தி ஹண்ட் (The Hunt) தொடர் சொல்வதுபோல ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா?
24 Aug, 2026
பாகிஸ்தானில், 'ஜோர்டான்' என்ற வார்த்தை ‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் ட்ரெண்ட் ஆனது.
இதுகுறித்து, பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினரும், ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருமான முஷ்டாக் அகமது கான், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் படத்தைப் பகிர்ந்து எதிர்மறையான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
முஷ்டாக்கின் இந்தப் பதிவுக்கு 26 லட்சத்திற்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்தனர்.
'ஆசாத் டிஜிட்டல்' சமூக வலைதளத்தில் அவர், "இஸ்ரேலின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுக்க ஜோர்டான் மன்னருக்கு ஒருபோதும் மனம் வரவில்லை. ஆனால் இரான் இஸ்ரேலை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்கியபோது, அவர் உடனே இஸ்ரேலின் உதவிக்கு வந்தார். எனக்கு இது மிகவும் மோசமான நடவடிக்கையாகப் பட்டது,” என்றார்.
இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மட்டுமின்றி ஜோர்டானிலும் விமர்சிக்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை, அந்நாட்டின் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
ஜோர்டானில் உள்ள ஐந்தில் ஒருவரின் மூதாதையர்கள் பாலத்தீனப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் மனைவி ராணி ரானியாவும் பாலத்தீனத்தைச் சேர்ந்தவர். காஸாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து சமீபகாலமாக அவர் குரல் எழுப்பி வருகிறார்.
படக்குறிப்பு, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா
ஜோர்டான், இரான் நிலைப்பாடுகள் என்ன?
இந்த விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஜோர்டான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஜோர்டான் மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக’ கூறப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையின்படி, “சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஜோர்டானின் வான்வெளிக்குள் வந்தன. அவை எங்கள் மக்களுக்கும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததால் அவற்றைத் தடுத்து நிறுத்தினோம். அவற்றின் சிதிலமடைந்த பாகங்கள் ஜோர்டானின் பல இடங்களில் விழுந்தன, ஆனால் அவை யாரையும் காயப்படுத்தவில்லை.”
மேலும், “ஜோர்டானையும், அதன் குடிமக்களையும், அதன் வான்வெளியையும் பாதுகாக்க எதிர்காலத்தில் எந்தவொரு நாடு நடத்தும் தாக்குதலையும் ஜோர்டான் தடுக்கும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி, இஸ்ரேலுக்கு எதிரான தங்கள் தாக்குதலின் போது ஜோர்டான் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தாங்கள் கண்காணித்து வருவதாக தாக்குதலை நடத்திய இரானின் புரட்சிகர காவலர்கள் கூறியுள்ளனர்.
ஜோர்டான் தொடர்ந்து தலையிட்டால், அந்நாடு இரானின் அடுத்த இலக்காக இருக்கலாம். ஆனால் இரானின் உள்துறை அமைச்சர் நாசர் கனானி ஒரு செய்தியாளர் சந்திப்பில், "இந்தத் தாக்குதலை இடைநிறுத்தியதில் ஜோர்டானின் பங்கு பற்றி நான் பேச முடியாது, அது ராணுவ விவகாரம்," என்று கூறினார்.
“ஜோர்டானுடனான எங்கள் உறவுகள் நட்பு ரீதியானவை. கடந்த சில மாதங்களாக இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி சந்திப்புகள் நடந்தன,” என்றார்.
சமீபத்தில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளமான 'டவர் 22' மீது இராக் போராளிக் குழுவான ‘அல்-மக்மூதா இஸ்லாமியா’வால் ட்ரோன்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.
ஜோர்டான் வரலாற்று ரீதியாக அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. 1990களில் இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா முன்னெடுத்த ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டபோது இஸ்ரேலுடனான அதன் உறவுகள் மேம்பட்டன.
ஜோர்டானின் வரலாறு
படக்குறிப்பு, ஜோர்டானின் அம்மான் பகுதியில் விழுந்த இரானிய ஏவுகணையின் சிதைவுகள்
புவியியல் ரீதியாக, ஜோர்டான் மத்திய கிழக்கில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. சௌதி அரேபியா, இராக் மற்றும் சிரியாவை தவிர, ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது ஜோர்டான். பாலத்தீனப் பகுதிகள் மற்றும் சிரியாவை சேர்ந்த ஏராளமானோர் ஜோர்டானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஜோர்டானில் முடியாட்சி உள்ளது. தற்போது இரண்டாம் அப்துல்லா ஜோர்டான் மன்னராக உள்ளார். 1946இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த ஹாஷிமைட் வம்சம் (அல் ஹாஷிமூன்) ஜோர்டானை ஆட்சி செய்து வருகிறது.
மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹாஷ்மி குடும்பத்தின் வரலாறு மற்றும் வம்சாவளி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜோர்டான் மன்னரின் பரம்பரை இஸ்லாத்தைத் தோற்றுவித்த முகமது நபியின் வழித்தோன்றலாக வந்தது.
இருபதாம் நூற்றாண்டிற்கு முன்பு, இந்தப் பகுதி 400 ஆண்டுகளாக உஸ்மானியா சுல்தான்களால் (உஸ்மானிய பேரரசு) ஆளப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் முதல் உலகப் போரின் போது நட்பு நாடுகளுக்கு எதிராகப் போராட முடிவு செய்தது. இந்த முடிவின் மூலம், மெக்காவின் அப்போதைய அமீர் (உள்ளூர் ஆட்சியாளர்) ஷெரீப் ஹுசைன் பின் அலி, ஒட்டோமான் சுல்தானகத்திடம் இருந்து சுதந்திரம் பெறும் வாய்ப்பைப் பெற்றார்.
பிரிட்டன் உட்பட மற்ற கூட்டணி சக்திகளின் உதவியுடன், 1916இல் அரபு கிளர்ச்சிக்குப் பிறகு மெக்கா ஒட்டோமான் சுல்தானகத்தில் இருந்து சுதந்திரம் பெற்றது.
கடந்த 1917இல், ஆங்கிலோ-அரபு ராணுவம் பாலத்தீனத்தை உள்ளடக்கிய பகுதியைக் கைப்பற்றியது.
1921ஆம் ஆண்டில், பாலத்தீனம் அந்தப் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு 'டிரான்ஸ் ஜோர்டான்' பகுதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஆட்சி அப்துல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ஜோர்டானின் முதல் மன்னரானார்.
மெக்காவின் எமிர் ஷெரீப் ஹுசைன் பின் அலியை சர்ச்சைக்குரிய பால்ஃபோர் பிரகடனத்தில் கையொப்பமிட வைக்க பிரிட்டன் பலமுறை முயன்றது. அதற்குப் பதிலாகப் பெரிய தொகையைக் கொடுக்கவும் முயன்றது. ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதன் பின்னர் கூட்டணி நாடுகள் சார்பில் சௌதி குடும்பத்தினருடன் ஒப்பந்தம் ஏற்பட்டது.
படக்குறிப்பு, ஜோர்டான் கொடி
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!