கடந்த புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில், மேற்குலகத்தின் மீதான கடும் வெறுப்பை கொட்டித் தீர்த்திருந்தார்.
மேற்குலகின் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள நிலைப்படுத்துவதற்காக, அமெரிக்காவை மையப்படுத்திய- டொலரை அடிப்படையாக கொண்ட வங்கி அட்டைப் பரிமாற்ற முறைக்கு மாற்றாக, ரஷ்யா தனது மிர் வங்கி அட்டைகள் மற்றும் பரிமாற்ற முறையை ஏற்றுக் கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
அண்மையில் ரஷ்யாவுக்குச் சென்று திரும்பிய அமைச்சர் பந்துல குணவர்த்தன, சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில் ரஷ்யாவின் மிர் வங்கி அட்டை முறையை ஏற்றுக் கொள்ளுமாறு, ரஷ்யா கோரியிருப்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.
ரஷ்யாவின் மிர் வங்கி அட்டை முறையை பல நாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும், அதனை இலங்கை அங்கீகரிப்பதன் மூலம், பல்வேறு பொருளாதார நலன்களை பெறமுடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இலங்கைக்கான ரஷ்ய விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான ஒரு முன் நிபந்தனையாக மிர் அட்டையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிகிறது.
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம், எடுக்கப் போகும் முடிவு தான் அது சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளுமா என்பதை தீர்மானிக்கும்.
ரஷ்யாவின் மிர் வங்கி அட்டையை ஏற்றுக் கொண்டால் அது மேற்குலகின், குறிப்பாக அமெரிக்காவின் கோபத்துக்கு உள்ளாகும் நிலையை ஏற்படுத்தும்.
ரஷ்யாவின் மிர் பணம் செலுத்தும் வலையமைப்புடன், ஒப்பந்தங்களில் ஈடுபடும் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள வங்கிகள் அமெரிக்க தடைகளைத் தவிர்ப்பதற்கான ரஷ்யாவின் முயற்சிகளை ஆதரிப்பதாக கொள்ளப்படும் ஆபத்து உள்ளதாக, அமெரிக்க திறைசேரி திணைக்களம் அண்மையில் எச்சரித்திருக்கிறது.
இதையடுத்து, ரஷ்ய மத்திய வங்கியின் மிர் கொடுப்பனவு முறையை ஏற்றுக்கொண்டிருந்த துருக்கியேவின், இஸ் வங்கி மற்றும் டெனிஸ் வங்கி ஆகியன, அதிலிருந்து விலகிக் கொள்வதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளன.
அமெரிக்க தடையை எதிர்கொள்ளலாம் என்பதாலேயே துருக்கிய வங்கிகள் பின்வாங்கியிருக்கின்றன.
அமெரிக்காவின் வீசா மற்றும் மாஸ்டர் அட்டை நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களின் சேவைகளை நிறுத்தியிருக்கின்றன.
இதனால் ரஷ்யாவுக்கு வெளியே செல்பவர்கள், நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள்.
ரஷ்யர்கள் அதிகம் பயணம் செய்யும் நாடுகளில் துருக்கியும் ஒன்று என்பதால், அந்த நாட்டின் ஐந்து வங்கிகள் மிர் அட்டைகளை ஏற்றுக் கொண்டிருந்தன.
அதுபோலத் தான் இலங்கையையும் ஏற்றுக் கொள்ள வைக்க ரஷ்யா முயற்சிக்கிறது.
உலகின் பல நாடுகள் மிர் அட்டைகளை ஏற்றுக் கொண்டிருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியிருக்கிறார்.
ஆனால், அதனை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்த நாடுகளின் எண்ணிக்கை 11 மட்டும் தான்.
அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து. அவற்றில் நான்கு நாடுகளான ஆர்மேனியா, கசகஸ்தான், துருக்கி, வியட்நாம் என்பன, செப்ரெம்பர் 20ஆம் திகதியுடன் மிர் அட்டை கொடுப்பனவு முறையை இடைநிறுத்தியிருக்கின்றன.
இதனால் தற்போது மிர் அட்டை பாவனையில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 7 ஆக சுருங்கியிருக்கிறது. பெலாரஸ், எகிப்து, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசுவேலா, கியூபா ஆகியனவே அவை.
இவற்றில், நான்கு நாடுகள், முன்னாள் சோவியத் ஒன்றியத்தை சேர்ந்தவை. வெனிசுவேலா, கியூபா என்பன ரஷ்யாவின் பாரம்பரிய கூட்டாளிகள்.
அதேவேளை, மிர் அட்டையை ஏற்றுக் கொள்வது குறித்து, ரஷ்யாவுடன் பேச்சு நடத்தி வருகிறது மியான்மாரின் இராணுவ அரசாங்கம்.
இந்த நாடுகளுடன் இலங்கை இணைந்து கொள்வது பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்காது.
ஆனாலும், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாயின், அவர்கள் இலங்கையில் தங்களின் நாட்டுப் பணத்தை செலவிடுவதற்கு, வழியொன்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் சட்டரீதியாக ரஷ்யா அமெரிக்க டொலரைப் பயன்படுத்துவதற்கு, அமெரிக்கா தடைவிதித்துள்ளது.
ரஷ்யாவிலும் டொலர் நெருக்கடி காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள், அமெரிக்க டொலரைப் பெற்றுக் கொண்டு வந்து, இலங்கையில் செலவழிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
எனவே மாற்று வழியொன்றை இலங்கை அறிமுகம் செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால் மிர் அட்டையை அறிமுகம் செய்வது சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகப்படுத்தினாலும், அது இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு பிரச்சினையை தீர்க்க உதவாது.
ஏனென்றால் இலங்கைக்கு தேவைப்படுவது டொலர் தான். ரஷ்யாவுடனான கொள்வனவு, கொடுப்பனவுகளுக்கு மட்டும் தான் மிர் முறையை பயன்படுத்த முடியும்.
இவ்வாறான நிலையில் மிர் அட்டை விவகாரத்தில் இலங்கை அவசரப்பட்டால், மேற்குலகின் உதவிகளையும், ஆதரவையும் இழக்கும் நிலை ஏற்படலாம்.
சட்டத்தின் முன் சரணடையும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம்;கம்பி எண்ணப்போகும் ராஜபக்ஸ குடும்பத்தினர்
18 Sep, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!