என்று அவர் கூறினார். இத்தகைய பின்னணியிலேயே ட்ரம்ப்பின் இந்த சீனப் பயணம் நிகழ்ந்திருக்கிறது.
இந்தப் பயணத்தின்போது, அமெரிக்க அதிபர்கள் சவூதி அரசருடன் நடந்துகொள்வது போலவே - ஏறக்குறைய ட்ரம்ப், ஷி ஜின்பிங்குடன் நடந்துகொண்டார்.
சவூதிகளோடு உடல் மொழியால் அமெரிக்க அதிபர்கள் தங்கள் மரியாதையைக் காட்டுவதைப் பார்க்கலாம். இங்கோ, ட்ரம்ப் ஷியை வானளாவப் புகழ்ந்தார். ‘நன்பர்’ என்றார். ‘பெரும் தலைவர்’ என்றும் அழைத்தார்.
ஆனாலும், சீனாவிலிருந்து பெரிய வெற்றி ஏதுமின்றி ட்ரம்ப் நாடு திரும்பினார். ஹோர்முஸ் நீரிணை திறப்புக்கு எந்த வழியும் பிறக்கவில்லை.
சீனர்கள் ஈரான் மீது சாய்ந்தால் இது சாத்தியம்.
ஆனால், நீரிணை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்குத் திறந்திருக்க வேண்டும் என்ற ஒரு பொத்தாம் பொதுவான அறிக்கையைத் தந்துவிட்டு கையை கட்டிக்கொண்டனர் சீனர்கள்.
இது போதாது என்று தைவானை ஒழுங்காகக் கையாளாவிட்டால், மோதலுக்கு வழிவகுக்கும் என்று ஷி ஜின்பிங் அச்சுறுத்தினார்.
துசிடிடிஸ் பொறியைத் தவிர்க்க வேண்டும் என்றார். 'ஏதென்ஸ் ஜெனரல் துசிடிடிஸ் வளர்ந்து வந்த ஸ்பார்ட்டாவை கண்டு வல்லரசான ஏதென்ஸ் அஞ்சியதால் ஏற்பட்டதே பெலோபொனேசியன் போர்' என்றவர்...
'அந்தப் போர் இருபத்தி ஏழு ஆண்டுகள் நடந்தது. இங்கு ஏதென்ஸுக்கு பதில் அமெரிக்கா என்று வாசிக்கவும்; ஸ்பார்ட்டாதான் சீனா. தேய்ந்து வரும் அமெரிக்கா' என்று வேறு அமெரிக்காவை ஏளனம் செய்தார் ஷி. அதை தனக்கு முந்தைய பைடன் காலத்தை ஷி சொல்வதாக விளக்கப்படுத்திக்கொண்டு ட்ரம்ப் சமாளித்தார்.
<எலான் மஸ்க், ஜென்சென் ஹுவாங், டிம் குக் போன்ற உலகின் பெரும் வர்த்தக தலைவர்கள் முப்பது பேரை ட்ரம்ப் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
மஸ்க் இறங்கிய பின்னரே, பீட் ஹெக்ஸ்த், மார்கோ ரூபியோ, ஜேமிசன் கிறீர் போன்றவர்கள் விமானத்தை விட்டு இறங்கினர்.
இது வர்த்தகத்தை முன்னிறுத்திய விஜயம் என்று காட்டியது. எனினும், முன்னரே சொன்னதுபோல, இந்தப் பயணத்தில் ஒன்றிரண்டு உறுதியான உடன்படிக்கைகள் தவிர வேறு பெரிய ஒப்பந்தங்கள் எதுவும் ஏற்படவில்லை.
ட்ரம்ப் தனது நாட்டின் மூலோபாய (strategic) இலக்குகளை முன்னேற்றுவதில் கவனம் செலுத்திய சீன தலைவருடன் தனிப்பட்ட உறவை உருவாக்க முயன்றார்.
பீஜிங்கில் நடந்த விருந்தில், ட்ரம்ப், ஷியை ‘என் நண்பர்’ என்று புகழ்ந்தார்; வெள்ளிக்கிழமை கூட, ‘நாம் உண்மையில் நண்பர்களாகிவிட்டோம்‘ என்றார்
.சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர், ‘ஷி ட்ரம்ப்பை நண்பராக கருதுகிறாரா?” என்ற கேள்விக்கு, “இரு தரப்பும் முக்கிய பிரச்னைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்‘ என்று சீனாவுக்கே உரித்தான உப்புசப்பற்ற வழக்கமான பதிலை அளித்தார்.
