தி ஹண்ட் (The Hunt) தொடர் சொல்வதுபோல ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா?
24 Aug, 2026
வேளாண்பெருங்குடி மக்கள் பயிர் செய்ததை அறுவடை செய்யும் காலகட்டமான தை மாதத்தின் முதல்நாளில் தங்கள் வேளாண்மைக்கு உதவிய சூரியனுக்கும் மாட்டிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல் பண்டிகையின் நோக்கமாகும்.
``இன்றைக்கு தேங்க்ஸ் கிவ்விங் டே என்று மேற்கத்திய நாடுகளில் நடத்துகிறார்களே அது போன்ற ஒரு நிகழ்வுதான் பொங்கலும். அன்றைக்கு இருந்த பிரதான தொழில் உழவுதான். ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள்.
ஆடி மாதம் விதைப்புக்கு என்றால் தை மாதம் அறுவடைக்குரியது. அறுவடை வெற்றிக்கு யார் யாரெல்லாம் காரணமோ அவர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்வுதான் பொங்கல். அறுவடை வெற்றிக்கு பிரதான காரணம் சூரியனும் மாடும். அதற்காக இவை இரண்டுக்கும் நன்றி சொல்லும் வகையில் இந்த நாளைக் கொண்டாடுகிறோம்`` என்கிறார் புலவர் செந்தலை ந.கவுதமன்.
பழைய கழிதலும் புதியன புகுதலும் என்பதோடு புத்தொளியுடன் தொடங்கும் பொங்கல் திருநாளில் மேல்த்தோல் நீக்காத பச்சரிசியில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கப்படும்.
மறுநாள் உழவுக்கு உதவிய மாட்டினை சிறப்பிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். மேற்கண்ட தினங்கள் இன்றும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தாலும், காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் அரிதாகிவருவதாகக் கூறுகிறார் புலவர் செந்தலை ந.கவுதமன்.
அரிதாகிவரும் காணும் பொங்கல்
``காணும் பொங்கல் என்பது நம்முடைய வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தவர்களை நேரில் சென்று சந்திக்கும் நாள். இது உறவுகளை வலுப்படுத்துவதற்கான நாள். அன்றைய காலங்களில் காணும் பொங்கல் என்பது ஆணும் பெண்ணும் காணும் பொங்கலாகவும் இருந்திருக்கிறது. திருமணம் தொடர்பான பேச்சுகள்கூட காணும் பொங்கல் நாளில் நடந்துள்ளன.
அந்தக் காலத்தில் காணும் பொங்கல் தினத்தில் ஆற்றங்கரை, குளத்தங்கரை, ஏரிக்கரை போன்ற பகுதிகளுக்குத் தங்கள் உறவினர்களுடன் சென்று நேரத்தைக் கழிப்பது, கிராமிய விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இன்று காணும் பொங்கல் அரிதாகிவருகிறது`` என்கிறார் புலவர் செந்தலை ந.கவுதமன்.
இந்தியாவில் அனைத்து பண்பாட்டு அடையாளங்களையும் இந்துத்துவ மயப்படுத்தும் வேலைகள் நடந்துவருவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகையும் அதிலிருந்து தப்பவில்லை. பொங்கல் பண்டிகை இந்துக்களின் பண்டிகை என்ற கருத்தை அண்மைக்காலங்களில் அதிகம் கேட்க முடியும் நிலையில், பொங்கல் என்பது மதத்தைக் கடந்து தமிழர்களின் கூட்டுப் பண்பாட்டு நிகழ்வு என்கிறார் செந்தலை ந.கவுதமன்.
``பொங்கல் பண்டிகை என்பது என்றைக்கும் மதவிழாவாக இருந்தது இல்லை. பொங்கல் என்பது கூட்டுப் பண்பாட்டு நிகழ்வு. தீபாவளி உட்பட பல மதப் பண்டிகைகளை நேரம் பார்த்து, நாள் பார்த்து, பஞ்சாங்கம் பார்த்து கொண்டாடுவார்கள். ஆனால், பொங்கல் பண்டிகை அப்படிப் கொண்டாடப்படுவது அல்ல. பொங்கல் எப்போது கொண்டாட வேண்டும் என்று யாரும் யாருக்கும் சொல்லத் தேவையில்லை. தை முதல் நாள் என்றால் பொங்கல் என்று அனைவருக்கும் தெரியும். அதற்கு காரணம் பொங்கல் என்பது `நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை' என்ற தமிழ் மரபினரின் பண்டிகை`` என்கிறார் அவர்.
இன்றைய காலத்தில் பொங்கல்
பிரதான தொழிலாக உழவு இருந்தது மாறி, உலகமயமாகிவிட்ட இன்றைய காலத்தில் தொழில்ரீதியாக அனைவரும் வேறுவேறு துறைக்கு நகர்ந்துவிட்டோம். இப்படியான சூழலில் பண்பாட்டு ரீதியாக இன்றும் பொங்கல் கொண்டாட வேண்டிய தேவை உள்ளதா என்றால் இன்றைக்குத்தான் தேவை அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார் செந்தலை ந.கவுதமன்.
'`உலகமயமாக்கல் மூலம் ஒற்றைப் பண்பாடு புகுந்துவிட்டது. அதனால் அனைத்து இனங்களும் தங்களது அடையாளங்களை இழக்க ஆரம்பித்துவிட்டன. சமூக மனிதர்களாக இருந்த நாம், இன்றைக்கு உதிரிமனிதர்களாக மாறிவருகிறோம்.
இப்படியான சூழலில் நம்முடைய அடையாளங்களைக் காக்க வேண்டுமென்றால் பொங்கல் போன்ற நம் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டியது கட்டாயம். அப்போதுதான் நம்முடைய இழந்த அடையாளங்களை மீட்கவும், இருக்கும் அடையாளங்களை காக்கவும் முடியும்`` என்கிறார் புலவர் செந்தலை ந.கவுதமன்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!