12 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனா சென்றார் வடகொரிய ஜனாதிபதி
25 Oct, 2026
டிரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்தால், அவர் வரலாற்றில் இடம் பெறுவார் என்று ஒரு ரஷ்ய செய்தித்தாள் எழுதியுள்ளது.
'சீன அச்சுறுத்தல்' என்ற போலிக் காரணத்தைப் பயன்படுத்துவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சீனா வலியுறுத்துகிறது.
கிரீன்லாந்து தொடர்பான அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்குச் சீனா பதிலளித்துள்ளது.
அமெரிக்கா தனது சொந்த நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்காக, 'சீன அச்சுறுத்தல்' என்ற போலிக் காரணத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை (ஜனவரி 19) தெரிவித்தார்.
"ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலான சர்வதேசச் சட்டமே, தற்போதுள்ள சர்வதேச ஒழுங்கின் அடித்தளமாகும். அது நிலைநிறுத்தப்பட வேண்டும்," என்று செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதிபர் டிரம்பின் சமீபத்திய அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே குவோ இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
'பிபிசி மானிட்டரிங்' தகவல்படி, டிரம்பின் கிரீன்லாந்து திட்டம் மற்றும் அவரது அறிக்கைகள் தொடர்பாகச் சீன ஊடகங்களில் இரண்டு முக்கிய விஷயங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
முதலாவதாக, சீனாவை ஓர் அச்சுறுத்தலாகச் சித்தரிப்பதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது,
இரண்டாவதாக, இதற்கு எப்படிப் பதிலளிப்பது என்பது குறித்த ஐரோப்பாவின் 'நெருக்கடியை' முன்னிலைப்படுத்துவது.
ஜனவரி 12-ஆம் தேதி சீன அரசு நடத்தும் 'குளோபல் டைம்ஸ்' நாளிதழில் வெளியான தலையங்கம் ஒன்றில், கிரீன்லாந்து தொடர்பாக சீனாவை 'அச்சுறுத்தல்', 'வளங்களைக் கொள்ளையடிக்கும்' அல்லது 'விதிமீறும் நாடு' என்று விவரிக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அறிக்கைகளைச் சீனா கடுமையாக எதிர்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக ஆர்க்டிக் காலநிலையின் 'பாதுகாவலராக' சீனா ஆற்றி வரும் 'மகத்தான பங்கை' இத்தகைய அறிக்கைகள் புறக்கணிக்கின்றன என்று அந்த கட்டுரை தெரிவிக்கிறது.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் தனது 'ராணுவ விரிவாக்கம், ஒருதலைப்பட்சமான வளச் சுரண்டல் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் முயற்சிகளை' மறைப்பதற்காகவே அமெரிக்கா சீனாவை ஆர்க்டிக்கிற்கு ஓர் அச்சுறுத்தலாகச் சித்தரிக்கிறது என்று 'குளோபல் டைம்ஸ்' கட்டுரை கூறியது.
ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் செயல்பாடுகள் சீராக அதிகரித்து வருவதாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு ஆணையம் (NORAD) சிபிசி-யிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கட்டுரை வந்துள்ளது. நேட்டோ (NATO) தலைவர் மார்க் ரூட்டே-வும் ஜனவரி 13-ஆம் தேதி ஆர்க்டிக்கில் சீனாவின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பதற்றமும் ஒரு முக்கியமான பிரச்னையாக இருந்து வருகிறது.
ஜனவரி 9-ஆம் தேதி சர்வதேச நேயர்களுக்கான சீன அரசு ஊடகமான சிஜிடிஎன்-இல் (CGTN) வெளியான ஒரு கட்டுரை, கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், சர்வதேச அமைப்பு மற்றும் நேட்டோ மீதான நம்பகத்தன்மையின் 'அடிப்படை முறிவை' சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்தது.
இந்த நெருக்கடி டென்மார்க்கின் இறையாண்மைக்கான இறுதிச் சோதனை என்றும், "அனைத்து நாடுகளுக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கை" என்றும் அந்த கட்டுரை கூறியது.
ரஷ்யா மகிழ்வது ஏன்?
ஆனால் ரஷ்யா டிரம்பிற்கு இந்தப் புகழாரம் சூட்டுவது ஏன் ? வெளிப்படையாகவே ஊக்குவிப்பது ஏன்?
ஸ்டீவ் ரோசன்பெர்க்கின் கூற்றுப்படி, தற்போதைய சூழ்நிலையிலிருந்து கிடைக்கும் மிகப்பெரிய பலன்களை ரஷ்யா பார்ப்பதே இதற்குப் பின்னால் உள்ள காரணமாகும்.
கிரீன்லாந்து மீதான டிரம்பின் ஆர்வம், அந்தத் தீவைக் கையகப்படுத்துவதில் அவர் காட்டும் உறுதி மற்றும் அந்தத் திட்டத்தை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பதாக அவர் விடுத்த அச்சுறுத்தல் ஆகியவை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான உறவுகளிலும், நேட்டோவிலும் மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கத்திய கூட்டணியை பலவீனப்படுத்தும் அல்லது பிளவுபடுத்தும் எதுவாக இருந்தாலும் அது ரஷ்யாவின் பார்வையில் ஒரு பெரிய சாதகமான விஷயமாகும்.
கிரீன்லாந்து குறித்த ஒரு கட்டுரையில், ரஷ்ய நாளிதழான 'மாஸ்கோவ்ஸ்கி கொம்சோமோலெட்ஸ்' (Moskovsky Komsomolets) கிண்டலாக ஒரு வரியை எழுதியது:
"ஐரோப்பா முற்றிலும் குழப்பமடைந்துள்ளது, உண்மையைச் சொல்வதானால், இதைப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது."
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!