குடும்ப தகராறில் வீடு தீவைத்த தந்தை
அநுராதபுரத்தில் தந்தை, மகள், தாய் உயிரிழப்பு – மூவர் படுகாயம்
அநுராதபுரம் – கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் இடம்பெற்ற கொடூர குடும்பத் தகராறு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக, தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், தந்தையும் 13 வயது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 36 வயது தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை நடந்த கோர சம்பவம்
இந்த சம்பவம் நேற்று (06) அதிகாலை சுமார் 2 மணியளவில் நடைபெற்றுள்ளது. தீ விபத்தில் சிக்கிய 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயது பாட்டி ஆகியோர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தின் பின்னணி
பொலிஸார் தெரிவிப்பதன்படி, தந்தை வீட்டிற்கு தீ வைத்த போது, வீட்டில் இரண்டு மகள்கள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே இருந்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த 20 வயது மகன் உடனடியாக வீட்டிற்கு வந்து, தாய் மற்றும் சகோதரிகளை காப்பாற்ற முயன்ற போது, அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியான குடும்ப வன்முறை
விசாரணைகளில், தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியைத் தாக்கி வந்துள்ளார் என்பதும், இதன் காரணமாக இருவருக்கிடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னரும் கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் பலமுறை முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு, இரு தரப்பினரும் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணை
இந்த கொடூர சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!