சூயஸ் கால்வாயின் சரித்திரம் (நிலமெல்லாம் ரத்தம் - 66)
20 Sep, 2026
இன்றும் ரணில் விக்கிரமசிங்கா மற்றுமொரு தேர்தலை நடாத்தமாட்டார் என்பதை இலங்கை மக்கள் நன்றாகவே உய்த்துணர்ந்தருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கா வாக்களர்களின் வாக்கு எண்ணிக்கையிலோ பெரும்பான்மையிலோ தங்கி இருக்கவில்லை. அவர் இராணுவத்திலும் பொலீசிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திலும் மாத்திரமே தங்கியுள்ளார்.
அவருக்கு மில்லியன்கணக்கான ஹோல்பேஸ் போராட்டக் காரர்களின் எண்ணிக்கை என்பது பொருட்டே அல்ல. ஒரு ஏகாதிபத்தியக் கைக்கூலிக்குத் தனது பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்று நன்றாகவே தெரியும்.
இலங்கையில் தேர்தல் நடந்தாலென்ன நடவாது விட்டால் என்ன ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் ஒரு போலீஸ்; இராணுவ சர்வாதிகார ஆட்சி வருவது உறுதி.
உலகபொருளாதாரத்தின் தொடர்ந்த வீழ்ச்சியும் உலக அரசியலும் பழைய வழிகளில் ஆட்சி செய்ய முடியாத நிலையும் உலகநாணயமான டொலரின் செல்லுபடியில்லாத் தன்மையும் அதனால் உலக வர்த்தகம் முரண்பாடின்றித்தொடர முடியாத தன்மையும் பொதுவாக உலகமக்களின் நுகர்திறன் பெருமளவில் வீழ்நத்தும் அதனால் பண்டங்களின் விற்பனை உலகச்சந்தையில் மீட்கமுடியாத மட்டத்துக்கு வீழ்ந்தது போன்ற ஒட்டுமொத்த உலகமுதலாளித்துவ நெருக்கடி இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கான கதவுகளை முற்றாகவே அடைத்துவிட்டன.
சோஷலிசம் அல்லது பொலீஸ் இராணுவ காட்டமிராண்டித்தனம்.
உலக பொருளாதாரமும் உலகச் சந்தையும் உலக அரசியலும் கோலோச்சும் எமது சகாப்தத்தில் எந்த மனிதனும் தான் கனவு கண்டதுபோல் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது.
அதுவும் நாம்வாழும் சகாப்தம் உலகரீதியில் திடீர் மாற்றங்கள் ஏற்படும் சகாப்தம். பெருக்கெடுக்கும் ஆற்றில் விழ்ந்த படகுபோல அந்த நீரோட்டத்தில் அள்ளுப்பட்டு அடிக்கடி ஏற்படும் எதிர்பாராத விபத்துகளால் மனிதர்களது வாழ்க்கை ஓட்டம் அடிக்கடி திசைமாறிச் செல்லும்.
ஒவ்வொரு திடீர், கொந்தளிப்புச் சூழலுக்கும் ஒத்துப்போக முடியாத மக்கள் அழிந்து போனார்கள்.
தப்பிப் பிழைப்பதற்கு ஒரு சின்ன அதிர்ஷ்டம் எப்பொழுதும் தேவைப்படுகிறது. நான் வளர்ந்து வாலிபப் பராயத்தை அடைந்து நனவான மனிதனாக வாழ்ந்த காலம் முழுவதும் இலங்கை எப்போதும் ஒரு சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை அனுபவித்தே வந்தது.
ஏறத்தாள எல்லாக் காலங்களும் ஓர் உள்நாட்டு யுத்தகாலமாகவே எனது வாலிபம் முழுவதும் கடந்து சென்றது.
எனது தந்தையார் மொகமட் அலியாஸ் மொகமட் மிஹிலார் 1971 இளைஞர் எழுச்சியில் றோகண விஜயவீராவின் இயக்கத்தில் அங்கத்தவராக இருந்தவர்.
