news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஹமாஸுடன் ரகசியப் பேச்சு, நெதன்யாகுவுடன் நேருக்கு நேர் - காசாவைச் சுற்றி ட்ரம்ப் ஆடும் புதிய ஆட்டம்!"

25 Aug, 2026
காசா போரின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கியமான ராஜதந்திர நகர்வு நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மருமகனும், அவருடைய நெருங்கிய ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர், எகிப்தில் ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யா தலைமையிலான குழுவைச் சந்தித்திருக்கிறார். 

அதற்கு மறுநாளே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்து நீண்ட பேச்சுவார்த்தையும் ஜாரெட் குஷ்னர் நடத்தியிருக்கிறார்

ஒருபுறம் ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும்; மறுபுறம் அதற்கு இணையாக இஸ்ரேல் காசாவிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும். 

இந்த இரு நிபந்தனைகளுக்கும் இடையில்தான் ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டத்தின் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது.

அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸுடன் அமெரிக்க அரசின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவது சில ஆண்டுகளுக்கு முன்புவரை நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. 

ஆனால், 2023 அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு உருவான போர், பிணைக் கைதிகள் விவகாரம், காசாவின் மனிதாபிமான நெருக்கடி ஆகியவை அந்த அரசியல் தடையை மெல்ல உடைத்தன.

ட்ரம்ப் நிர்வாகம், ஹமாஸை வெறுமனே ராணுவ ரீதியாக அழிப்பதற்குப் பதிலாக, அதன் ஆயுதங்களை அகற்றி, காசாவின் நிர்வாகத்திலிருந்து அதை விலக்கி, புதிய பாலஸ்தீனிய குடிமை நிர்வாகத்தை உருவாக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

ஆகஸ்ட் 16-ம் தேதி எகிப்தில் நடைபெற்ற குஷ்னர்–ஹமாஸ் சந்திப்பு இந்தப் புதிய அணுகுமுறையின் முக்கியமான வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. 

காசா போர்நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்த எகிப்து, கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த முயற்சியில் இடம்பெற்றனர்.

கலீல் அல்-ஹய்யா


ஹமாஸ் தரப்பில் அதன் அரசியல் தலைவர் கலீல் அல்-ஹய்யா பங்கேற்றார்..இந்தச் சந்திப்பில் ஹமாஸின் ஆயுதக் களைவு, இஸ்ரேலியப் படைகளின் படிப்படியான வெளியேற்றம், காசாவுக்கான மனிதாபிமான உதவிகள், எதிர்கால நிர்வாகம் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

ஆனால், சந்திப்புக்குப் பிறகு இரு தரப்பும் விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை..இருந்தபோதிலும், குஷ்னரின் கருத்துகள் இந்தப் பேச்சுவார்த்தையின் தன்மையை ஓரளவு வெளிப்படுத்தின. 

ஹமாஸ் தாங்கள் கூற வேண்டிய அனைத்தையும் கூறியதாகவும், இத்தனை கொடூரங்களைச் செய்த ஓர் அமைப்பை நம்புவது கடினம் என்றாலும், அது செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது வெறும் பேச்சுவார்த்தை அல்ல; ட்ரம்ப்பின் காசா திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சி. ட்ரம்ப்பின் திட்டத்தின் மையக் கருத்து எளிமையானது போலத் தோன்றினாலும், நடைமுறையில் மிகவும் சிக்கலானது. 

ஹமாஸ், பிற ஆயுதக் குழுக்கள் தங்களிடம் உள்ள கனரக, இலகுரக ஆயுதங்களைக் கைவிட வேண்டும்

ராக்கெட்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அகற்றப்பட வேண்டும். ஆயுத உற்பத்தித் தளங்கள், சுரங்கப்பாதைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட வேண்டும். தனிநபர், காவல் துறை ஆயுதங்கள் பதிவு செய்யப்பட்டு, சர்வதேச கண்காணிப்பின் கீழ் புதிய பாலஸ்தீனிய பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இதனுடன் இணையாக, காசாவில் ஒரு புதிய பாலஸ்தீனிய குடிமை நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட பாலஸ்தீனிய தேசியக் குழு அடிப்படை நிர்வாகப் பொறுப்புகளை ஏற்க வேண்டும். 

புதிய பாலஸ்தீனிய காவல் படை உருவாக்கப்பட வேண்டும்.. சர்வதேச உறுதிப்படுத்தல் படை பாதுகாப்பு, காவல் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக காசாவிலிருந்து வெளியேற வேண்டும். 

அதன் பிறகே காசாவின் மறுசீரமைப்பு வேகமாக நடைபெற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் பரந்த நோக்கம்.. ஆனால், இங்கேதான் மிகப்பெரிய முட்டுக்கட்டை உருவாகிறது. ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடுவதற்கு முன்பு இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதற்கான உறுதியான காலக்கெடு வேண்டும் என்று விரும்புகிறது. 

