சூயஸ் கால்வாயின் சரித்திரம் (நிலமெல்லாம் ரத்தம் - 66)
20 Sep, 2026
வெளிநாடுகளுக்குப் பணமாற்றம் செய்வது, ஹவாலா போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு நிறையச் சம்பாதித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பைசாவையும் மிக முக்கியமாகக் கருதிய இனம் அது. வர்த்தகத்தில் நேர்மை என்பது அவர்கள் ரத்தத்தில் பிறந்த விஷயம். வர்த்தகம் தடைப்படாமல் நடப்பதற்குத்தான் லஞ்சம் கொடுப்பார்களே தவிர, மக்களை ஒரு போதும் ஏமாற்ற மாட்டார்கள். போலிச் சரக்குகளை விற்பது, சரக்குப் பதுக்கல், திடீர் விலையேற்ற நடவடிக்கைகள் இவையெல்லாம் ஐரோப்பாவில் பரவலாகிக் கொண்டிருந்தபோதுகூட, எந்த ஒரு யூதக் கடையிலும் நம்பிப் போய் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம். ஒரு சிறு ஏமாற்றம் கூட இருக்காது!
இவை ஒருபுறம் இருக்க, பத்தொன்பதாம் நூற்றாண்டில் யூத குலத்தில் சில மகத்தான சாதனையாளர்கள் உதிக்க ஆரம்பித்தார்கள். எந்தத் துறையில் இருக்கிறார்களோ, அந்தத் துறையின் மிக உயர்ந்த இடத்தை அடையக்கூடியவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். பொதுவாக யூதர்களுக்கு இழைக்கப்பட்ட எந்த ஒரு கொடுமையும் அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கவில்லை.
இந்தச் சாதனையாளர்களை வளைத்து, அரவணைத்து அவர்களின் வெற்றிக்காக உழைக்கக்கூடியதாக இருந்தது யூதகுலம். சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். நாம் ஒரு சாதனை செய்யக்கூடியவர்களாக இருக்கிறோம் என்றால் நமது குடும்பம் நம்மை ஊக்கப்படுத்தலாம், உற்சாகப்படுத்தலாம். ஒருவேளை மாநில அரசு கவனித்து ஏதாவது உதவலாம். சாதனை செய்யப்பட்ட பிறகு தேசம் கொண்டாடலாம், பெருமைப்படலாம். ஆனால், ஒரு சாதனையாளர் உருவாகிக்கொண்டிருக்கிறார் என்று கவனித்து, அந்த இனத்திலுள்ள அத்தனை பேருமே தோள்கொடுக்க முன்வருவார்களா?
யூதர்களிடம் மட்டும்தான் அது சாத்தியம். ஒரு யூதர் அரசியல்வாதியாக வருகிறார் என்றால் ஒட்டுமொத்த யூதர்களும் அவரை மட்டுமே ஆதரிப்பார்கள், சுத்தமாகப் பிடிக்காது என்றால் கூட. யாராவது ஒரு யூதர் கல்லூரிப் பேராசிரியர் ஆகிறார் என்றால் அங்குள்ள அத்தனை யூதர்களும் அவருக்குப் பின்னால் திரண்டு நிற்பார்கள். ஒருவர் அறிவியலில் முன்னேறுகிறார் என்றால், அவரது ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு யூதக் குடும்பமும் மாதம் தவறாமல் பணம் அனுப்பும். ஒரு யூத எழுத்தாளரின் புத்தகம் வெளியாகிறதென்றால், சந்தேகமில்லாமல் அந்தக் காலகட்டத்தில் எத்தனை படித்த யூதர்கள் இருக்கிறார்களோ, அத்தனை பிரதிகள் விற்றே தீரும்.
மேலோட்டமான பார்வைக்கு இவற்றின் வீரியம் சட்டென்று புரியாது. யூதர்கள் தமக்காகவோ, தமது குடும்பத்தினருக்காகவோ கவலைப்பட்டதில்லை. மாறாக, தமது இனத்துக்காக மட்டுமே சரித்திரம் முழுவதும் கவலைப்பட்டு, உழைத்து வந்திருக்கிறார்கள். உலகில் வேறெந்த ஒரு இனமும் இப்படி இருந்தது கிடையாது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறந்தவுடனேயே ஐரோப்பாவின் மேற்கு தேசங்களில் யூதர்களின் செல்வாக்கும் வாழ்க்கை நிலையும் நம்பமுடியாத அளவுக்கு உயரத் தொடங்கியிருந்தது. ஆங்காங்கே இனப்படுகொலைகள், ஊரைவிட்டுத் துரத்தல் போன்ற காரியங்கள் நடந்துகொண்டிருந்தன என்றபோதும் யூதர்களின் அந்தஸ்தும் அதற்குச் சமமாக வளரத்தொடங்கியிருந்தது. காரணம், ஐரோப்பிய மறுமலர்ச்சி. பலதேசங்களில் ஜனநாயகம் வரத் தொடங்கியிருந்தது அப்போது. பொருளாதாரக் கெடுபிடிகள் தளர்த்தப்படத் தொடங்கின. வர்த்தகம் சுலபமாகத் தொடங்கியிருந்தது.
ஜனநாயகம் எங்கெல்லாம் முளைவிட்டதோ, அங்கெல்லாம் யூதர்கள் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சிறு சிறு உள்ளூர்த் தேர்தல்கள் முதல் மாகாண சட்டசபை, தேசியத் தேர்தல்கள் வரை அவர்கள் போட்டியிட ஆரம்பித்தார்கள். தேர்தல்களில் போட்டியிடும் யூதர்களுக்காக உலகெங்கிலுமிருந்த யூதர்கள் உதவி செய்ய ஆரம்பித்தார்கள். யூத வர்த்தகர்கள் கணக்கு வழக்கில்லாமல் பணம் கொடுத்தார்கள். பணம் கொடுக்க முடியாத நிலையில் இருந்தவர்கள், துண்டேந்தி வசூல் வேட்டை நடத்தி உடலுழைப்பைத் தந்தார்கள்.
தேர்தல் தோல்விகளால் அவர்கள் துவளவில்லை. மாறாக, வாழப்போன தேசங்களில் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அதையும் ஒரு சாதக அம்சமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
1848-ம் ஆண்டு யூதர்கள் தமது சரித்திரத்திலேயே முதல் முறையாக தமது பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். இது நடந்தது பிரான்ஸில். இதனைத் தொடர்ந்து 1860-ம் ஆண்டு ஹாலந்தில் ஒரு யூதர் அமைச்சரானார். 1870-ல் இத்தாலியில். எல்லாவற்றுக்கும் சிகரமாக 1868-ம் ஆண்டு பெஞ்சமின் டி’ஸ்ரேலி என்ற யூதர் பிரிட்டனின் பிரதமராகவே ஆகுமளவுக்கு அங்கே யூதர்களின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது!
ஆங்கிலேயர்களால் ஜீரணிக்கவே முடியாமல் போனது. தம்மாலானவரை அவர்கள் யூதர்களை அவமானப்படுத்தி கார்ட்டூன்களும் கேரிகேச்சர்களும் போட்டுப்பார்த்தார்கள். ஜனநாயகத்தின் மிகப்பெரிய பிரச்னை இதுதான் என்றே சொன்னார்கள். ஆனாலும் யூதர்கள் எதையும் கண்டுகொள்ளவே இல்லை. பெஞ்சமின் டிஸ்ரேலியே தம்மைக் குறித்த கேலிச்சித்திரங்களை ரசித்துப் பாராட்டக்கூடியவராக இருந்தார்!
பின்னால் 1878-ல் பிஸ்மார்க், “பெஞ்சமினை ஒரு யூதராகப் பார்க்காதீர்கள், மனிதராகப் பாருங்கள்” என்று கேட்டுக்கொண்டதும் பிரிட்டன் அரைமனத்துடன் அதற்குச் சம்மதித்ததெல்லாம் சரித்திரம். யூதர்களின் விடாமுயற்சிக்கு பெஞ்சமின் டிஸ்ரேலியின் இந்த வெற்றி ஒரு மகத்தான உதாரணம்.
பெஞ்சமின் டிஸ்ரேலியின் முன்னோர், இத்தாலியைச் சேர்ந்தவர்கள். (உண்மையில் எந்த யூதரும் இப்படிச் சொல்வதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்! ‘எங்கள் முன்னோர் பாலஸ்தீனைச் சேர்ந்தவர்கள்’ என்றே அவர்கள் சொல்லுவார்கள்.) அங்கிருந்து இடம் பெயர்ந்து ஸ்பெயினில் வாழ்ந்துகொண்டிருந்தவர்கள், பதினைந்தாம் நூற்றாண்டில் அகதிகளாக பிரிட்டனுக்கு ஓடிவந்தவர்கள். பெஞ்சமினின் குடும்பத்தினர் அத்தனைபேரின் பெயருடனும் ‘இஸ்ரேலி’ என்கிற துணைப்பெயர் ஒட்டிக்கொண்டிருக்கும். அன்றைக்கு இத்தாலியில் வாழ்ந்த அத்தனை யூதர்களுக்குமே இந்தத் துணைப்பெயர் உண்டு. பெஞ்சமின் மட்டும் கொஞ்சம் ஸ்டைலாக டிஸ்ரேலியின் என்று பெயரை மாற்றிக்கொண்டார். அது பின்னால் டிஸ்ரேலி என்றே ஆகிவிட்டது!
பெஞ்சமினின் தந்தை ஐஸக் இஸ்ரேலி, லண்டனில் இருந்த ஒரு யூத தேவாலயத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தார். அவரை கிறிஸ்துவராக மாற்றுவதற்கு நிறையப்பேர் முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர் மாறவில்லை. ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் தமது குழந்தைகளுக்கு மட்டும் ‘ஒரு பாதுகாப்புக் கருதி’ ஞானஸ்நானம் செய்விக்க அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
பெஞ்சமின் உட்பட அவரது சகோதரர்களுக்கு அப்படியாக ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பெஞ்சமின் ஒரு யூதராகவே வாழ்ந்தவர். அரசியலில் நுழைவதற்கு முன்னால் சிறுகதைகள், நாவல்களெல்லாம் எழுதிப்பார்த்திருக்கிறார். கிறிஸ்துவர் அல்லாத யாரும் பிரிட்டனின் பாராளுமன்றத்துக்குள் நுழைய முடியாது என்கிற சூழல் இருந்த காலத்தில் அவர் அந்த ஞானஸ்நானத்துக்குச் சம்மதிக்காதிருந்தால், பாராளுமன்ற உறுப்பினராகவோ, பிரதம மந்திரியாகவோ ஆகியிருக்கவே முடியாது என்பதையும் பார்க்க வேண்டும்.
பிரிட்டன் என்றில்லை. இன்னபிற ஐரோப்பிய தேசங்களிலும் இப்படியான நிலைமைதான் அன்று இருந்திருக்கிறது. அடிமைகள் போலவும் நாடோடிக் கும்பல்கள் போலவுமே கருதப்பட்ட யூதர்கள், ஒரு வீடுகட்டி உட்கார்ந்ததோடு மட்டுமல்லாமல், தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொண்டு அரசியலில் ஈடுபட்டு வெற்றியும் பெறத்தக்க வகையில் உயர்வதற்கு அந்த விலையைக் கொடுத்தே தீரவேண்டியிருந்தது.
ஆனால் யாரும் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே மதம் மாறியதில்லை. எல்லாமே வாழ்க்கைக் காரணங்களுக்காகத்தான். அதாவது உயிருடன் வாழ்வது என்கிற அடிப்படைக் காரணம். பிறகு, கொஞ்சம் வசதியாக வாழலாமென்கிற இருப்பியல் காரணம். இதற்கு மேற்பட்ட வர்த்தக, பொருளாதாரக் காரணங்கள் இருக்கவே செய்தன என்றாலும், ஐரோப்பிய தேசங்களில் கிறிஸ்துவத்துக்கு மாறிய யூதர்களின் எண்ணிக்கை எப்படியும் பல லட்சங்களைத் தாண்டவே செய்கிறது.
ஜெர்மனியில் அப்படித்தான் ஒரு யூதக்குடும்பம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறிஸ்துவத்துக்கு மாறியது. அப்படி மாறியதன்மூலம் அந்தக் குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் கொஞ்சம் உயரலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படியன்றும் பிரமாதமாக உயர்ந்ததாகத் தெரியவில்லை.
ஆனால், அந்த யூதக் குடும்பத்தில் பிறந்து கிறிஸ்துவத்துக்கு மாறிய குழந்தைகளுள் ஒன்று பிற்காலத்தில் மானுட குலத்துக்கே நன்மை செய்யக்கூடியவராக மலர்ந்தார். தமது யூத, கிறிஸ்து அடையாளங்கள் அனைத்தையும் துறந்து, ஒரு மனிதனாக மட்டுமே அடையாளம் காணப்பட்ட அவர் பெயர் காரல் மார்க்ஸ்.
வருடம் 1881. பார்த்த இடத்திலெல்லாம் யூதர்களை வெட்டினார்கள். நிற்கவைத்துக் கொளுத்தினார்கள். யூத வீடுகள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், நிறுவனங்கள் எதுவுமே மிச்சமில்லை. ரத்தவெறி தலைக்கேறிவிட்ட ரஷ்யர்கள் (நிலமெல்லாம் ரத்தம் – 37)
பா. ராகவன்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!