1985 ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இணைந்து செயற்பட்டவர்.
1987 முதலாவது வடகிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர்.
வடகிழக்கு மாகாண முதல் அமைச்சர் வரதராஜப் பெருமாள் கீழ் மாகாண அரசாங்கத்தின் ஒரு அதிகாரியாகத் திருகோணமலையில் பணியாற்றினார்.
அத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எப் பின் மத்திய குழு அங்கத்வராக இருந்தார். திருகோணமலையில் 1990 இந்திய சமாதானப் படை இலங்கைக்கு அழைக்கப்பட்ட(ஐ.பி.கே.எஃப்) காலகட்டத்தில் மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர் அவர் பத்மநாபா உள்ளிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தர்களுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றார்.
ஈ.பி.ஆர்.எல்.எப்-ன் தலைவராக இருந்த பத்மநாபா 1990 ஜூன் 19 அன்று தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அவரது கட்சிக்காரர்கள் 12 பேர்களோடு சேர்த்துத் தமிழீழவீடுதலைப் புலிகள் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களுள் எனது தந்தையும் ஒருவர். இந்த சம்பவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் இலங்கைக்கு வெளியில் நடந்த நிகழ்வாக அமைந்தது. அப்பொழுது எனக்கு வயது 7.
எனக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் இருக்கின்றனர்.
நான் பிறந்த ஊர் மருதமுனை.
நான் ஆரம்பம் முதல் உயர்தராதரம் வரை கல்வி கற்றது மருதமுனை சாம்ஸ் மத்திய கல்லூரி.
எனது பல்கலைக் கழகப் புகுமுகச் சித்தி 2003.
பேராதனைப் பல்கலைக் கழகப் புகுமுகம் 2003-2004.
பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கையில் தினமுரசு பத்திரிகைக்குக் கட்டுரைகள் எழுதுவதன் மூலம் சம்பாதித்து எனது கல்வியைத் தொடர்ந்தேன். அதிகமாக அந்நாளைய அரசியல் நிலவரங்களின் ஆய்வை எழுதுவேன். அந்த வருமானம் என் கல்விக்கான செலவை ஓரளவுக்கு ஈடுசெய்தது.
பல்கலைக் கழகத்தில் விரிவுரைகள் அப்பொழுது நான்கு நாட்கள்தான் இருந்தன. வார இறுதியில் தலைநகரான கொழும்புக்கு வந்து தினமுரச பத்திரிகைக் காரியாலயத்தில் எனது கட்டுரைகளைத் தட்டச்சு செய்து சரிபார்த்து மற்றய உதவிகளும் செய்து வந்தேன்.
எங்கள் தேசம் என்ற பத்திரிகைக்கும் அரசியல் கட்டுரைகளும் விமர்சனங்களும் எழுதிப் பணத்தேவையைச் சமாளித்தேன். குடும்பத்தலைவன் இல்லாததால் ஏற்பட்ட சுமை அது.
அப்பொழுது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறு கைத்தொழில் மற்றும் வடமாகாணப் புனருத்தாரண அமைச்சராக, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நிர்வாகத்தில் இருந்தார். 2006 இல் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்குச் செயலாளாராகப் பணிபுரியும் ஒரு வேலை வளங்கி உதவி செய்தார்.
2004 கிழக்கு மாகாண விடுதலைப்புலிகள் இயக்கம் பிளவுண்டு கருணா ஒரு புதிய ஜனநாயகக் கட்சியைத் தோற்றுவித்திருந்தார்.
வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக கருணாவின் அரசியல் கட்சியை சட்டபூர்வமாக இயங்குவதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்க அனுமதிக்கவில்லை. ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சி முழுவதும் கருணா நேபாளத்திலும் இந்தியாவிலும் தலைமறைவாகவே வாழ்ந்தார்.
மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி ஜனாதிபதியாக தனது முதல் ஆறு வருட காலப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
2006, ஏப்பிரலில் அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்னை வரும்படி தனது வாசஸ்தலத்துக்கு அழைத்திருந்தார். அது கொழும்பு லியாஸ் றோட்டில் அமைந்திருந்தது.
