Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? Explained
25 Oct, 2026
சித்தாந்த அரசியலா, அன்றாடப் பிரச்னைகளா?
வடக்கிலும் கிழக்கிலும் இயங்கிவந்த தமிழ் தேசியக் கட்சிகள் இனப் பிரச்னைக்கு தீர்வை மையமாகக் கொண்ட அரசியலிலேயே இத்தனை ஆண்டு காலமாக ஈடுபட்டுவந்தன.
இனப் பிரச்னைக்கு எவ்விதத் தீர்வையும் முன்வைக்காத தேசிய மக்கள் சக்திக்கு (என்பிபி) இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் வாக்குகள் அதிகம் கிடைத்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது, சமூக மேம்பாடு - பொருளாதார மேம்பாடு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு அரசியலை நோக்கி வடக்கு நகர்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில்கூட, வடக்கு - கிழக்கு மக்கள் அநுரவுக்கு கணிசமாக வாக்குகளை வழங்கவில்லை. ஆனால், இப்போது அது நடந்திருக்கிறது.
சித்தாந்தங்களை ஒருபக்கம் வைத்துவிட்டு, அன்றாட வாழ்வு சார்ந்த பிரச்னைகளைக் கவனிக்க வேண்டிய காலம் வந்துவிட்டதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரான சி.வி.கே. சிவஞானம்.
"இலங்கையில் ஒரு அரசியல் மாற்றம் எற்பட்டுத்தானிருக்கிறது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. உரிமை சார்ந்த விஷயங்களை பேசும் அதே நேரம், கடந்த 15 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்.
வெறும் தத்துவம் பேசிக்கொண்டிருக்கும் காலம் போய்விட்டது. தமிழ் தேசியம் என்று சொல்லிக் கொண்டேயிருப்பது அன்றாடப் பிரச்னைக்கான தீர்வு அல்ல. அது உரிமை சார்ந்த அரசியல் தீர்வு மட்டுமே. இப்போது வாழ்வியல் சேர்ந்த விஷயங்களை கவனிக்க வேண்டிய தேவை வந்திருக்கிறது" என்கிறார் சி.வி.கே. சிவஞானம்.
சி.வி.கே. சிவஞானம், சிரேஷ்ட துணைத்தலைவர், இலங்கை தமிழ் அரசு கட்சி
ஆனால், அரசியல் நோக்கர்களில் ஆரம்பித்து பொதுமக்கள் வரை, தமிழ் தேசியக் கட்சிகளுக்குள் இருந்த பிளவே பின்னடைவுக்கான முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்த பொதுமக்கள் சிலரிடம் பிபிசி பேசிய போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்த சச்சரவுகள், ஜனாதிபதியான இரண்டு மாதங்களில் அநுர குமார திஸாநாயக்கவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாகவே, தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்ததாகத் தெரிவித்தனர்.
தமிழ் தேசியக் கட்சிகளிடமிருந்த ஒற்றுமையின்மை, தலைமைத்துவ வெற்றிடம் ஆகியவற்றால் ஏற்பட்ட விரக்தியில் தேசிய மக்கள் சக்தியை நோக்கி மக்கள் திரும்பிவிட்டதாகச் சொல்கிறார் அரசியல் விமர்சகர் நிலாந்தன்.
"இது பெரிய தமிழ் தேசியக் கட்சிகளுடைய தவறுகளின் விளைவு. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிறிய தமிழ் தேசிய கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் இருந்தார்கள்.
இதன் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கட்சிகளும் சுயேச்சைகளும் களத்தில் இருந்தார்கள்.
இதனால், மக்களின் கவனத்தை குவிக்க முடியவில்லை. மக்கள் அவநம்பிக்கையோடு தமிழ் தேசிய அரசியலை பார்த்தார்கள்.
மேலும், இங்கே ஒரு தலைமைத்துவ வெற்றிடமும் இருக்கிறது. அதனை இந்தக் கட்சிகள் பொருத்தமான விதத்தில் நிரப்பத் தவறிவிட்டன. இதனால் ஏற்பட்ட விரக்தியில் மக்கள் தேசிய மக்கள் சக்தியை நோக்கித் திரும்பினார்கள்.
சலிப்பாலும் விரக்தியாலும் திரும்பினார்களே தவிர, தேசிய மக்கள் சக்தி தீர்வைத் தரும் என நினைத்து அங்கே செல்லவில்லை. தேசிய மக்கள் சக்தி அப்படி எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை" என்கிறார் நிலாந்தன்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் நிலாந்தன்
எந்த வேட்பாளருக்கு ஆதரவு என்ற குழப்பம்
தமிழரசுக் கட்சியைப் பொருத்தவரை, கூட்டமைப்பில் இருந்தபோது தங்கள் கட்சிக்கு ஆறு இடங்களே கிடைத்த நிலையில் தற்போது எட்டு இடங்களைக் கைப்பற்றியதால் இதனைப் பின்னடைவாகப் பார்க்க முடியாது என்கிறது அக்கட்சி.
"தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றியை எங்களுக்கான பின்னடைவாக நான் பார்க்கவில்லை. இதற்கு முன்பும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் கூட்டமைப்பை எதிர்த்து வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
ஏற்கனவே டக்ளசிற்கும் அங்கஜனுக்கும் பிற கட்சிகளுக்கும் கிடைத்த வாக்குகள் என தமிழ் தேசியக் கட்சிகளுக்கு எதிராக சுமார் ஒரு லட்சம் வாக்குகள் இருந்திருக்கின்றன.
