news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரசாங்க எதிர்ப்புப் பேரணிக்காக புத்தர் சிலை சம்பவம் திட்டமிடப்பட்டதா?

12 Dec, 2025
திருகோணமலை கோட்டை சம்போதி தாஹம் கல்லூரியில் அமைந்துள்ள சம்புத் ஜயந்தி விகாரை பகுதியில் அவசர அவசரமாக புத்தர் சிலை அங்கு வைக்கப்பட்டதாலேயே பதற்றம் எழுந்தது. எனவே புத்தர் சிலையின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே அங்கிருந்து சிலையை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிக சமயோசிதமாக இவ்விடயத்தை கையாண்டு மறுநாள் அங்கேயே புத்தர் சிலையை வைத்தது மாத்திரமல்லாது புதிய கட்டுமானங்களுக்கு இடமில்லையென்றும் நீதிமன்ற உத்தரவே இறுதி தீர்வாக அமையும் என்று கூறி விட்டது. இதை பொதுஜன பெரமுனவினர் மாத்திரமின்றி ஏனைய இனவாத செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. மிக முக்கியமாக அரசாங்கத்துக்கு எதிரான நுகேகொட பேரணியை கட்டமைத்த பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இதை எதிர்ப்பார்க்கவில்லை. பதற்றத்தை தடுப்பதற்கு பொலிஸாரால் எடுக்கப்பட வேண்டிய உடன் நடவடிக்கை அவ்விடத்திலிருந்து புத்தர் சிலையை அகற்றுவதாகும். ஏனென்றால் புத்தர் சிலைக்கு எந்தவித சேதமமும் ஏற்பட்டு விடக்கூடாது. அவ்வாறு ஏற்படுமாயின் அது பல வன்முறைகளுக்கும் வழிவகுக்கக் கூடும் என்பதாகும். ஆனால் சிலையை அகற்றிய பிறகே பதற்றம் அதிகரித்தது. புத்தர் சிலையை அங்கிருந்து பொலிஸார் அகற்றியமைக்கு மேலிடத்து உத்தரவே காரணம். இந்த விடயம் அங்கு பொலிஸாரோடு சண்டையிட்ட பிக்குகளுக்குத் தெரியாது. அதே வேளை மறுநாள் அவ்விடத்திலேயே மேற்படி சிலை வைக்கப்படும் என்ற விடயம் பொலிஸாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. இதன் காரணமாகவே சிலையை அகற்றுவதற்கு முயன்ற பொலிஸாரை தாக்குவதற்கும் பிக்குகள் தயாராகினர். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் கன்னத்தில் பிக்கு ஒருவர் அறைந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியது. அந்த பிக்கு பெளத்தத்தை காத்த வீரராக போற்றப்பட்டார். இலங்கையில் பிக்குகள் அணியும் காவி உடைக்கு கொடுக்க வேண்டிய கெளரவத்தை பொலிஸ் அதிகாரி உணர்ந்திருந்தமையினாலும் தானும் ஒரு சிங்கள பெளத்தர் என்ற காரணத்தினாலும் பொலிஸ் அதிகாரியினால் அடியை வாங்கிக்கொண்டு பொறுமை காப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. பெளத்த பிக்குவின் அடியை, அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகத்தான் கருத வேண்டும். அரச எதிர்ப்பு பேரணி இடம்பெற இரண்டு நாட்கள் இருக்கையில், மிகவும் உணர்வுபூர்வமான இந்த ‘புத்தர் சிலை ’ விவகாரம் சூடு பிடித்தது. இத்தனை நாட்கள் இருக்கையில் அரசாங்கத்துக்கு எதிரான எதிரணியின் பேரணி நடக்கப்போகும் தறுவாயில் இச்சம்பவம் இடம்பெற்றமை பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை அமைதியாக கையாள்வதற்கு நினைத்த அநுர அரசாங்கம் அதன் படி சில நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதில் முதலாவது அம்சம் மறுநாள் புத்தர் சிலையை அவ்விடத்திலேயே கொண்டு சென்று வைப்பதாகும். இதை எதிரணியினர் எதிர்ப்பார்க்கவில்லை. வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த சம்பவத்தை வன்மையா கண்டித்து பாராளுமன்றில் பேசினாலும் அவர்களின் குரல்களை அநுர அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் தமக்கு வாக்களித்த சிங்கள பெளத்தர்களின் ஆதரவே இப்படியான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு தேவைப்பட்டது. இந்த சம்பவத்தை பூதகரமாக்கும் முயற்சியில் நாமல் ராஜபக்சவின் அணியினர் மறைமுகமாக ஈடுபட்டனர். நாமல் இதில் நேரடியாக களமிறங்கவில்லை. மகிந்த ஆட்சியில் அவருக்கு பக்கபலமாக இருந்து இனரீதியாக கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வந்த ஞானசார தேரர் மற்றும் அம்பிட்டியே சுமன ரத்ன தேரர் ஆகியோரைக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்ப செய்திருந்தார். இதில் உச்சகட்டமாக பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரர் சம்பவம் இடம்பெற்ற மறுநாள் திருகோணமலையில் சென்றிறங்கினார். அங்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து ‘ புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில் தான் தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர் ’ என்று கர்ஜித்ததோடு பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் குறித்து காரசாரமாக பேசிய சாணக்கியன் எம்.பியையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். மட்டுமின்றி பெளத்தத்தின் இருப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அதை கண்டு கொள்ளாமல் இருக்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியாளர்களை ‘முதுகெலும்பற்ற அரசாங்கம்’ என்றும் அவர் வர்ணித்திருந்தார். அதையடுத்தே நேரடியாக பாராளுமன்றம் மூலம் மக்களுக்கு ஒரு செய்தியை கூறுவதற்கு ஜனாதிபதி அநுர குமார பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார். 18 ஆம் திகதி இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின் போது சாணக்கியன் எம்.பி இவ்விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இப்போது இப்பிரச்சினை முடிந்து விட்டது. அவ்விடத்தில் புதிய கட்டுமானங்களை அமைக்க வேண்டாம் என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. பிறகு ஏன் இந்த இனவாத குழுக்கள் இதை தூக்கிப் பிடிக்க வேண்டும்? இலங்கையெங்கும் தீ வைத்த அனுமன் போன்று குட்டி அனுமன் ஒன்று இப்போது இனவாத தீயை பற்ற வைக்க முயல்கின்றது. இது நடக்காது. இனி இந்த நாட்டில் இனவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்போவதில்லை. அது நான் மாத்திரமல்ல, இந்த சிங்கள பெளத்த மக்களே இனவாதத்துக்கு அனுமதியளிக்க மாட்டர். அவர்கள் மாத்திரமன்றி நாட்டின் இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் மக்களும் எப்போதும் இனவாதத்தை ஆதரிக்க மாட்டர்’ என அமைதியாகவும் தெளிவாகவும் உரையொன்றை ஆற்றியிருந்தார். அவர் குட்டி அனுமான் என ஞானசார தேரரையே குறிப்பிட்டிருந்தார் என்பது பலரும் அறிந்த விடயம். அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அவ்விடத்தில் வைக்கப்படும் என்ற அரசாங்கத்தின் செய்தி முதலில் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. அநுரவும் இனவாதத்தையே ஊக்குவிக்கின்றார். இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழர்களுக்கு இதை விட துரோகத்தை இழைத்து விட முடியாது என சமூக ஊடகங்களில் சில ‘தமிழ்ப் பேரினவாதிகளும்’ தம்மிஷ்டத்துக்கு கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். எனினும் பாதுகாப்பு அமைச்சு விவாதத்தில் ஜனாதிபதி அநுரவின் நிதானாமான உரையை செவிமடுத்த அனைவரும் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையை பாராட்டத் தவறவில்லை. ஆனால் அரசாங்கத்துக்கு எதிரான பேரணியை தயார்ப்படுத்திய நாமல் ராஜபக்சவுக்கு அநுரவின் உரை பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது. திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து அனைவரையும் நுகேகொடவுக்கு அழைப்பு விடுத்த நாமல் அணியினருக்கு இதில் தோல்வியே ஏற்பட்டது. அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்புப் பேரணி என்றே கூறப்பட்டாலும் திருகோணமலை சம்பவத்துக்குப் பிறகு இது இனவாத பேரணியாக அடையாளப்படுத்தப்படும் என்ற காரணத்தினால் பல சிங்கள அமைப்புகள் மற்றும் முன்னாள் அரசியல் பிரமுகர்கள் இதில் பங்கேற்பது குறித்து தயக்கம் காட்டினர். எனினும் அதிகளவான பெளத்த பிக்குகள் அங்கு வருகை தந்திருந்தனர். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து அரச எதிர்ப்பு பேரணியை பிரமாண்டமாக நடத்தலாம் என்றிருந்த நாமலுக்கு அரசாங்கத்தின் பதிலடி தோல்வியையே வழங்கியது. மறுநாள் அவ்விடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டவுடன் அந்த விவகாரம் புஸ் வானமாகிப் போனது. பேரணியில் கலந்து கொண்ட பெளத்த பிக்குமாருக்கும் சிலை பற்றி பேசுவதற்கு ஓன்றுமிருக்கவில்லை. மேலும் மதுபானங்கள், உணவு போன்றவற்றை விநியோகித்தே அவ்விடத்துக்கு பலரும் அழைத்து வரப்பட்டிருந்தனர் என்பதை ஊடகங்கள் வாயிலாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருந்தது. சிலர் மதுபோதையில் தாம் எதற்கு இந்த கூட்டத்துக்கு வருகை தந்தோம் என்பது குறித்த விளக்கமின்றி இருந்தனர். சி. சி.என்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!