விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல் வீச்சுகளால் ஏற்பட்டுள்ள பாரிய குழிகள் இன்னும் இருக்கின்றன. இராணுவத்தினர், புலிகள் இருந்த பங்கர்களும் அப்படியே இருக்கின்றன.
குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் பங்கர்கள் காணப்படும் பகுதிகளுக்கு போகவேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், வெடிச் சத்தங்களோடு பிறந்தவர்கள் இங்கு அதே வெடிபொருட்களோடு விளையாடி வருகிறார்கள்.
பல வகையான துப்பாக்கி ரவைக் கோதுகள், பீரங்கிகளை பாதுகாத்து வைத்திருக்கும் பிளாஸ்ரிக் குழாய் போன்றவற்றைக் கொண்டு சிறுவர்கள் விளையாடுகிறார்கள்.
இந்தத் தொழில் ஈடுபட்டிருந்த ஒருவர் குண்டுவெடித்து உடல்சிதறிப் பலியாகியிருக்கிறார். முழுமையற்ற அவரது சடலத்தை 4 தினங்களுக்குப் பின்னர்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஒரு சில வீடுகளில் பூக்கன்று பாத்திகளை பாதுகாப்பதற்காக, அலங்காரத்துக்காக பாதுகாப்பு வேலியாக ஆயுத எச்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
போர் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் வெடிபொருட்களுடனான தொடர்பு இந்த மக்களிடமிருந்து அறுபடவே இல்லை.
தொழிலின்மை, குடும்பத்தை நடத்திச் செல்ல வருமானம் போதாமையால் இங்குள்ள மக்கள் விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தினராலும் விட்டுச் செல்லப்பட்ட வெடிபொருள் எச்சங்களை சேகரித்து இரும்புக் கடைகளுக்கு விற்பனை செய்துவருகிறார்கள்.
பெரியோர், சிறியோர், பெண்கள் என்ற வித்தியாசமில்லாமல் அனைவரும் இந்த ஆபத்தான தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்தத் தொழில் ஈடுபட்டிருந்த ஒருவர் குண்டுவெடித்து உடல்சிதறிப் பலியாகியிருக்கிறார்.
முழுமையற்ற அவரது சடலத்தை 4 தினங்களுக்குப் பின்னர்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். முன்னரை விட இந்தத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் குறைந்திருந்தாலும், இன்னும் ஒரு சிலர் பிழைப்புக்காகவும் கூடுதலாக வருமானத்தை ஈட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் வெடிபொருள் எச்சங்களை சேகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
பிழைப்புக்காக வெடிபொருள் தேடிச் செல்வதுதான் ஆபத்து என்று பார்த்தால், வீட்டில் இருந்தால் கூட அதே ஆபத்து காத்திருக்கிறது நாகர்கோவில் மக்களுக்கு. திருநாவுக்கரசு விமலாதேவி குப்பைகளையெல்லாம் கூட்டி தீமூட்டியிருக்கிறார். 2 ஷெல்கள் சீறிக்கொண்டு பாய்ந்திருக்கின்றன. அவை இரண்டும் காட்டுப் பக்கம் போனதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமலாதேவி கூறுகிறார். "இதுல அன்றைக்கு ஒருக்கா குப்பைய கொழுத்தினம், அந்தா அவ்விடத்தில... ரெண்டு ஷெல் வெடிச்சது. நாங்க இந்த மரத்துக்கு கீழால ஒழிச்சி இருந்தனாங்கள். பிள்ளைகள் எல்லாம் ஸ்கூல் போயிட்டினம். நெருப்பு வச்சதனாலதான் ஷெல் வெடிச்சது. சர்ரென்று காட்டுப் பக்கம்தான் போனது. மூன்டாவதும் வெடிக்கப்போகும்போது இவர் அத எடுத்துட்டார்." அன்று ஷெல்லை எடுத்தபோது ஏற்பட்ட அதே பயம் என்று நினைக்கிறேன், கண்கள் பெரிதாக, கைகள் இரண்டும் கன்னங்களைச் சேர்ந்துகொண்டன. நீண்ட பெருமூச்சு. நான்கு பிள்ளைகளும் அசைவில்லாமல் அப்படியோ தாயின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உடனே வழமைக்குத் திரும்பியவர், “பிறகு மிதிவெடி காரர்கள் வந்து எடுத்துக் கொண்டு போயிட்டினம். இப்படி நிறய ரவுன்ட்ஸ் எல்லாம் வெடிச்சிருக்கு. இங்க நிறைய பங்கர்கள் இருக்குது. அந்தப் பக்கமெல்லாம் போகவேணாம் என்டு சொல்லியிருக்கினம்.”
வெயில் வெப்பத்தை தாங்க முடியாமல் ஒரு சிறிய வெண் மணல் மலையில் - அன்று ஒழிந்த அந்த மரத்தின் நிழலில் - நான்கு பிள்ளைகளுடன் உட்கார்ந்திருக்கிறார் விமலாதேவி.
அந்த மணல் மலையின் பின்னால் உள்ள சிறிய குடிசை வீட்டில்தான் 6 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். எந்தவித வீட்டுத்திட்டத்திலும் இன்னும் இவர் உள்வாங்கப்படவில்லை.
விமலாதேவியின் கணவர் கூலி வேலை செய்துவருபவர். 2014 ஏப்ரல் மாதம் இங்கு வந்து குடியேறியிருக்கிறார்கள்.
இறுதிப் போரின் போது விமலாதேவியின் தங்கையும் அவரது கணவரும் மாத்தளன் பகுதியில் வைத்து ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களது 3 பிள்ளைகளில் ஒருவரையும் விமலாதேவிதான் வளர்த்து வருகிறார்.

நாகர்கோவிலில் இன்னும் பல பகுதிகளில் மிதிவெடி அகற்றப்படாமல் இருக்கிறது. இன்னும் பல பொதுமக்கள் தங்களது காணிகளில் குடியேற முடியாமல், விவசாயம் செய்ய முடியாமல் உறவினர் வீடுகளில், வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.
மிதிவெடி அகற்றும் நிறுவனங்களும் தங்களது பணியை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களும் என்னதான் செய்வார்கள், அந்தளவுக்கு மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒருவர் உடல்சிதறி உயிழந்திருக்கிறார், ஒருவர் காயமடைந்துமிருக்கிறார் என்று 8 வருடங்களாக மிதிவெடி அகற்றும் ஹலோ டிரஸ்ட் நிறுவனத்தின் காவலாளியாக பணியாற்றும் பாலசுப்பரமணியம் கூறுகிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் அவரது காணி மிதிவெடி அகற்றப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. காணியின் அருகே மிகப்பெரிய குழியொன்று. ஷெல் வீழ்ந்ததால் ஏற்பட்ட குழி அது. காணியைச் சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் அவர்.
"அச்சுவேலியிலிருந்து வந்துதான் இந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறன். வேலியடிச்சிட்டன், தண்ணீர்விட வேணும்தானே... இல்லையெண்டா இந்தக் காணியும் கைவிட்டு போயிடும்" என்கிறார் 3 பிள்ளைகளின் தந்தையான சண்முகப்பிள்ளை.



கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!