தீவிரமாகும் எரிபொருள் நெருக்கடி
19 Oct, 2026
இதேவேளை பால்டிமோர் – பிரான்சிஸ் ஸ்கொட் கீ பாலத்தை மோதி தகர்த்த டாலி என்ற சரக்குக் கப்பலில் 764 தொன் அபாயகரமான பொருட்கள் இருந்ததாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 4,700 கொள்கலன்கள் இருந்துள்ளன.
அதில் 56 கொள்கலன்களில் அரிக்கும் மற்றும் எரியக் கூடிய பொருட்கள், லித்தியம்– அயன் மின்கலங்கள் உட்பட ஒன்பது அபாயகரமான பொருட்கள் இருந்ததாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் மிகுதி 4,644 கொள்கலன்களில் என்ன இருக்கின்றது என்பது குறித்து அறிய கப்பலின் ஆவணங்கள் குறித்த பகுப்பாய்வு இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவல்கள் வெளிப்பட்டவுடன் இவ்விவகாரத்தை கடந்த 2 ஆம் திகதி பாராளுமன்றில் கேள்விக்குட்படுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. அபாயகரமான பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு வரும் கப்பலுக்கு யார் அனுமதி வழங்கியது இதன் நடைமுறைகள் என்ன என அவர் அரசாங்கத்திடம் கேள்வியை முன்வைத்திருந்தார்.
பேராசிரியர் சரித்த ஹேரத் எம்.பியும் இது குறித்து கேள்வியெழுப்பியிருந்தார். மறுநாள் 3 ஆம் திகதி இதற்கு பாராளுமன்றில் பதில் வழங்கிய சுற்றாடல் துறை இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர, இக்கப்பல் மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் அனுமதியைப் பெறவில்லையென்றும் அக்கப்பலில் அபாயகரமான பொருட்கள் இருந்தமை விபத்துக்கு பின்னரே அறியக் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
இது குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு சுற்றாடல் அதிகார சபை, சுங்கத்திணைக்களம் துறைமுகங்கள் அதிகார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் குறித்த அபாயகரமான பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை யார் முன்னெடுத்திருப்பார்கள் என்ற விடயம் இதுவரையிலும் அரசாங்கத்துக்கு தெரியாமலிருக்க முடியாது.
யாருடைய பெயரில் குறித்த ஆவணங்கள் உள்ளன என்ற விடயத்தை அறிந்து கொள்வது கடினமான விடயமல்ல. டாலி கப்பல் பாலத்தை மோதி விபத்துக்குள்ளானதால் தான் இந்த விடயங்கள் அனைத்தும் அம்பலமாகியுள்ளன.
எனவே இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியின்றி அபாயகரமான பொருட்களையும் கழிவுகளையும் ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு கப்பல்கள் வந்து போய் கொண்டு தான் இருக்கின்றன என்பது நிரூபணமாகியுள்ளது.
தமது அனுமதியின்றி துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் குறித்து துறைமுக அதிகார சபை மற்றும் சுங்கத் திணைக்களம் என்பன மெளனம் காக்கின்றன.
இலங்கைக்கு இவ்வாறான நச்சுக்கழிவுகள் , அபாயகரமான பொருட்களை கொண்டு வருபவர்கள் யார்?
ஏதாவதொரு நிறுவனத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இந்த செயற்பாடுகளை யார் முன்னெடுக்கின்றார்கள்?
தமது நாட்டு கழிவுகளை இலங்கையில் கொண்டு வந்து சேர்ப்பதற்கும் பின்னர் அதை இலங்கையின் ஏதாவதொரு கடற்பரப்பிலோ அல்லது வேறு இடங்களிலோ கொட்டுவதற்கும் மில்லியன் கணக்கில் பணம் பெறுபவர்கள் யார்? போன்ற கேள்விகளுக்கு பதில்கள் அவசியமாகவுள்ளன.
மீள்சுழற்சிக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் என்ற பெயரில் அபாயகரமான கழிவுகளையும் கொள்கலன்கள் சுமந்து வருகின்றமை குறித்து எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சில நாடுகளின் வைத்தியசாலை கழிவுகளில் அபாயகரமான மருந்து குப்பிகள், மனித உடல் அவயங்கள், சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட கழிவுப்பொருட்களும் இருக்கின்றன.
நாட்டின் ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளுக்கு இவை சூட்சுமமாக பரப்பப்பட்டால் குறித்த பிரதேச சூழலுக்கும் மக்களுக்கும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கூறத் தேவையில்லை.
கழிவகற்றல் செயன்முறைகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் போன்றவற்றில் இலங்கை தோல்வியடைந்த நாடாகவே உள்ளது. தலைநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு சேரும் சுமார் 700 தொன் வரையான கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் முறையான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.
நாட்டின் உள்ளூராட்சி சபைகளும் கூட இந்த கழிவகற்றல் செயற்பாடுகளில் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இந்த நிலைமைகளில் வெளிநாடுகளின் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதற்கு இலங்கை துணைபோகின்றதா?
-சிவலிங்கம் சிவகுமாரன்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!