இதேவேளை, சிவன் ஆலயமொன்று அங்கிருந்ததாகவும், அண்மையில் கிருஷ்ணன் ஆலய நிர்வாகிகள் அந்த ஆலயம் இருந்த பகுதிக்கு கடற்படையினருடன் சென்றதாகவும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறியை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் கருத்து வெளியிட்டனர்.

''சிவன் ஆலயம் இருந்த இடத்தில் அன்றி அதற்கு அருகிலே ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

1990 வரை சிவன் ஆலயத்தில் பூஜைகள் இடம்பெற்றதாகவும் எக்காலப்பகுதியில் ஆலயம் உடைந்தது என்ற தகவல் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனியாருக்கு சொந்தமான காணி சுவீகரிக்கப்பட்டு அந்த இடத்திலே ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதாகவும், ஆலய காணி அதற்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் ஆலயத்தின் பல பகுதிகள் சேதமடைந்து, ஆலயம் இருந்ததற்கான அடையாளங்கள் அங்கிருப்பதாக கிருஷ்ணன் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.

கிருஷணன் ஆலயத்தின் சில பகுதிகளும் சேதமாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர், மாளிகை உட்பட சுற்றியுள்ள முழுமையான காணி நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழே கொண்டுவரப்பட்டுள்ளது" என ஜனாதிபதி தரப்பினர் கூறுகின்றனர்.

வடபகுதிக்குப் பொறுப்பான கடற்படை கட்டளைத்தளபதி அட்மிரல் அருண தென்னகோன் இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில், மாளிகையின் சொத்துக்களின் பாதுகாப்பிற்காக கடற்படை அங்கு இருப்பதாகவும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழே இந்த பிரதேசம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

கடற்படை பிரதான தளமும் இதற்கு அருகிலே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

யாழ்ப்பாணம் இராணுவக்கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சொர்ண போதொட்ட குறிப்பிடுகையில், குறித்த பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகைக்கான தேவையொன்று இல்லை என்பதை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் மேற்கொண்ட யாழ்ப்பாண விஜயத்தின்போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த மாளிகை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறந்த தரத்திலான ஹோட்டல் ஒன்றாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை முன்வைத்திருந்தார்.

யாழ்ப்பாணம் முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் இந்த பிரதேசம் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இராணுவம் அங்கு எந்தவித நிர்மாணங்களை மேற்கொள்ளவோ அழிக்கவோ இல்லை என்றும் குறிப்பிட்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.