ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
முதற்பாதியில் உதயநிதிக்கும் ஆத்மிகாவிற்கும் இடையேயான காதல் காட்சிகள், காதல் பாடல், காதல் விவகாரம் தெரிந்ததால் ஆத்மிகாவின் வீட்டில் ஏற்படும் பிரச்னை, சதீஷின் காமெடி என ஆர்ப்பாட்டம் இல்லாமல் வழக்கமான பாணியில் கதை நகர்கிறது.
பூமிகாவின் வருகைக்குப் பின், திரைக்கதை வேகம் எடுக்கிறது. ஆனால், ஒரு சஸ்பன்ஸ் த்ரில்லருக்கான திரைக்கதையை முழுக்க முழுக்க நம்பத்தன்மை இல்லாமலும், வலிந்து திணிக்கப்பட்ட திருப்பங்களாலும் எழுதியிருக்கிறார் இயக்குநர்.
கடைசிவரை புதிய கதாபாத்திரங்கள் வந்துகொண்டே இருப்பது முடிச்சுகளை அவிழ்க்கும் இடத்தை சுவாரஸ்யமில்லாமல் மாற்றிவிடுகிறது.
டபுள் ஆக்ஷன் என இறுதியில் ட்விஸ்ட் வைப்பது, மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை ஊறுகாய் போலக் கதையில் சேர்த்திருப்பது என வழக்கொழிந்த த்ரில்லர் டெம்ப்ளேட்டுக்குள் திருப்பங்களை நிரப்பி, கதையைக் கொண்டு சென்றிருக்கிறார்.
இந்தச் சுவாரஸ்யமற்ற காட்சிகளோடு, லாஜிக் ஓட்டைகளும் இணைந்து கொள்வதால், பார்வையாளர்களுக்கு அயற்சி மட்டுமே ஏற்படுகிறது.
கதை நிகழும் முக்கிய சாலைகளில் சி.சி.டி.வி கேமரா கூட இருக்காதா என ஒரு பக்கம் கேள்வி எழுந்தால், மறுபக்கம், சில காட்சிகளில் ஆதாரமாகக் காட்டப்படும் சி.சி.டி.வி கேமரா காணொலிகள் மிட், க்ளோஸப், லாங் ஷாட் பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டிருப்பது போலக் காட்டப்படுவது என்ன லாஜிக்கோ! அப்படியே அதிலேயே ஆடியோவும் இணைத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.
உதயநிதியையும் பிரசன்னாவையும் பின்தொடரும் மர்ம நபர் எப்படி அவர்களுக்கு முன்னாலேயே எல்லா இடங்களுக்கும் சென்று கேமராவுடன் தயாராக இருக்கிறார் என்ற கேள்வி, பார்வையாளர்களுக்குக் குழப்பத்தை மட்டுமல்ல சிரிப்பையும் வரவழைக்கிறது.
மேலும், சடலத்தை வைத்துக் கொண்டு, இரண்டு சாமானியர்கள் இவ்வளவு அஜாக்கிரதையாக யோசிப்பார்களா என்ற கேள்வி படம் முழுவதுமே நம்மோடு பயணிக்கிறது. பூமிகாவிற்கான பின்கதையும் பல படங்களில் பார்த்த ஒன்றுதான்.
பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளன. அதற்கு, ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கே கைகொடுத்திருக்கிறது.
படத்தொகுப்பில் சான் லோகேஷ் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். வேகமெடுக்க வேண்டிய காட்சிகளிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து, தோய்வைத் தந்திருக்கிறார்.
திரைக்கதை சோபிக்காமல் விட்ட இடங்களை, தன் பின்னணி இசையால் சரி செய்ய முயன்றிருக்கிறார் சிந்து குமார். இதில், ஒரு சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
லாஜிக் பிழைகள், சுவாரஸ்யம் சேர்க்காத ட்விஸ்ட்கள், கதையின் முடிவு வரை புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கும் கதாபாத்திரங்கள் உள்ளிட்ட காரணங்களால் படம் நம்பகத்தன்மையை இழந்து கண்ணை மட்டுமல்ல, இந்தக் கதையையும் நம்பாதே என்று சொல்லிச் செல்கிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!