இஸ்ரேலோ, ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களைக் கைவிடும் வரை தாங்கள் வெளியேற முடியாது என்று கூறுகிறது..அதாவது, ஹமாஸ் தரப்பின் கேள்வி, “முதலில் இஸ்ரேல் வெளியேறுமா?” என்பதாக இருக்கிறது. 


israeli army


இஸ்ரேலின் கேள்வி, “ உண்மையில் ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடுமா?” என்பதாக இருக்கிறது. காசா அமைதியின் மிகப்பெரிய முடிச்சு இந்த இரண்டு கேள்விகளுக்கிடையே சிக்கியுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நிலைப்பாடு இதை மேலும் கடினமாக்குகிறது. ஹமாஸ் தன்னிடம் உள்ள கனரக, இலகுரக ஆயுதங்கள் அனைத்தையும் முழுமையாகக் கைவிடும் வரை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் காசாவிலிருந்து வெளியேறாது என்று அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். 

“உண்மையான ஆயுதக் களைவு” மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்; பெயரளவிலான அல்லது போலியான ஆயுதக் களைவை இஸ்ரேல் ஏற்காது என்பதும் அவரது வாதம்

.இந்தக் கடுமையான நிலைப்பாட்டுக்குப் பின்னால் பாதுகாப்பு அச்சம் மட்டுமல்ல, உள்நாட்டு அரசியலும் இருக்கிறது. 2023 அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய சமூகத்தில் ஹமாஸ் மீதான நம்பிக்கையின்மை உச்சத்தில் இருக்கிறது. 

ஹமாஸ் மீண்டும் ஆயுதங்களைச் சேகரித்துத் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை எந்த வகையிலும் அனுமதித்துவிடக் கூடாது என்பது இஸ்ரேலிய அரசியலின் முக்கியமான கருத்தாக மாறியுள்ளது.

அதே நேரத்தில், நேதன்யாகுவின் கூட்டணியில் காசா விவகாரத்தில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை வலியுறுத்தும் வலதுசாரி சக்திகளும் உள்ளன. எனவே, ட்ரம்ப்பின் திட்டத்தை ஏற்றுக்கொள்வதில் நேதன்யாகுவுக்கு வெளிநாட்டு ராஜதந்திர அழுத்தம் மட்டுமல்ல, உள்நாட்டு அரசியல் கணக்கும் உள்ளது..


இதனால்தான் ஹமாஸைச் சந்தித்த மறுநாளே குஷ்னர் இஸ்ரேலுக்குச் சென்று நேதன்யாகுவைச் சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது. கெய்ரோவில் ஹமாஸின் கருத்துகளைக் கேட்ட குஷ்னர், அடுத்த நாளே அவற்றை இஸ்ரேலிய பிரதமரிடம் எடுத்துச் சென்றிருக்கிறார்.


இரு தரப்பினருக்கும் இடையே இருக்கும் நம்பிக்கையின்மையைக் குறைத்து, ஒவ்வொரு தரப்பும் மற்றொரு தரப்பிடமிருந்து எதிர்பார்க்கும் உத்தரவாதங்களை ஒரு நடைமுறை வடிவத்துக்குக் கொண்டுவருவதே குஷ்னரின் முயற்சியாகத் தெரிகிறது.


நேதன்யாகுவுடனான சந்திப்பு “மிகச் சிறந்த சந்திப்பு” என்று குஷ்னர் வர்ணித்துள்ளார். ஹமாஸின் சில ஆயுதங்களை அகற்றும் பணியில் 30 நாட்களுக்குள் முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ஆனால் அதே நேரத்தில், இரு தரப்பினரின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம் என்பதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதன் மூலம், அமெரிக்கா இப்போது ஒருதலைபட்சமாக எந்த ஒரு தரப்புக்கும் அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, ஹமாஸ், இஸ்ரேல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் நகர்த்த முயற்சிப்பது தெரிகிறது.


.
இந்தத் திட்டத்தில் “நம்பிக்கை” என்பதற்குப் பதிலாக “சரிபார்ப்பு” முக்கியமானதாக இருக்கிறது என்பதையும் ம்லாடெனோவ் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டதாகக் கூறுவது மட்டும் போதாது; ஆயுதங்கள் உண்மையில் அகற்றப்பட்டனவா, சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டனவா, ஆயுத உற்பத்தித் தளங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டனவா என்பதெல்லாம் சர்வதேச கண்காணிப்பின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும்.
.

அந்தச் சரிபார்ப்பின் அடிப்படையில்தான் இஸ்ரேலியப் படைகளின் அடுத்த கட்ட வெளியேற்றம் நடைபெற வேண்டும் என்பதே இந்த அணுகுமுறை.