ஆனால் இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள்தான் கிடைத்திருக்கின்றன. இந்த விகிதாச்சார தேர்தல் முறையில், சரியாக வாக்குகளைச் செலுத்த வைத்ததன் மூலம் அவர்கள் ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். எங்களுக்குள் போட்டிபோட்டுக்கொண்டு அதை பிரித்ததால், இந்தப் பின்னடைவு வந்தது. இல்லாவிட்டால் எங்களுக்கு இடங்கள் அதிகமாகக் கிடைத்திருக்கும்" என்கிறார் சிவஞானம்.
இதே கருத்தையே எதிரொலிக்கிறார் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி வி. மணிவண்ணன். "தமிழ் தேசிய கட்சிகள் பல அணிகளாகப் பிரிந்திருந்ததுதான் எங்களுக்கு பின்னடைவு போன்ற தோற்றத்தைக் காட்டுகிறது.
ஒன்றிரண்டு அணிகளாக இருந்தவர்கள், ஐந்துக்கும் மேற்பட்ட அணிகளாகப் பிரிந்தது, தமிழ் தேசிய சக்திகள் தோற்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த காலங்களில் அரசாங்கத் தரப்புடன் இருந்த டக்ளஸ், அங்கஜன் ராமநாதன் ஆகியோருக்கு 94,000 வாக்குகள் கிடைத்தன. இந்த முறை டக்ளஸோ, அங்கஜனோ ஆட்சி அதிகாரத்தில் இருக்கப்போவதில்லை என்பது தெரிந்ததால், அவர்களுக்கு வாக்களித்தவர்கள் மொத்தமாக என்பிபிக்கு வாக்களித்துவிட்டனர். அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி என்பதால் போனசாக ஒரு இடமும் கிடைத்தது" என விளக்குகிறார் வி. மணிவண்ணன்.
"வடக்கில் நடந்திருப்பது வரலாற்று மாற்றமே"
,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர்
ஆனால். இப்போது வடக்கில் நடந்திருப்பது ஒரு வரலாற்று மாற்றம் என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அகிலன் கதிர்காமர்.
"இது ஒரு வரலாற்று ரீதியான மாற்றம். வடக்கில் உள்ள இரு தேர்தல் மாவட்டங்களிலும் ஒரு தேசியக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது.
உள்நாட்டு யுத்தம் முடிந்த பொழுது உண்மையில் அங்கு ஒரு மக்கள்மயப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் கட்டமைப்பு இருக்கவில்லை. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் இருந்தது.
அது ஒரு சில நபர்களைக் கொண்ட அமைப்பே தவிர, மக்கள் இயக்கம் அல்ல. இப்படித்தான் 15 ஆண்டுகளாக இலங்கையின் தமிழ் அரசியல் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், இந்த முறை அந்தக் குமிழ் வெடித்துவிட்டது." என்கிறார் அகிலன்.
மேலும், தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கான எதிர்ப்பு வாக்காகத்தான் தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகள் விழுந்தன என்கிறார் அகிலன்.
"இந்தத் தேர்தல் முடிவுகளை இரு விதமாகப் பார்க்கலாம். முதலாவதாக, தமிழ் தேசிய அரசியலுக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தும் தேர்தலாக அமைந்திருந்தது. இரண்டாவதாக, தென்பகுதியில் பெரும் மாற்றம் வந்திருப்பதை பார்த்தார்கள். அதேபோல வடக்கிலும் ஒரு மாற்றம் தேவை என்ற பார்வையும் சேர்ந்துதான் இந்த வாக்களிப்பு நடந்தது" என்கிறார் அவர்.
"ஒரு தமிழன் உள்ளவரை தமிழ் தேசிய அரசியல் நீடிக்கும்"
ஆக, இனி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலம் என்ன? தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் ஸ்ரீதரன் இதில் பெரும் நம்பிக்கையோடு இருக்கிறார். "ஒரு தமிழன் உயிரோடு இருக்கும் வரைக்கும் தங்கள் தேசிய விடுதலைக்காக தொடர்ந்து அவர்கள் பயணித்துக்கொண்டிருப்பார்கள்" என பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் அவர்.
ஆனால், அவர்களுக்குப் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன என்கிறார் அகிலன் கதிர்காமர். "தற்போது அவர்கள் மிகவும் சிதறிப்போயிருக்கிறார்கள். தாங்கள் மீண்டும் ஒன்றாக இயங்க வேண்டும் என்ற கோஷங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.
இந்த தமிழ் தேசிய அரசியல், மக்களின் நாளாந்தப் பிரச்னைகள், வறுமை, பாடசாலை விலகல், வேலையின்மை போன்றவற்றையெல்லாம் பிரச்சனையாக பார்க்கிறார்களா, அதற்கான தீர்வுகளை யோசிக்கப் போகிறார்களா என்ற கேள்வி இருக்கிறது. இந்தக் கேள்விகளைக் கையாளாவிட்டால் தமிழ் தேசிய அரசியல் கடினமாகத்தான் இருக்கும். மக்கள் ஒரு பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்" என்கிறார் அவர்.
இந்தத் தேர்தல் தோல்வியை வைத்து வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரித்துவிட்டதாகச் சொல்ல முடியாது என்கிறார் வி. மணிவண்ணன். "தமிழ் தேசியத்தை மக்கள் நிராகரிக்கவில்லை.
ஆனால், பிளவுகள்தான் தேர்தல் முடிவுகளில் எதிர்மறை விளைவுகளைக் காண்பித்துள்ளன. இனி மூத்த அரசியல் தலைவர்கள் தேர்தலிலிருந்து விலகி ஆலோசகர்களாக செயல்பட வேண்டும். தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட வேண்டும்" என்கிறார் அவர்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!