போயிங் விமானங்களையும், அமெரிக்க சோயாவையும் சீனா வாங்குவதற்கான ஒப்புதல் இந்தப் பயணத்தில் எட்டப்பட்டதாகத் தெரிகிறது.
பென்டனில் (Fentanyl) தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருட்களைக் கட்டுப்படுத்துவது போன்றவையும் குறிப்பிடப்பட்டன.
நிவிடியா சில்லுகளை சீனா வாங்குமா, அல்லது மஸ்க்கின் மின் கார்களுக்கு அது தனது சந்தையை விரிவாக்குமா என்பதெல்லாம் தெரியவில்லை. .
பொதுவாக, அமெரிக்க வர்த்தகத்திற்கு இன்னும் விரிவாகத் தனது கதவுகளை சீனா திறக்கும் என்று மட்டும் ஷி உறுதியளித்தார்.
இது எந்த அளவுக்கு உண்மையாகும் என்பதைக் காலம்தான் சொல்லும். கடந்த வெள்ளிக்கிழமை பீஜிங்கை விட்டுப் புறப்பட்ட ட்ரம்ப், வழக்கப்படி ஏதோ பெரிய சாதனையை நிகழ்த்தியது போல் பேசினார்.
ஆனாலும், ஷி ஜின்பிங்குடன் நடைபெற்ற இரண்டு நாள் உச்சி மாநாட்டுக்குப் பிறகு அமெரிக்கா விரும்பிய எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை.
இப்படியான நிலையில்தான், ட்ரம்ப் அமெரிக்காவுக்குத் திரும்பினார். பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டதும், ஈரான் போரிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதில் ஏற்பட்ட சிக்கல்களால் தாமதிக்கப்பட்டதும் ஆன இந்த சந்திப்பு, மத்திய கிழக்கு, வர்த்தகம், தைவான், அணு ஆயுதப் பரவல், செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கியப் பிரச்னைகளில் எந்தப் பெரிய முன்னேற்றமும் இல்லாமல் முடிந்தது
ஷியும் ஈரான் அணு சக்தியாக மாறுவதை விரும்பவில்லை என்றார் ட்ரம்ப். ஆனால், இது பற்றி ஷி எதுவும் வாய்திறக்கவில்லை.
இந்த உச்சி மாநாட்டைப் பெரிய வெற்றியாக ட்ரம்ப் கூறினாலும், அந்த உணர்வு இரு தரப்பிலும் சமமாக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஷியின் அளவான பேச்சும், முக்கிய உடன்படிக்கைகள் பற்றிப் பேசாமையும் இதற்குச் சான்று. உலகப் பிரச்னைகளை தனது கவர்ச்சி, தனிப்பட்ட நட்பால் தீர்க்க முடியும் என்ற டரம்ப்பின் நம்பிக்கை, இங்குச் சோதனைக்கு உட்பட்டது.
இந்த சந்திப்பு, அமெரிக்க-சீனா உறவை நிலைப்படுத்தும் ஒரு தொடக்கமாகப் பின்னர் பார்க்கப்படலாம். ஆனால், ட்ரம்ப் கூறிய சாதனைகளில் பலவற்றை சீனா உறுதிப்படுத்தவில்லை.
அதே நேரத்தில், தைவான் தொடர்பாக ஷி சீனாவின் கடுமையான நிலைப்பாட்டைக் காட்டினார்.
தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட தொடர்பு மிகவும் முக்கியமானது. ட்ரம்ப்புக்கு முன்னர் பில் கிளின்டன் ஜியாங் ஜெமினுடன் நல்ல உறவை உருவாக்கப் பெருமுயற்சி எடுத்தார்.
ஆனால், ட்ரம்ப் ஷி மீது கொட்டிய அதிகப்படியான பாராட்டு வேறுபட்டதாக இருந்தது. அளவுக்கு மீறி ஷியை ட்ரம்ப் புகழ்ந்தார். எனினும், ஷி அசைந்து கொடுக்கவில்லை. வெறும் புகழ்ச்சிக்கு மயங்க, தான் ஒன்றும் ட்ரம்ப் அல்ல என்று ஷி மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!