news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இளம் தாய் மரணம்: சிலர் தவறிழைத்தமை அம்பலமானது

07 Aug, 2024
சிலர் தவறிழைத்தமையால், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பட்டதாரியான இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தமை அம்பலமானது. இந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணை அறிக்கையில் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார். மன்னார் - தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பட்டதாரியான மரியராஜ் சிந்துஜா என்ற தாய், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஜூலை 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. சம்பவ தினம் விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே குறித்த பெண்ணின் மரணத்துக்கு காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. குறித்த மரணம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சினால் சுயாதீன விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து துரித விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டது. குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.விசாரணைகளின் அடிப்படையில் சிலர் தவறிழைத்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக விசேட அறிக்கை வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மேலதிக நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைக் குழுவொன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளன. மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைகள் முடிவடைந்தவுடன் தவறிழைத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!