2006 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருணாவின் அரசியல் கட்சியைச் சட்டரீதியாக செயற்பட அனுமதித்தார்.
திரு. டக்ளஸ் தேவானந்தா என்னை அழைத்துச் சொன்னார்„ கருணா அம்மானை உனக்குத்தெரியுந் தானே. அவர்கள் ஓர் ஜனநாயக அரசியற்கட்சியாகச் செயற்பட முயற்சிறார்கள். இப்பொழுது அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பும் அவர்களுக்கு இருக்கிறது.
அவர்களுக்கு ஜனநாயக அரசியல் அறிவு போதிய அளவு கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. வரலாற்றின் நிபந்தனையும் நிர்ப்பந்தமும் அது.
அவர்களுக்கு விசுவாசமாக உதவியும் ஒத்தாசையும் செய்பவனாகப் பணியாற்றும் பொறுப்பை நீ எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நான் அதற்கு இசைந்தேன். நான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது கருணா, பிள்ளையான், குகனேசன் ஆகிய மூவரும் அங்கு வந்தனர். அவர்களை அமரச் சொல்லிவிட்டு பின்னர் என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நீ இவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நான் கருணாவிடம் பணியாற்றச் சென்ற பொழுது கருணாவுக்கு எனது பத்திரிகைச் செயற்பாடுகள் தெரிந்திருந்தன.
அவரது முதல்வேண்டுகோள் முன்பு தமிழீழ விடுதலைப் புலிகள் கீழ்மாகாணத்தில் நடாத்திய தமிழ்அலைப் பத்திரிகையை மீண்டும் தொடர உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
நான் தமிழ் அலை ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். அதனோடு கூடவே பல மற்றய பொறுப்புக்களும் என்னிடம் ஒப்படைக்கப் பட்டது.
இது ஒரு தொழில் மாத்திரமல்ல ஒரு விசுவாசமான இலங்கைப் பிரையை என்ற முறையில் ஒரு ஆயுதக் குழுவை ஜனநாயகமயப்படுத்தவேண்டிய கடமைப்பாடும் எனக்கு இருந்தது.
வெளி ஊடகங்களை இங்கிதமாகவும் சாணக்கியமாகவும் கையாளும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. கருணா குழுவிலிருந்த எல்லோரும் அன்றய திடீர் அரசியல் சூறாவளியின் நிர்ப்பந்தத்தால் ஏறத்தாள கல்வியை இடைநடுவே விட்டவர்கள்.
ஆதலால் தமிழ் சிங்கள ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யும் பணியும் எனக்குத் தரப்பட்டது. அத்துடன் வெளிநாட்டுத் தூதரகங்களைத் தொடர்பு கொள்வதற்கும், இராஜதந்திர ரீதியில் உணர்திறன் கொண்ட, இங்கிதம் தெரிந்த, கலாச்சார ரீதியாக மெருகூட்டப்பட்ட நன்கு சமகால விடயங்கள் அறிந்த அறிவுள்ள நபர் ஆகவும் நான் அவர்களால் இனங்காணப் பட்டேன்.
பாதுகாப்புக்காக கொழும்பு பொரளை இராணுவ முகாமுக்கு அருகாமையில் பத்திரிகை வேலைக்கும் அரசியல்வேலைக்கும் ஒரு கட்டிடம் தரப்பட்டது. பின் அங்கிருந்து கொழும்பு நாரகன் பிட்டி பகுதியில் இராணுவ பாதுகாப்புடன் பத்திரிகை மற்றும் அரசியல்வேலை செய்வதற்காக ஒரு கட்டிடம் தரப்பட்டது.
அங்கே கருணா பிள்ளையானோடு; நானும் ஏறத்தாள முழு நேரமும் வேலை செய்தோம்.
