news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செவ்வாய் கிரகத்தில்  மார்ஸ் எக்ஸ்பிரஸ் தந்த அரிய காட்சிகள்; சிலிர்க்க வைக்கும் 3டி வீடியோ!

10 Feb, 2026
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை இவ்வளவு நெருக்கமாக யாரும் பார்த்ததிருக்க வாய்ப்பில்லை. ஐரோப்பிய விண்வெளி முகமை வெளியிட்டுள்ள 3டி வீடியோவில், செவ்வாயின் பிரம்மாண்ட பள்ளங்கள் மற்றும் அகழிகளின் உண்மையான தோற்றத்தைக் கண்டு நீங்க வியக்கலாம். செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பு எவ்வளவு கரடுமுரடானது என்பதைத் துல்லியமாகக் காட்டும் வகையில், ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இது கற்பனையாக உருவாக்கப்பட்ட வீடியோ அல்ல; செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' (Mars Express) விண்கலம் அனுப்பிய உண்மையான டேட்டாக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ஆவணம். இந்த வீடியோ, மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் உள்ள 'High Resolution Stereo Camera' (HRSC) மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் உயர அளவீடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வாயின் தெற்கு அட்சரேகை 20 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 17 டிகிரி பகுதியில் அமைந்துள்ள 'ஃபிளாஜர்குவெஸ்' (Flaugergues) பள்ளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இது படம் பிடித்துக் காட்டுகிறது. சமதளமான புகைப்படங்களை டிஜிட்டல் நிலப்பரப்பு மாதிரிகளுடன் (Digital Terrain Model) இணைத்து, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவு 3டி முப்பரிமாணமாக இந்த வீடியோ மாற்றியுள்ளது. ஒவ்வொரு வினாடிக்கும் 50 தனித்தனி பிரேம்கள் வீதம் இந்த வீடியோ உருவாக்கப்பட்டு உள்ளது. நிலப்பரப்பின் மேடு பள்ளங்கள் விண்வெளியில் இருந்து பார்க்கும்போது தட்டையாகத் தெரியும் என்பதால், அதன் வடிவங்களை நன்கு புரிந்துகொள்வதற்காக நிலப்பரப்பின் செங்குத்து அமைப்பு 3 மடங்கு உயர்த்தி காட்டப்பட்டுள்ளது. செவ்வாயின் மெல்லிய வளிமண்டலத்தில் தூசி மற்றும் ஒளி எவ்வாறு சிதறடிக்கப்படுமோ, அதைப் பிரதிபலிக்கும் வகையில் மென்மையான பனிமூட்டம் (Haze) போன்ற ஒரு தோற்றம் 250 கி.மீ தொலைவுக்கு அப்பால் சேர்க்கப்பட்டுள்ளது. வீடியோவின் தொடக்கத்தில் 'ஸ்கைலா' (Scylla) மற்றும் 'சரிப்திஸ்' (Charybdis) ஆகிய 2 செங்குத்தான சரிவுகளுக்கு இடையே நீண்ட அகழி போன்ற பகுதி தெரிகிறது. இது சுமார் 75 கி.மீ அகலமும், 1 கி.மீ ஆழமும் கொண்டது. பண்டைய காலத்தில் செவ்வாயின் ஓடு (Crust) விரிவடைந்தபோது இது உருவானது. வீடியோவில் 150 கி.மீ அகலமுள்ள 'பாகுய்சென்' பள்ளத்தையும், அதைத் தொடர்ந்து வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 240 கி.மீ அகலமுள்ள பிரம்மாண்டமான 'ஃபிளாஜர்குவெஸ்' பள்ளத்தையும் காணலாம். இந்தப் பள்ளத்தின் தரைப் பகுதியானது சுமார் 1 கி.மீ உயரத்திற்குச் செங்குத்தாக உயர்ந்து கரடுமுரடாகக் காணப்படுகிறது. காலம் மற்றும் புவியியல் மாற்றங்களால் செவ்வாய் கிரகம் எவ்வாறு ஆழமான வடுக்களைப் பெற்றுள்ளது என்பதை இந்த வீடியோ தெளிவாகப் பதிவு செய்துள்ளது. இது வெறும் காட்சி விருந்து மட்டுமல்ல, செவ்வாய் கிரகத்தின் கடந்த காலத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான அறிவியல் ஆவணமாகும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!