ஹமாஸின் நிலையும் முன்பு போல இல்லை. நீண்டகாலப் போர் காசாவின் கட்டமைப்பைச் சிதைத்திருக்கிறது. மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமாகியுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவ வசதி, தங்குமிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் போராடும் சூழலில், போரைத் தொடர்ந்து நடத்துவது ஹமாஸுக்கும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

.

இதனால், தனது ஆயுதங்களை நேரடியாக இஸ்ரேலிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, அவற்றை ஒரு பாலஸ்தீனிய தேசிய அமைப்பின் கண்காணிப்பில் வைக்கும் இடைநிலை ஏற்பாட்டை ஏற்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.


ஆனால், அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு இணையாக காசாவின் தரையில் நடக்கும் நிலைமை வேறொரு உண்மையைச் சொல்கிறது. இரண்டு ஆண்டுகளாகப் போர் நீடிக்கும் நிலையில், பெரும்பாலான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், குடிநீர், மின்சார கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றுவது முதல் மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவது வரை காசாவின் மறுசீரமைப்பு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

.

அதனால், காசாவுக்கான அமைதி என்பது வெறும் “ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடுகிறதா, இல்லையா?” என்ற கேள்வியில் முடிந்துவிடப் போவதில்லை. ஆயுதக் களைவு நடந்த பிறகு யார் காசாவை ஆட்சி செய்வார்கள்? பாலஸ்தீனிய மக்களுக்கு என்ன அரசியல் எதிர்காலம் கிடைக்கும்? இஸ்ரேலின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது? காசாவின் எல்லைகள், பாதுகாப்பு, மறுசீரமைப்பை யார் நிர்வகிப்பார்கள்? கோடிக்கணக்கான டன் இடிபாடுகளை அகற்றி, மக்களை மீண்டும் வாழ வைக்கத் தேவையான நிதியை யார் வழங்குவார்கள்? என்பனவும் அதே அளவு முக்கியமான கேள்விகளாக இருக்கின்றன.



இறுதியில், குஷ்னரின் கெய்ரோ சந்திப்பை காசா அமைதியின் தொடக்கம் என்று உடனடியாகக் கூற முடியாது. அதேபோல், இது வெறும் இன்னொரு பேச்சுவார்த்தை என்றும் புறக்கணிக்க முடியாது. ஹமாஸுடன் பேசிய குஷ்னர், மறுநாளே நெதன்யாகுவுடன் பேசியிருப்பது, ட்ரம்ப் நிர்வாகம் இரு தரப்பையும் ஒரே அமைதித் திட்டத்துக்குள் கொண்டுவரத் தீவிரமாக முயற்சி செய்கிறது என்பதற்கான அறிகுறி.

.

ஆனால், இந்த முயற்சியின் வெற்றி, வாஷிங்டனில் வெளியிடப்படும் அறிக்கைகளாலோ, கெய்ரோவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளாலோ மட்டும் தீர்மானிக்கப்படாது. காசாவின் தரையில் அது சோதிக்கப்பட வேண்டும். ஹமாஸ் உண்மையில் ஆயுதங்களைக் கைவிடுகிறதா? 


இஸ்ரேல் உண்மையில் தனது படைகளைப் பின்வாங்குகிறதா? சர்வதேச அமைப்புகள் இந்த இரு தரப்பினரின் வாக்குறுதிகளையும் நம்பகமாகச் சரிபார்க்கின்றனவா? அதற்குப் பிறகு காசா மக்களுக்குப் பாதுகாப்பு, உணவு, வீடு, மருத்துவம், அரசியல் எதிர்காலம் கிடைக்கின்றனவா?



இந்தக் கேள்விகளுக்கான பதில்களில்தான் ட்ரம்ப்பின் காசா திட்டத்தின் எதிர்காலம் இருக்கிறது. குஷ்னர் இப்போது திறந்திருக்கும் கதவைத் தக்கவைக்க முடிந்தால், பல ஆண்டுகளாக முடியாமல் போன ஓர் அரசியல் தீர்வுக்கான பாதை உருவாகலாம். ஆனால், ஹமாஸின் ஆயுதங்களுக்கும், இஸ்ரேலின் பாதுகாப்புக் கவலைகளுக்கும் இடையிலான சமநிலையை உருவாக்க முடியாவிட்டால், இந்த முயற்சியும் முந்தைய அமைதி முயற்சிகளைப் போலவே போரின் அடுத்த இடைவெளியாக மட்டுமே முடிந்துவிடும். 

.
காசாவுக்கு இப்போது தேவைப்படுவது இன்னொரு தற்காலிகப் போர்நிறுத்தம் அல்ல; மீண்டும் போர் தொடங்காத அளவுக்கு உறுதியான, சரிபார்க்கக்கூடிய, பாலஸ்தீனிய மக்களின் எதிர்காலத்தையும் உள்ளடக்கிய ஒரு நிரந்தர அமைதி!

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!