பயங்கரவாதிகளாக சைனைட் குப்பிகளோடு தற்கொலைக் குண்டுக் கவசத்தைப் போட்டுக் கொண்டு திரிந்தவர்கள் ஜனநாயக வாழ்கைக்கு வந்தது சநதோஷமாகவும் அவர்களை நாகரீக மனிதர்கள் ஆக்கும் பணியில் பங்களிப்பது எனக்;கும் கடைமைப்பாடாகவும் இருந்தது.
கருணா எனக்கு உடனேயே ஒரு கைத்தொலைபேசியும் தொடர்புகொள்ள வேண்டடிய தொலை பேசி எண்களையும் தந்தார்.
சிறிது சந்தேகங்களும் பயமும் இருந்த போதும் அவர்களோடு நிதானமாகவும் கவனமாகவும் அகலாமல் அணுகாமல் வேலைசெய்யத் தொடங்கினேன்.
உயர் பொறுப்புகளில் இருப்பவர்களோடு அருகில் இருப்பது ஆபத்தானது என்ற உள்ளுணர்வு என் மனதுள் எப்பொழுதுமே இருந்துகொண்டுதான் இருந்தது. எந்த மனிதனும் மாற்றத்துக்கு உட்படாமல் இருக்க முடியாது என்பதை மனிதவாழ்வியல் நிறுவியுள்ளது.
தமிழ் அலை மாதத்துக்கு இரண்டு பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது.
என்னுடைய வதிவிடம் பாணந்துறையில். பத்திரிகைக் காரியாலயம் பொருளை விமானத்தளத்தக்கு அருகாமையில். பிள்ளையான் சொன்னார் நெடுகப் பயணம்செய்வது பாதுகாப்பற்றது. இங்கேயே இரு என்று சொன்னார்.
இப்பொழுது படிப்பை இடைநிறுத்த யோசித்தேன்.
பத்திரிகைக் காரியாலயம் பொருளையிலிருந்த நரகன்பிட்டி இராணுவ முகாமுக்குப் பக்கத்தில,; பாதுகாப்புக்காக மாற்றப் பட்டது. ஓர் இரட்டைமாடிக் கட்டிடம் கிடைத்தது.
மேலே அரசியற் காரியாலயம். கீழே பத்திரிகைக் காரியாலயம்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளராகச் சிவகீதா பிரபாகரன் நியமிக்கப் பட்டார்.
இந்நாட்களில் இராணுவத்தோடான கலந்துரையாடலின்போது கருணாவுக்கு இராணுவமே மொழிபெயர்ப்பு வளங்கியது.
கருணா அவர்களது மொழிபெயர்ப்பை விளங்குவது அரைகுறையாக இருக்கிறது என்று சொல்லி அரசியற் கலைச் சொற்பாவனையும் வட்டாரத் தமிழ் மொழிவழக்குந் தெரிந்த என்னை மொழிபெயர்க்க வரும்படி கேட்டுக்கொண்டார்.
ஜூன் 2006 இல் பாதுகாப்பு அமைச்சகத்தில் ஒரு கூட்டம்; நடந்தது. கருணா என்னை மொழிபெயர்பாளராகக் கூட்டிக் கொண்டு சென்றார். பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நான் அன்று முதன்முறையாகச் சந்தித்தேன்.
அந்த கூட்டத்திற்கு தேசிய புலனாய்வு தலைவர் ஜெனரல் கபிலே ஹெர்டே விதாரண வந்திருந்தார். அந்தக் கூட்டம் 3 மணித்தியாலங்கள் நடந்தன. அதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் கருணாக்களையும் எப்படிப் பாவிப்பது என்பது பற்றியே யோசிக்கப்பட்டது. கூட்டம் முழுவதும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது.
இந்நாட்களில் சரத் பொன்சேகாவுடன் இராணுவத் தலைமையகத்தில் மற்றொரு சந்திப்பு இடம்பெற்றது.
கருணா என்னை ரி.எம்.வீ. பியின் பேச்சாளராக நியமித்தார். நான் பி.பி.சி, ராய்ட்டர், டெய்லி மிரர,; தெரண போன்ற ஊடகங்களுக்கெல்லாம் பேட்டி அளித்தேன்.
மேல் மாடியில் நான் ரி.எம்.வீ.பியினருக்கு அரசியல் வகுப்புகள் எடுத்தேன். அவர்கள் பள்ளியை இடைநிறுத்திப் போராட்ட இயக்கத்தில் சேர வரலாறு நிர்ப்பந்தித்ததால் அவர்களுக்கு இலங்கை வரலாறோ இலங்கை இனப்பகை வரலாறோ, அரசியல் வரலாறோ தெரிந்திருக்கவில்லை.
பிரஜா உரிமை பறிப்பு, கள்ளத்தோணிச் சட்டம், தனிச் சிங்களச் சட்டம் ,1953 ஹர்த்தால், சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம,; செல்வனாயகம் பண்டாரநாயக்கா ஒப்பந்தம், தமிழ்மொழி விஷேட மஷோதாக் கலவரம், தரப்படுத்தல், வட்டுக்கோட்டை மகா நாடு, 1971 எழுச்சி, 1972 குடியரசுசச் சட்டம,, எஸ்.டபிளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா கொலை, திருமதி பண்டாரநாயக்கி கொலை முயற்சி, இலங்கைப் பல்லின வாழ்க்கை, காலனித்துவ காலக் கொடுமைகள், மங்கள முனசிங்கா ஆணைக்குழு அறிக்கை, சந்திரிக்கா தீர்வுப்பொதி, போன்றவை எல்லம் முதலிலிருந்து படிப்பிக்க வேண்டியிருந்தது.
இந்தக் கூட்டத்;துக்கு பிள்ளையான், இனியபாரதி, ஜெயம், மங்களம், சீலன,; ஜெயா போன்ற ரி.எம்.வீ.பியினர் எல்லாரும் வருவார்கள். அதன் பிறகு என்னை மாஸ்டர் என்று கூப்பிட அவர்கள் ஆரம்பித்தார்கள்.
சிறிது நாளில் பிள்ளையான் என்னை அழைத்துத் தங்களுக்கு ஒரு அரசியல் பேச்சாளர் வேண்டுமென்றும், அந்தப் பணியை என்னைச் செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். எனக்கு அசாத் மௌலானா என்ற பெயரும் சூட்டிக் கொண்டனர்.
இப்படியே மெல்ல மெல்ல சந்தர்ப்பத்தினதும் வரலாற்றினதும் நிர்ப்பந்தத்தால் நான் ரி.எம்.வீ.பியின் எலும்பும் சதையும் இரத்தமும் ஆகிவிட்டேன்.
இதன் பின் எனக்கு தொடர்புகளுக்காக இரண்டாவது கைத்தொலைபேசியும் தரப்பட்டது. அரசியல் நிகழ்சிகளும் சம்பவங்களும் அறிக்கைகளும் முரண்பாடுகளும் உடனுக்குடன் என் தொலைபேசிக்கு அனுப்பப்பட்டன.
ஏறத்தாள ஊக்கமாகச் செயற்படும் எல்லாரோடும் அரசாங்க மற்றும் உச்சியிலுள்ள பாதுகாப்புப் படையினரோடும் அரசியல்வாதிகளோடும் தொடர்புகள் வளர்ந்துகொண்டே வந்தன. மாட்டன் என்று எனக்குச் சொல்லத்தெரியாததால் என்னால் சுமக்க முடியாத சுமைகள் கூடிக் கொண்டே வந்தன.
பிள்ளையானுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அமல் கணசேனவுக்கும் இடையேயான உறவுகள் வளரத்தொடங்கின.
சுரேஷ் ஷாலே
இப்பொழுது சுரேஷ் ஷாலேயுடனான(இவர் இன்று இராணுவப் புலனாய்வுத் தலைவராக இருக்கிறார்) உறவு ஏற்படத்தொடங்கியது. டி.எம்.வி.பி.க்கு பொறுப்பாளராக சுரேஷ் ஷாலே இராணுவ புலனாய்வுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் மேயர் ஜேனரல் தர அதிகாரி.
