திருமணமாகி 3 மாதங்களில் இளைஞன் விபத்தொன்றில் பலி
புத்தளம், - முந்தல், கீரியங்கல்லி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து 03 வாரங்கள் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளி நல்லாந்தளுவ பகுதியைச் சேர்ந்த பரீத் முஹம்மது பஸ்ரின் ( வயது 25) எனும் இளம் குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணமான இந்த இளைஞரும், அவரது மனைவியும் கடந்த 20 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் கொழும்பிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று மீண்டும் தமது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இம்முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்ததுடன், முச்சக்கர வண்டியில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவியும், மனைவியின் சகோதரரும் சிறிய காயங்களுக்குள்ளானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தரை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்தும் மூன்று வாரங்கள் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!