news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு பிரவேசிக்க வீதி அனுமதி

08 May, 2024
யாழ்.வசாவிளான் கிழக்கு (J/244), வசாவிளான் மேற்கு(J/245), பலாலி வடக்கு(J/254), பலாலி கிழக்கு (J/253), பலாலி தெற்கு (J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது. இந்த காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும் இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளார். குறித்த பகுதிகளில் 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களைச் சேர்ந்தோர் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி துப்புரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் இலகுவாக பிரவேசிக்கக்கூடிய வகையில் பாதைகளை திறக்கவும் வீதிகளை பயன்படுத்தவும் அனுமதி வழங்குமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதியை பாதுகாப்பு பிரிவினருடன் கலந்துரையாடி ஆளுநர் பெற்றுக் கொடுத்துள்ளார். யாழ்ப்பாணம் பொன்னாலை - பருத்தித்துறை கடற்கரை வீதியில் கண்ணகி அம்மன் கோவில் சந்தியிலிருந்து நாகதம்பிரான் கோவில் வீதி ஊடாக விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிக்க முடியும். வீரப்பளை வீதியில் பலாலி வீதி நோக்கி 100 மீட்டர் தூரத்திற்குள்ளும் வீரப்பளை சந்தியில் தெற்கு நோக்கி தம்பாளை வீதி ஊடாகவும் விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிக்க முடியும் என வடமாகாண ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!