சிறிகொத்தவில் முக்கிய தீர்மானங்கள்
ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டிணைப்பில் புதிய நகர்வு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (07.01.2026) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) இடையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல இணைந்து பணியாற்ற செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
இந்த உடன்பாட்டின் முதல் கட்டமாக, இரு கட்சிகளுக்கிடையிலான கூட்டுத் திட்டம் தொடர்பில் அடிப்படை ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் முன்னதாக பேச்சுவார்த்தை நடத்திய அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, கீழ்காணும் முக்கிய முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன:
-
உள்ளூராட்சி நிறுவனங்கள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகளில் உள்ள உறுப்பினர்களின் பணிகளை இரு கட்சிகளும் இணைந்து முன்னெடுத்து செல்வது.
-
இதற்காக, இரு கட்சிகளிலிருந்தும் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு “கூட்டு தேசிய திட்ட அமுலாக்கல் குழு” ஒன்றை நியமிப்பது.
-
செயற்குழுவினால் மூன்று ஒன்றிணைந்த தேசிய திட்டங்களுக்கான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்பட விரும்பும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் ஏற்படும் இணைப்புகள் தொடர்பில், இரு கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் ஒரு தனி குழுவை நியமிப்பதற்கும் செயற்குழு முடிவு செய்துள்ளது.
தலைவர்கள் சந்திப்பு
இந்த தீர்மானங்கள் மற்றும் திட்டங்கள் தொடர்பான உடன்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் ஆகியோர் நேரடியாக சந்தித்து, எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீர்மானங்கள், எதிர்வரும் அரசியல் சூழலில் தென்னிலங்கை அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!