என்ன அழகான திட்டம்! இஸ்ரேல் ராணுவம், வர்த்தகம், பொருளாதாரம் ஆகிய அம்சங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் ஒரு நிழல் சக்தியாக அமெரிக்கா ஆகிப்போனது.(நிலமெல்லாம் ரத்தம் - 68)
20 Nov, 2026
முதல்வராக, மார்ச் 6-ம் தேதி பதவியேற்றார் அண்ணா. இரா.நெடுஞ்செழியன் (கல்வி), கே.ஏ.மதியழகன் (உணவு), மு.கருணாநிதி (பொதுப்பணி), சத்தியவாணிமுத்து (பட்டியல் சமூக நலன்), செ.மாதவன் (சட்டம்), சாதிக்பாட்சா (சுகாதாரம்), ஏ.கோவிந்தசாமி (வேளாண்மை), பாவலர் முத்துசாமி (உள்ளாட்சி) ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இந்தியா விலேயே இளம் அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையாக அது விளங்கியது.
கேரளாவில் சி.பி.எம் தலைமையிலான ஐக்கிய முன்னணி வெற்றிபெற்றிருந்தது. முதல்வராக அண்ணா பதவியேற்ற அதேநாளில், கேரள முதல்வராக இ.எம்.எஸ் பதவியேற்றார்.
ஒரிசாவில், காங்கிரஸை சுதந்திரா கட்சி தோற்கடித்தது. அங்கு ராஜேந்திர நாராயண் சிங் தியோ முதல்வராகப் பதவியேற்றார்.
‘தேனிலவு முடிந்தது..!’
தமிழகச் சட்டமன்றத்துக்கு, சபாநாயகர் தேர்வுசெய்யப்பட வேண்டும். ம.பொ.சிவஞானத்தின் பெயரை ராஜாஜி பரிந்துரைத்தார். அதில் அண்ணாவுக்கு விருப்பமில்லை.
அண்ணாவின் தேர்வாக சி.பா.ஆதித்தனார் இருந்தார். இதனால் வருத்தமடைந்த ராஜாஜி, ‘தேனிலவு முடிந்துவிட்டது’ என்றார். அதற்கு, ‘ஆமாம். எங்கள் இருவருக்குமான தேனிலவு முடிந்துவிட்டது. நாங்கள் குடும்பம் நடத்தத் தொடங்கிவிட்டோம்’ என்று பதில் சொன்னார் அண்ணா.
தி.மு.க-வின் திட்டங்களும் விருப்பங்களும் செயலுக்கு வரத் தொடங்கின. புனித ஜார்ஜ் கோட்டையில் ‘தமிழக அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப் பலகையை முதல்வர் அண்ணா திறந்துவைத்தார்.
தமிழக அரசின் கோபுரச் சின்னத்தில் ‘கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்று இருந்ததை ‘தமிழக அரசு’ என்றும், ‘சத்யமேவ ஜெயதே’ என்பதை, ‘வாய்மையே வெல்லும்’ என்றும் மாற்றினார்கள்.
சென்னை மாகாணம்’ என்ற பெயரை, ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான மசோதா 1968-ம் ஆண்டு, ஜூலை 18-ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே கற்றுக் கொடுக்கப்படும்... இந்தி கற்றுத்தரப்பட மாட்டாது’ என்ற தீர்மானம், 1968-ம் ஆண்டு, ஜனவரி 23-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
வடமொழி மந்திரங்கள் இல்லாமல், புரோகிதர்கள் இல்லாமல், பெரியவர்களின் வாழ்த்துகளோடு நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டது.
தனியார் வசம் இருந்த பேருந்து சேவைகள், அரசுடைமை ஆக்கப்பட்டன.
அரிசித் திட்டத்தில் சிக்கல்!
அண்ணா அரசு மேற்கொண்ட நடவடிக்கை களைப் பல தரப்பினரும் வரவேற்றனர். ஆனால், தொடர்ந்து அவர் முன்வைத்து வந்த ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்... ஒரு படி அரிசி நிச்சயம்...’ என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது.
அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால், நிறைய செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால், ‘லட்சியத்தை’ நிறைவேற்ற முடியாமல், ‘நிச்சயத்தை’ மட்டுமே செயல்படுத்த முடிந்தது.
இந்தத் திட்டம், சென்னையிலும் கோவையிலும் தொடங்கப்பட்டது. அதுவும், 32 லட்சம் பேருக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டது. இது, மொத்த மக்கள்தொகையில் வெறும் ஏழு சதவிகிதம்தான்.
தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் அதை விரிவுபடுத்த முடியவில்லை. நிதி நெருக்கடி ஒருபுறம் இருந்தாலும், மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லை.
படி அரிசித் திட்டத்துக்கு மானியத்தை அதிகரிக்குமாறு மாநில அரசு கோரியும், அதை மத்திய அரசு ஏற்கவில்லை. மத்தியத் தொகுப்பி லிருந்து அரிசி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் மத்திய காங்கிரஸ் அரசு மறுத்துவிட்டது.
கீழ்வெண்மணி கொடூரம்!
அண்ணா ஆட்சியில் தேசத்தையே உலுக்கிய ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், பண்ணை அடிமை முறை இருந்தது. விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருந்த பட்டியலின மக்களை சாணிப்பால் குடிக்கவைப்பது, சவுக்கால் அடிப்பது என்ற கொடுமை நீடித்தது.
அங்கு சாதி ஆதிக்கத்துக்கும், பண்ணையடிமை முறைக்கும் எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயிகள் சங்கமும் போராடின. கூலி உயர்வு கேட்டார்கள் என்பதற்காக, கீழ்வெண்மணி கிராமத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேரை உயிருடன் தீவைத்துக் கொளுத்தியது பண்ணையார் கும்பல்.
1968-ம் ஆண்டு, டிசம்பர் 25-ம் தேதி நிகழ்ந்த அந்தச் சம்பவம், தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட முதல்வர் அண்ணா கண்ணீர் சிந்தினார். மு.கருணாநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் கீழ்வெண்மணிக்கு விரைந்தனர்.
அந்தக் கொடூர நிகழ்வை, அன்றைய தி.மு.க அரசு கையாண்டவிதம், கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
திருப்பங்களும் குழப்பங்களும்!
1968-ம் ஆண்டு, அண்ணாவின் 60-வது பிறந்த நாளை, மணிவிழாவாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்றன. அந்தச் சமயத்தில், உணவு சாப்பிடும்போது அண்ணாவுக்குத் தொண்டையில் வலி ஏற்பட்டது.
தொண்டையில் சதை வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். கடைசியில், அது புற்றுநோயின் அறிகுறி என்று தெரியவந்தது.
அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு சென்னைக்குத் திரும்பிய அண்ணா 1969-ம் ஆண்டு, பிப்ரவரி 3-ம் தேதி காலமானார்.
அவரது மறைவு, தமிழக அரசியலின் பேரிழப்பாகப் பார்க்கப்பட்டது. தி.மு.க-வுக்குள் குழப்பங்களும், எதிர்பாராத திருப்பங்களும் ஏற்பட்டிருந்தன. அப்படி என்ன குழப்பங்களும் திருப்பங்களும் நடந்தன?
(இன்னும் அறிவோம்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!