news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஈரானில் ஆட்சியை கவிழ்க்க சதி செய்த அமெரிக்காவும் இஸ்ரேலும்

26 Jan, 2026
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் இங்கிலாந்து-ஐரோப்பிய பங்காளிகள் தங்கள் வெட்கம் கெட்ட அரபு ஒத்துழைப்பாளர்களுடன் சேர்ந்து இஸ்லாமிய ஆட்சியை கவிழ்க்கவும் ஈரானிய செல்வத்தை கொள்ளையடிக்கவும் இஸ்ரேலுக்கு உள்ள எல்லா அச்சுறுத்தல்களையும் நீக்கி, தமக்கு தேவையான ஒரு பொம்மை ஆட்சியை ஈரானில் நிறுவவும், பெரியளவிலான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தூண்டப்பட்ட ஒரு பிரிவு மக்களை வெகுண்டு எழச் செய்து ஈரானிய பொது மக்களிடமிருந்து அமைதியை சுரண்டும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர் என்று சில அறிக்கைகள் கூறுகின்றன. முஸ்லிம் உலக நாடுகள் மத்தியில் எண்ணெய் வளம் நிறைந்த மற்றும் செல்வாக்கு மிக்க மூன்று நாடுகளான ஈராக், லிபியா மற்றும் சிரியா என்பன இஸ்ரேலையும் அதன் முடிவற்ற குற்றம் மற்றும் நவீன விரிவாக்கத்தையும் எதிர்த்தன. இஸ்ரேல் அவர்களை அழிக்க அமெரிக்க ஜனாதிபதிகளைப் பயன்படுத்தியது. அதன் பிறகு பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் மூர்க்கத்தனமான சட்டவிரோத ஆக்கிரமிப்பு குற்றங்களை மிகக் கடுமையாக எதிர்க்கும் ஒரே நாடு ஈரான் இஸ்லாமிய குடியரசு மட்டுமே.

இந்த ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கை

யதார்த்தத்தில் 1979இல் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்கு முன்பிருந்தே அமெரிக்கா ஈரானுக்கு விரோதமான போக்கினையே கொண்டிருக்கின்றது.1979 இன் இஸ்லாமியப் புரட்சி என்பது ஈரானின் நீண்டகால வரலாற்றோடு பின்னிப் பிணைந்த வேர்களைக் கொண்டதாகும்.

