news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கிண்ணியாவில் 13 வயதான சிறுமி துஷ்பிரயோகம்: கல்முனையில் கைதான குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறை!

19 Dec, 2020
                                                                                                           திருகோணமலை – கிண்ணியா பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் புதன்கிழமை உத்தரவிட்டார். இந்த வழக்கின் குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், கல்முனை கடற்கரை பகுதியில்  தலைமறைவாகியிருந்தபோது  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அதனைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், குற்றவாளிக்கு 75,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 18 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் அறிவித்துள்ளார். கிண்ணியாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி 13 வயதான சிறுமி 50 வயது நபரினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போது பிரதிவாதி தலைமறைவாகினார். எனினும், பிரதிவாதியின்றி வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 13 வயது சிறுமி குழந்தை பிரசவித்துள்ளதுடன் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் பிரதிவாதியே குழந்தையின் தந்தை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார். இதனடிப்படையில், கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதியை குற்றவாளி என அறிவித்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். இந்த நிலையில், உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கல்முனையில் தலைமறைவாகியிருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!