news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சேலம்: தற்கொலை செய்ய மதுவில் விஷம் கலந்த அண்ணன் - நண்பருடன் குடித்த தம்பி; ஒருவர் பலி

25 Feb, 2024
குடும்பப் பிரச்சனையினால் தற்கொலை செய்துக்கொள்ள நினைத்து மதுவில் கலந்து வைத்திருந்த சயனைடுவை தம்பி திருடி சென்று குடித்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், முள்ளுவாடி கேட் மக்கான் தெருவை சேர்ந்தவர் வெள்ளித் தொழிலாளியான தசீர் உசேன். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் ஒரு மகன் உள்ளார். மதுகுடிக்கும் பழக்கம் தசீர் உசேனக்கு இருந்து வந்ததால், சமீபகாலமாக தசீர் உசேனக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்ட மனைவி கிச்சிப்பாளையத்தில் உள்ள தன் பெற்றோர்கள் வீட்டுக்கு சென்று விட்டார். மேலும் பலமுறை தசீர் உசேன் தன் மனைவியை அழைத்தும் வராததால், அவருடன் வாழ விருப்பம் இல்லை என்றுக்கூறியதால், மன உளைச்சலுக்கு உள்ளான தசீர் உசேன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்தார். இதற்காக அவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைக்கு சென்று மதுவை வாங்கி அதில், வெள்ளி பாலீஷ் செய்ய பயன்படுத்தப்படும் சயனைடு கலந்து மதுபாட்டிலை பீரோவுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார். இதனை அறியாத தசீர் உசேனின் தம்பி சதாம் உசேன், மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை எடுத்துக்கொண்டு, தனது நண்பர் அசேன் என்பவருடன் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். இருவரும் பாரில் அமர்ந்து மதுவை டம்ளரில் ஊற்றி குடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சதாம் உசேனும், அசானும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளனர். இதனை பார்த்த பாரில் இருந்தவர்கள் இரண்டு பேரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி சதாம் உசேனின் நண்பர் அசேன் பரிதாபமாக உயிரிழந்தார். அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நேரத்தில் சதாம் உசேனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் மதுவில் சயனைடு கலந்து வைத்திருந்த தசிர் உசேனை போலீஸார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!