ரேசா ஷா பகலவி

1921 ஆம் ஆண்டில் ரெசா ஷா பஹ்லவி ஒரு முடியாட்சியை நிறுவ ஐக்கிய இராச்சியம் உதவியது. பின்னர் ரஷ்யாவுடன் சேர்ந்து, ஐக்கிய இராச்சியம் ரெசா ஷாவை 1941 இல் நாடுகடத்தியது. பின்னர் அவரது மகன் முஹம்மது ரெசா அரியணை ஏறினார். அதன் பிறகு 1953 ஆம் ஆண்டில் ஈரானிய எண்ணெய் நிறுவனங்களை தேசியமயமாக்கிய அன்றைய பிரதமர் முகமது மொசாதேக்கிற்கும் அரியணையில் இருந்த முஹம்மது ரெசா ஷாவிற்கும் இடையிலான அதிகாரப் போராட்டத்தின் நடுவே அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (சி.ஐ.ஏ.) மற்றும் பிரிட்டனின் இரகசிய புலனாய்வு சேவையான MI6 என்பன மொசாதேக்கின் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சதியை அரங்கேற்றின. அதன் பிறகு மன்னராட்சிக்கு எதிராக ஈரானில் இடம்பெற்ற மிகவும் சக்திவாய்ந்த பிரபலமான மக்கள் புரட்சி 1978-79 காலப்பகுதியில் இடம்பெற்ற ஈரானிய இஸ்லாமிய புரட்சியாகும். கோமெய்னி இந்தப் புரட்சியானது ஷா முஹம்மது ரெசா பஹ்லவியின் மேற்கத்திய ஆதரவு சர்வாதிகார முடியாட்சியை தூக்கியெறிந்த ஒரு மக்கள் எழுச்சியாகும். அதன் பிறகு ஆயதுல்லா ருஹொல்லா கோமெய்னி தலைமையில் ஒரு இஸ்லாமிய குடியரசாக ஈரான் மாற்றப்பட்டது. இந்த புரட்சி ஷாவின் மதச்சார்பின்மை ஊழல் மற்றும் மேலைத்தேச செல்வாக்கிற்கு எதிரான மதகுருமார்கள் இடதுசாரிகள் மற்றும் குடிமக்கள் என பல்வேறு குழுக்களை ஒன்றிணைத்தது. வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஷாவின் வெளியேற்றம் என மக்கள் எழுச்சி உச்சக்கட்டத்தை அடைந்தது. இது கொமெய்னி தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ள வழிவகுத்தது. இந்த அதிகார மாற்றத்தின் முதல் நாளிலிருந்தே உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்களில் இஸ்ரேலும் அதன் அமெரிக்க-இங்கிலாந்து ஐரோப்பிய பங்காளிகளும் இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்யத் தொடங்கினர். இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் சவூதி அரேபியா மூலம் அன்றைய ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹுசைனை ஈரான் மீது படையெடுக்க வற்புறுத்தினர். அதில் வெற்றி கண்ட அவர்கள் சுமார் எட்டு ஆண்டு காலம் அந்த போரைத் நீடித்தனர். இதில் இரு நாடுகளையும் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். 800 பில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் வளங்களுக்கு சேதம் ஏற்பட்டது. அமெரிக்க-ஐரோப்பா மற்றும் இஸ்ரேலின் போர் வெறியர்கள் ஈராக் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் தமது ஆயுதங்களை வழங்கினர். மேலும் அவர்கள் இப்போது காஸாவில் செய்வது போலவே படுகொலைகளின் மூலம் செழித்து வளர்ந்து தமது சொத்து இருப்புக்களையும் அதிகரித்துக் கொண்டனர். ஈராக்கும் ஈரானும் ஒருவரையொருவர் அழித்துக் கொண்டதில் பெரும்பாலான அரபு நாடுகளும் மகிழ்ச்சியடைந்தன. இஸ்லாமிய ஆட்சி ஸ்தாபிக்கப்பட்ட போதுதான் ஈரான் மீதுஅமெரிக்கா தலைமையில் சர்வதேச பொருளாதாரத் தடை கொண்டு வரப்பட்டது. இது அந்த மக்களுக்கு பெரும் கஷ்டங்களை ஏற்படுத்தியது. உண்மையில் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை மிக மோசமாகத் தாக்கின. அதுவே இன்றைய ஆர்ப்பாட்டங்கள் வெடிக்க மூல காரணமாகவும் அமைந்தன. அண்மைய காலங்களில் ஈரானில் பணவீக்க விகிதம் 40% முதல் 50% வரை அதிகத்துக் காணப்படுகின்றது. தேசிய நாணயமான ரியால் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து டிசம்பர் 28 அன்று தெஹ்ரான் கிராண்ட் பஜார் மற்றும் மத்திய டெஹ்ரானின் சில்லறை விற்னை பகுதியில் போராட்டங்கள் தொடங்கி அவை தொடர்ச்சியாக இடம்பெற்றன. இந்த எதிர்ப்புக்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மேலைத்தேச ஊடகங்கள் ஈரானை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் தமது பிரசார நடவடிக்கைளை தீவிரப்படுத்தின. ஷாவின் மகன் ரெசா பஹ்லவி ஈரானில் முடியாட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான வேட்பாளராக ஈரானின் கடைசி ஷாவின் மகனான, தமக்கு மிகவும் வேண்டப்பட்ட ரெசா பஹ்லவியின் உரைகளையும் கருத்துக்ளையும் அவர்கள் பிரசாரம் செய்யத் தொடங்கினர். வெனிசுவேலாவில் செய்ததைப் போலவே ஏகாதிபத்தியவாதிகளின் உண்மையான நோக்கம் ஈரானை பிளவுபடுத்தி அதன் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றி கட்டுப்படுத்துவதாகும். அவர்கள் நெருக்கடியை மேலும் மோசமாக்க செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தவறான அறிக்கைகள் மற்றும் வீடியோக்கள் என எல்லா வகையான பிரசாரங்களையும் பயன்படுத்தினர். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். ஜனவரி 9 அன்று ட்ரம்ப் ஈரானின் தலைவர்களுக்கு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்தார். "நீங்கள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்க்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் நாங்களும் வேட்டுக்களைத் தீர்க்கத் தொடங்குவோம்" என்று கூறினார். ஆர்ப்பாட்டக்கார்ர்கள் மீது ஈரான் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாக வெளியான செய்திகளுக்கான எச்சரிக்கையாக இது அமைந்தது. ஈரான் மீதான மேற்குலக தடைகளுக்கு அவர்கள் முன்வைக்கும் இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. அதில் முதலாவது ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த அவர்களின் கவலைகள். அடுத்தது பிராந்தியத்தில் போர்க்குணத்தை விட்டுவிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு ஈரான் வரவேண்டும் என்ற அமெரிக்க-ஐரோப்பிய அழுத்தத்துக்கு அடிபணிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. தற்போது ஈரானிய தெருக்களில் இறங்கி போராடும் ஈரானியர்கள் தங்கள் நாட்டை அழிக்க வேண்டும் என்று கேட்கவில்லை; அவர்கள் தங்கள் கண்ணியத்தை மீட்டெடுக்க கோஷமிடுகின்றனர். தங்களது பொருளாதார நிவாரணத்திற்காக குரல் கொடுக்கின்றனர். தங்கள் வாழ்க்கையை வீணாக்கிய தங்கள் மீது விதிக்கப்பட்ட கூட்டு தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்கள் கோருகின்றனர். இன்று ஈரான் மீது இஸ்ரேலின் கவனம் பல காரணிகளால் தூண்டப்பட்டுள்ளது. முதலாவதாக, இது உலகக் கவனத்தை திசைதிருப்பும் ஒரு தந்திரோபாயமாகும். இது பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலையிலிருந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் எஞ்சியிருப்பதை சுரண்டுவதிலிருந்தும் உலகின் கவனத்தை திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த முயற்சி எந்தளவுக்கு அதிகமான பிராந்திய குழப்பத்தையும் முரண்பாடுகளையும் உருவாக்குகின்றதோ அந்தளவு விரைவாக உலகம் காசா இனப்படுகொலையை மறந்து அதிலிருந்து வெளியேறும் என்று டெல் அவிவ் நம்புகின்றது. அடுத்து, இதனோடு தொடர்புடைய இஸ்ரேலின் மற்றொரு நோக்கம் லெபனான் மற்றும் சிரியா போன்ற பிற பிராந்திய நாடுகளுக்கான தனது வடிவமைப்புகளைப் போலவே ஈரானை துண்டாடி சிறிய இனக் குழுக்களைக் கொண்ட நாடுகளாக சிதைப்பதாகும். இந்த முழு பிராந்தியத்தையும் டெல் அவிவ் அதன் சொந்த வடிவமைப்பின் கீழ் மீண்டும் உருவாக்க விரும்புகின்றது. "சோமாலிலாந்து" போன்ற ஒரு நாட்டை இஸ்ரேல் அண்மையில் அங்கீகரித்தது அதன் தீய நோக்கத்திற்கான ஒரு பொல்லாத வரைபடமாகும். ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி ஆர்ப்பாட்டக்காரர்களை "வெளிநாட்டு கூலிப்படையினர்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் டொனால்ட் ட்ரம்பைப் பற்றி கூறுகையில் "பிர்அவுன், நம்ரூத், ரெசா கான், முகமது ரெசா (ஷா மற்றும் அவரது தந்தை) போன்ற உலகின் திமிர்பிடித்த மனிதர்கள் தங்கள் பெருமையின் உச்சத்தில் இருந்த போதுதான் தூக்கி எறியப்பட்டனர் என்பதை அவர் அறிவாரானால் அவரும் தூக்கி எறியப்படுவார் என்பதையும் அவர் அறிந்திருக்க வேண்டும்.". மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமீர் சயீத் இராவனி எழுதியுள்ள கடிதத்தில் ஈரானின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கும் ஈரானில் கலவரங்களையும் அமைதியின்மையையும் தூண்டுவதற்கும் அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சியோனிச ஆட்சியுடனான அதன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் என்பனவற்றை வன்மையாகக் கண்டித்துள்ளார். அலி கமேனி இஸ்ரேலுடன் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் தனது முதல் பொதுக் கருத்துக்களில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவதன் மூலம் எதிர்கால அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலளிப்பதாக அச்சுறுத்தி இருந்தார். ஈரானிய மக்களுக்கு அனுப்பிய செய்தியில் மோதலின் தொடக்கத்தில் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கோரிக்கை அமெரிக்காவின் உண்மையான நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்தியுள்ளது என்றார். ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடனான எந்தவொரு வர்த்தகத்திலும் 25% வரி விகிதத்தை எதிர்கொள்ளும் என்று ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்துள்ளார். ஈரானின் நிலைமைகளுக்கான ஒரு பதிலாக வொஷிங்டன் இதை எடை போடுகின்றது. இதற்கிடையில் கடைசியாக்க் கிடைத்துள்ள தகவல்களின் படி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இப்போதைக்கு ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதில் இருந்து பின்வாங்கி உள்ளதாகத் தெரிகின்றது. இப்போதைக்கு தாக்குதல் நடவடிக்கை எதையும் மேற்கொள்ள வேண்டாம் என்ற அழுத்தங்களை சவூதி அரேபியா ஓமன் மற்றும் கட்டார் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்களிடம் இருந்து ட்ரம்ப் எதிர்கொண்டார். பிராந்திய மோதல்கள் தங்களது நலன்களையும் ஸ்திரத் தன்மையையும் பாதிக்கும் என்ற கவலையின் காரணமாகவே இந்த அழுத்தங்கள் ட்ரம்ப் மீது வளைகுடா ஆட்சியாளர்களால் பியோகிக்கப்பட்டன. மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உடைட்டின்  (Al Udeid Air Base) தாயகமாக கட்டார் உள்ளது. ஜூன் 2025 இன் பிற்பகுதியில் ட்ரம்ப் ஈரானின் பல அணுசக்தி நிலையங்கள் மீது வரலாற்று முக்கியத்துவம் மிக்க தாக்குதல்களுக்கு உத்தரவிட்ட பின்னர் ஈரானால் இந்த முகாம் குறிவைக்கப்பட்மை இங்கு நினைவூட்டத்தக்கது. இருந்தபோதும் அடுத்து என்ன நடக்கும் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.   லத்தீப் பாரூக்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!