Belonging: A Journey of Love’ - இத்தாலிப் பெண் இந்தியாவின் மகளான கதை!
22 Nov, 2026
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோல்வி
மாறாக ராஜபக்ஷக்களின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது.
225 இடங்களுக்கு நடந்த இந்தத் தேர்தலில், மக்களால் தேர்வுசெய்யப்படும் தொகுதிகளில் இரண்டும் தேசியப் பட்டியலில் ஒன்றுமாக மொத்தம் 3 இடங்களையே இக்கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அக்கட்சிக்கு சுமார் 3,50,000 வாக்குகளே கிடைத்துள்ளன.
இந்த நிலையில்தான், ராஜபக்ஸ குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் குறித்தும் அவர்களது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
"பொதுஜன பெரமுன மீள்வதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை. குறைந்தது 15 - 20 ஆண்டுகள் ஆகலாம். தற்போது தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் நல்ல பெரும்பான்மையை பெற்றிருக்கும் நிலையில், ராஜபக்ஸக்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களை, முறைகேடுகளை வெளியில் அம்பலப்படுத்தக்கூடும்.
அப்படியான சூழலில் ராஜபக்ஸக்கள் மீதான அதிருப்தி மேலும் அதிகரிக்கலாம். அப்படி நடந்தால் அவர்கள் வெளியில் வந்து அரசியல் செய்வது மிகவும் கடினம். ஒருவேளை தற்போதைய ஆட்சி மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டால்கூட, அந்த அதிருப்தி இவர்களுக்கான ஆதரவாக உருமாறுவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். சிவராஜா.
படக்குறிப்பு, இலங்கையின் அரசியலில் மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.
இலங்கை அரசியல் வரலாற்றில் ராஜபக்ஷக்களின் பங்கு
இலங்கையின் அரசியலில் மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 1936லேயே இலங்கையில் ஸ்டேட் கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் அம்பாந்தோட்டை தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார் டான் மேத்யூ ராஜபக்ஷ.
இவர் விரைவிலேயே காலமாகிவிட, இவருடைய சகோதரர் டான் ஆல்வின் ராஜபக்ஸ அரசியலில் களமிறங்கினார். 1947ல் நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்கு சென்றார் டான் ஆல்வின்.
இந்த டான் ஆல்வினுக்கு சமல், ஜெயந்தி, மