இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
ஒப்பரேசன் பூமாலையை வைத்து ஜே.வி.பி.யும் பிற கட்சிகளும் ஜே.ஆர். அரசாங்கத்துக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் போராட்டங்களை தீவிரப்படுத்திய சூழலில், 1987 ஜூலை 29ஆம் திகதி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பு வந்து இந்திய- - இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டதும், மீண்டும் இந்திய போர் விமானங்களும், அன்டனோவ் போக்குவரத்து விமானங்களும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் தரையிறங்கின.
அது இந்தியாவின் ஆழமான திட்டத்துடனான ஒரு தரையிறக்க நடவடிக்கை.
இதன்போதும், இலங்கையின் இறைமையை இந்தியா மீறி விட்டதாக குற்றம்சாட்டினார்கள்.
ஆனால். இந்தமுறை அப்படியல்ல – ஜே.ஆரின் ஒப்புதலுடன் தான் இந்தியப் படைகள் தரையிறங்கின.
அவர்கள் தனியானதொரு திட்டத்துடன் நீண்டகாலம் நிலைகொள்வதற்குத் தயாராக இருந்தனர்.
இந்தியப் படைகளை வெளியேற்ற ஜே.வி.பி. தெற்கில் ஆயுதப் போராட்டத்தை நடத்தியது.
வடக்கு, கிழக்கில் புலிகள் நேரடியான இந்தியப் படையினருடன் மோதினார்கள்.
இன்னொரு பக்கம், 1998இல் ஆட்சிக்கு வந்த பிரேமதாசவும் இந்தியப் படைகளை வெளியேற நெருக்கடிக்ளைக் கொடுத்தார்.
அதன் பின்னர் இந்தியா வேறு வழியின்றி தனது படைகளை திருப்பி அழைத்துக் கொண்டது.
2004 டிசெம்பர் 26ஆம் திகதி சுனாமி பேரழிவை அடுத்து இந்தியா தனது படைகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்பியது.
சுனாமியைத் தொடர்ந்து, இலங்கை சர்வதேச உதவியைக் கோரிய போது, இந்தியா விரைவாக பதிலளித்தது.
பேரழிவு ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குள் இந்திய கடற்படை மருத்துவக் குழு கொழும்புக்கு வந்தது.
இந்தியா மொத்தம் 14 கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களையும், கிட்டத்தட்ட 1,000 இராணுவத்தினர் மற்றும் பல டசின் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களையும் அனுப்பியது.
உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பது, உடல்களை மீட்பது, மருத்துவ உதவி வழங்குவது, உணவு மற்றும் பொருட்களை விமானத்தில் வீசுவது மற்றும் காலி, திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை மதிப்பிடுவதில் இந்தியப் படைகள் ஈடுபட்டன.
ஆனால், 1987இல் இந்தியப்படைகள் உணவுப் பொதிகளை யாழ்ப்பாணத்தில் வீசிய போது- இந்தியப் படைகள் வடக்கு கிழக்கில் வந்திறங்கிய போது தெற்கில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் யாரும், சுனாமிக்குப் பின்னர் இந்தியப் படைகள் வந்திறங்கியதற்கு எதிர்ப்பு வெளியிடவில்லை.
ஜே.வி.பி.யினர் கூட அடக்கியே வாசித்தனர். அப்போது ஆட்சியில் இருந்த சந்திரிகா அரசாங்கத்தில் அவர்களும் பங்காளிகளாக இருந்தனர்.
அதன் பின்னரான காலகட்டத்தில் இலங்கைக்கு முதலில் ஓடி வந்து உதவும் நாடாக இந்தியா இருந்து வருகிறது.
2020இல் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தியா வக்சின் மைத்ரி என்ற பெயரில், மனிதாபிமான தடுப்பூசிகளை வழங்கியது.
அப்போதும் அதனை யாரும் எதிர்க்கவில்லை.
கோட்டாபய ராஜபக் ஷவின் காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, இந்தியா உதவிகளை அள்ளி வழங்கியது.
அதற்கும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
இப்போது 'தித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபட இந்தியா 'சாகர் பந்து' என்ற நடவடிக்கையை முன்னெடுக்கிறது.
புயல் தாக்கிய போது, கொழும்பு துறைமுகத்தில் தரிந்து நின்ற இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பல் உதவிப் பொருட்களை வழங்கியதுடன் இரண்டு ஹெலிகொப்டர்களையும் தேடுதல் மீட்பு, உதவிப் பணிகளில் ஈடுபடுத்தியது.
1987ஆம் ஆண்டு ஒப்பரேசன் பூமாலைக்கான திட்டத்தை தயாரித்து, இரண்டு நாட்களுக்கு முன்னரே விமானங்களை பெங்களூருவுக்கும் சென்னைக்கும் அனுப்பி வைத்த - ஆக்ரா விமானப்படைத் தளம், சாகர் பந்து நடவடிக்கையிலும் தீவிர பங்கெடுக்கிறது.
அங்கிருந்து உதவிப் பொருட்களை மாத்திரம் இந்தியா அனுப்பவில்லை. உதவி மீட்புக்குழுவினரை அனுப்பியது.
முழு வசதிகளையும் கொண்ட இரண்டு நடமாடும் மருத்துவமனைகளையும், அவற்றுக்கான மருத்துவக் குழுவினரையும் அனுப்பியது.
கடற்படைக் கப்பல்களிலும், உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தது.
ஒப்பரேசன் பூமாலைக்கு முன்னர், புதுடெல்லியில் இருந்த இந்தியத் தூதுவரை அழைத்து தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தமுறை இந்தியப் பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைத் தொடர்பு கொண்டு, ஆறுதல் கூறியிருக்கிறார்.
இலங்கையின் மீட்சிக்கான உதவிகளை வழங்கத் தயார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆக, நான்கு தசாப்தங்களுக்குள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இப்போது இந்திய விமானங்கள் வருவதையோ, இந்தியப் படையினர் இங்கு மீட்பு தேடும் பணிகளில் ஈடுபடுவதையோ யாரும் எதிர்க்கவில்லை.
இறையாண்மையின் மீதான தாக்குதலாக எடுத்துக் கூறவில்லை. இது ஏன்?
அப்போது எதிர்த்த ஜே.வி.பி. இப்போது ஆட்சியில் இருக்கிறது என்பது ஒரு காரணம்.
இன்னொரு காரணம், அப்போது இந்திய விமானங்கள் வீசிய உதவிப் பொருட்கள் தமிழர்களுக்காக வீசப்பட்டவை.
ஆனால், இப்போது இந்தியாவின் உதவிகள் பெரும்பாலும், தென்பகுதியை மையப்படுத்தியவை.
அதனால், இறையாண்மை பற்றிய அச்சங்கள் அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கிறது.
என்.கண்ணன்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!