அருள் விக்னேஷ் மீது FIR: ``அரசு வழக்கறிஞரே, யாரையும் பாதுகாக்க முயற்சிக்காதீர்கள்" - உயர் நீதிமன்றம்
24 Nov, 2026
இப்பொழுது அமெரிக்கத் தலைமையின் நகர்வுகளுக்கு சவாலாக அமைந்திருக்கக்கூடிய இந்து சமுத்திரத்தின் கிழக்கே தென்கிழக்காசிய பிராந்தியத்திலும் கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியை உருவாக்கும் திட்டத்தில் நாற்கர நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா அதிக பிரயத்தனம் செய்து வருகிறது .
இதற்கு ஏற்ப, நாற்கர நாடுகளுடன் ஆசியான் நாடுகளை இணைத்துக் கொள்வதற்கு மிகப் பெரிய அளவில் நகர்வுகள் இடம் பெறுகின்றன. ஆனால், தென் கிழக்காசிய நாடுகளான ஆசியான் கூட்டு நாடுகள் தயங்கி வருகின்றன.
இதற்கு முக்கிய காரணம் நாற்கர நாடுகளுடன் ஆசியான் நாடுகள் இணைந்து செயற்படுவதானது ஆசிய நாடுகள் மத்தியிலான நேட்டோ அமைப்பு போன்ற ஒரு நிலையை உருவாக்கிவிடும் என்பது ஆசியான் நாடுகளின் பார்வையாக உள்ளது.
நேட்டோ அமைப்பானது அமெரிக்கத் தலைமையிலான வடஅத்திலாந்திக் பிராந்திய நாடுகள் சார்பான அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நாற்கர நாடுகளுடன் ஆசியான் நாடுகள் இணைந்த ஒரு கூட்டு, சீன உறவில் ஆசியான் நாடுகளுக்கு விரிசல் ஏற்படுத்தும் வகையில் மாற்றப்படலாம் என்பது இங்கே முக்கியமானதாகும்.
இதனால் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியில் 1960கள் மற்றும் 70கள் போன்று மீண்டும் பதட்ட நிலை கொண்ட பிராந்திய ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடிய அரசியல் தோற்றுவிக்கப்படலாம் என்பது ஆசியான் நாடுகளின் பார்வையாக உள்ளது.
ஆனால், நிலைமையை எவ்வாறாயினும் சாதகமாக பயன்படுத்த முயலும் வொஷிங்டன் நிர்வாகம், தெற்காசிய நாடுகள் மத்தியில் அமெரிக்க நலன் களுடன் ஒத்துழைக்கக் கூடிய தலைமைத்துவங்களை தெரிந்தெடுத்து, அந்த நாடுகளின் கடற்படைகளுக்கு முறைசாராவகையில் கடல் ரோந்து நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தல் ஆகியவற்றில் திறன் வலுவாக்கும் நகர்வுகள் என்பதன் பெயரில் தமது மூலோபாயங்களை நகர்த்தும் வேலைகளை ஆரம்பித்துள்ளது.
தெற்காசிய நாடுகளின் கடற்கலன்களை பழுதுபார்ப்பதற்கும், பரிசோதிப்பதற்கும், கடலடி தொலைதொடர்பு கேபிள்களை பதிப்பதற்கும் சீன உதவிகளை நாடி செல்வதை தடுக்கும் முகமாக, நாற்கர நாடுகளின் அங்கத்துவ நாடான ஜப்பானின் கடற்கலன்கள் தயாரிப்பு நிறுவனங்களின் துணையுடன் கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில், கூட்டு வளங்களின் பங்கீடுகளை ஏற்படுத்துவதன் வாயிலாக தெற்காசிய நாடுகள் பலவற்றை நாற்கர நாடுகளின் பால் சார்ந்திருக்க வைக்கும் அதேவேளை, சீன கடற்கலன்களை இப்பிராந்தியத்தில் கட்டுப்படுத்தும் நிலையை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பமாகி உள்ளன.
இவ்வாறு பல்வேறு மூலோபாய நகர்வுகள் ஊடாக தனக்கு சார்பான நாடுகளை இணைத்து கூட்டுகளை உருவாக்கிக் கொள்வதில் வொஷிங்டன் அதிகரித்த கரிசனை கொண்டிருந்தாலும், ஆசியான் நாடுகளின் நம்பிக்கையை பெறுவதில் இருக்கக்கூடிய பின்தங்கல்கள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் தலைமை ஆதிக்கத்தை பெற்றுக் கொள்வதற்கும் செல்வாக்கை உறுதி செய்து கொள்வதற்கும் பெரும் தடைக்கற்களாக உள்ளன.
ஆசியான் நாடுகள் பொதுவாக மேலைதேச சார்புடையனவாகவே பார்க்கப் பட்டாலும் உள்ளக முரண்பாடுகள் காரணமாக சீன செல்வாக்கு பெற்ற சமூகங்கள் ஊடாக உள்நாட்டில் பதட்டநிலை ஏற்படலாம் என்ற அச்சம் ஆசியான் நாடுகளுக்கு உண்டு.
இதனால் சீனாவுடனும் அமெரிக்காவுடனும் நேரடி தொடர்புகளை சமஅளவில் வைத்து கொள்ளவே ஆசியான் நாடுகள் விரும்புகின்றன . அல்லது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையில் அதிக நம்பிக்கை கொண்டனவாக உள்ளன.
‘குவாட்’ அமைப்பின் ஊடாக வொஷிங்டன் தனது தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம், இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையால் அதிகளவில் பின் தங்கி நிற்கிறது.
அதாவது, எத்தனை முறை சீன - இந்திய பதட்டநிலை உருவாகியபோதிலும் , பதட்ட நிலையை ஊக்கப்படுத்தாமல், பேச்சுவார்த்தை நிலைக்கு சீனாவும் இந்தியாவும் நகர்வதன் மூலம் அமெரிக்க நலன் சார்ந்த நிலையை தவிர்த்து வருகின்றன.
இந்திய - சீன பதட்டநிலையை மேலும் ஊக்கப்படுத்தும் நிலையை தவிர்த்து, இந்தியா, நாற்கர நாடுகளுடன் மென் அதிகார போக்கு நிலையை வைத்திருப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதானது, தென் கிழக்காசிய நாடுகள் மத்தியில் தனது செல்வாக்கை பேண முயல்கிறது. இதுவும் அமெரிக்க கெடுபிடி இராஜதந்திர முறைக்கு அப்பாற்பட்டதாக பார்க்கப்படுகிறது .
இந்தியாவின் மென் அதிகார போக்கு, தென் கிழக்காசிய நாடுகள் மத்தியில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளது. பாதுகாப்பு ஒப்பந்தங்களில் தலையிடாது சுதந்திர இராஜதந்திர கொள்கையில் இந்தியா தங்கி இருப்பதையே தென் கிழக்காசிய நாடுகள் அதிகம் வரவேற்பதாக தெரிகிறது .
ஆக, அமெரிக்கா தலைமையிலான நாற்கர நாடுகளின் தலைமைத்துவத்துக்கு தென் கிழக்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாத விவகாரமாகும். இந்தோ - பசுபிக் பிராந்தியத்தின் மத்தியில் தென் கிழக்காசிய நாடுகள் பூகோள ரீதியாக அமைந்திருப்பது இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் சர்வதேச தலைமைத்துவத்திற்கான சவாலை நிர்ணயிக்கும் நிலையில் தென் கிழக்காசிய நாடுகள் உள்ளன.
லோகன் பரமசாமி
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!