திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
'சமாதானம் வேண்டி டிரம்ப் கெஞ்சினார்'
இரான் அரசு தொலைக்காட்சி செய்தி சேனலான ஐ.ஆர்.ஐ.என்.என். (IRINN) சண்டை நிறுத்தம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான "வெற்றிகரமான" தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது சண்டை நிறுத்தம் திணிக்கப்பட்டிருப்பதாகவும், இரானின் தாக்குதலைத் தொடர்ந்து டிரம்ப் சண்டை நிறுத்தத்துக்காக "கெஞ்சினார்" என்றும் அரசு தொலைக்காட்சி ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த குறிப்பிட்ட அறிக்கையை தொகுப்பாளர் சத்தமாக வாசித்தார்.
இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் இராணுவத்தை இந்த அறிக்கை பாராட்டியதுடன் இரானியர்களின் "எதிர்ப்பையும்" பாராட்டியது.
'சண்டை நிறுத்தம்' - டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல் - இரான் சண்டை நிறுத்தம், அமெரிக்கா, டிரம்ப், கத்தார், மத்திய கிழக்கு
படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலில் டெஹ்ரானில் கட்டடம் தீப்பிடித்து கரும்புகை எழுந்த காட்சி.
முன்னதாக, இஸ்ரேலும் இரானும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
"இப்போதிலிருந்து சுமார் ஆறு மணி நேரத்தில்" சண்டை நிறுத்தம் தொடங்கும் என்று அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் அறிவிப்பில் பரஸ்பர பகைமை குறித்த தகவல்கள் இருந்தாலும், "24 வது மணி நேரத்தில்" மோதல் அதிகாரப்பூர்வமாக முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
"எல்லாம் சரியாக நடக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இரு நாடுகளையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்." என்று கூறியுள்ள டிரம்ப், இந்த இஸ்ரேல்-இரான் மோதலை "12 நாள் போர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"இது பல ஆண்டுகள் நீடித்து, முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கக் கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, ஒருபோதும் நடக்காது!" என்று டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதா என்று இஸ்ரேலும் இரானும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
'சண்டை நிறுத்தத்துக்கு கத்தார் உதவியது'
கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, இரான் - இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட உதவினார் என்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகளின் கூற்றுப்படி, கத்தார் உட்பட பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இரான் தாக்கிய பின்னர், இரானிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசிய போது சண்டை நிறுத்தம் பற்றி அமெரிக்கா தரப்பில் முன்மொழியப்பட்டது. இதில் கத்தாரும் முக்கிய பங்கு வகித்தது.
சண்டை நிறுத்தம் - வெள்ளை மாளிகை அதிகாரி தகவல்
இஸ்ரேலும் இரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ்ஸிடம் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால் இரு தரப்பினரும் முறையான அல்லது பொது பதிலை வெளியிடவில்லை.
அவரது கூற்றுப்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை டிரம்ப் நேரடியாக தொடர்பு கொண்டார். இரான் இனிமேல் தாக்குதல் நடத்தாத பட்சத்தில் சண்டை நிறுத்தத்துக்கு தயார் என்று நெதன்யாகு ஒப்புக் கொண்டார் என்று சிபிஎஸ் செய்தி கூறுகிறது.
அந்த செய்தியின் படி, இரான் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக மூத்த இரானிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இரானியர்களுடன் நேரடி மற்றும் மறைமுக வழிகள் மூலம் தொடர்பு கொண்ட பிறகு சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ்
இரான் வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?
இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், 'எங்களுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை' என்று இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இஸ்ரேல் தனது "சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை" இப்போது நிறுத்தினால், இரான் பதிலடியைத் தொடர எந்த நோக்கமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அந்த நேரம் ஏற்கெனவே கடந்துவிட்டது:
"இரான் பலமுறை தெளிவுபடுத்தியது போல, இஸ்ரேல்தான் இரான் மீது போரை தொடங்கியது, மாறாக நாங்கள் அல்ல. தற்போது, எந்தவொரு சண்டை நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த "ஒப்பந்தமும்" இல்லை. இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி இரானிய மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை டெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்." என்று சையத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
"இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க நமது சக்தி வாய்ந்த ஆயுதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகள் கடைசி நிமிடம் வரை, அதாவது அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன," என்று சையத் அப்பாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!