கருணாவின் மக்கள் தொடர்பு பாராட்டத்தக்கதாக இல்லை. அவர் திடீர் திடீர் என ஏற்படும் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப இசைவாக்கமடையும் நுண்மாண் நுழைபுலமும், நெகிழ்வுத் தன்மையும், தாராளமனப்பான்மையும் கொண்டவர் அல்லர்.
தன்னை வியப்பதில் எப்பொழுதும் புழகாங்கிதம் அடைபவர். அவர் எப்போதுமே தன்னை ராணுவ தளபதி என்று நினைத்துக் கொள்பவர்.
„முட்டாள்தனமான அதிகாரிகளுக்கு நான் ஏன் தலைவணங்க வேண்டும் என்று நினைப்பவர். மற்றவர்களுடன் பேசுவதில் அவருக்கு உண்மையான மகிழ்ச்சி இருப்பதில்லை.
அவர் கோத்தபாய மற்றும் சரத் பொன்சேகாவுடன் மட்டுமே பேசுவார். அவர் விசுவாசமாக இரார் என்று இராணவப் புலனாய்வுப் பிரிவு கருதியது.
பிள்ளையான் எல்லோருடனும் பழகக்கூடியவர். அவர் மிக உயர்ந்த கேட்கும் திறன் கொண்டவர். தமக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பார் என இராணுவ புலனாய்வுப் பிரிவு நம்பியது.'
(பிள்ளையானுக்கென்று வள்ளளுவர் ஒரு குறளைப் பாடியுள்ளார்.
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் வியந்து.-குறள் 1080-
கயவர், எதற்கு உரியவர்? அவருக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதிலிருந்து தப்பத் தம்மைப் பிறர்க்கு எவ்வளவு விரைவாக விலைகூறி விற்கமுடியுமோ அவ்வளவு விரைவாகத் தம்மை விற்றுவிடுவர்.)
முரண்பாடோடு உடன்பாடுடைய கருணா, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை நான் ஒத்துழைத்து ஒருங்கிணைக்க வேண்டும்.
கரணம் தப்பினால் மரணம். அக்கால கட்டத்தில் கொழும்பிலும் கொழும்புக்கு வெளியிலும் பல அரசியல் படு கொலைகளும், எண்ணற்ற இனந்தெரியாத கொலைகளும், ஆட் கடத்தல்களும் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைளும் இடம் பெற்றன.
இவைகள் இராணுவ புலானாய்வுப் பிரிவின் உத்தரவக்கு அமைய ரி.எம்.வி.பி யினால் மேற்கொள்ளப் பட்டதை நான் பின் நாட்களில் அறிந்து கொண்டேன்: இனந்தெரியாத கொலைகள் இலங்கையின் கலாச்சாரமாகப் படிமமாகி விட்டது. அது இல்லாமல் இனிமேல் ஒரு காலமும் இலங்கை அரசியல் நகராத நிலை ஏற்பட்டுவிட்டது.
1987 ல் இந்திய அமைதிப்படையுடனான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெடித்த பொழுது பிரேமதாசாவின் ஒத்தாசையோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தலைநகரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரோடு சேர்ந்து தமது செலவீனங்களுக்காக ஆட்களைக் கடத்திப் பணம் பறிக்கும் வழக்கமிருந்தது.
கருணா புலி இயக்கத்திலிருந்து பிரிந்தபின் இந்தப் பணப்பறிப்பு வேலைகளையும் கடத்தல்களையும் கொலைகளையும் கருணா, பிள்ளையான் குழுவினர் தத்தெடுத்துக் கொண்டனர். இன்று வரை இதுவே நடைமுறையும் யதார்த்தமும்.
ஜனநாயகப் பாதையில் நம்பிக்கை கொண்டிருந்த நான் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத போதும் இதற்காக அவ்வமைப்பிலிருந்து வெளியேறினால் எனக்கும் எனது குடும்பத்துக்கும் உயிராபத்து ஏற்படும் என்ற அச்சத்தினால் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
-அசாத் மௌலானா-
தொடரும்...
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!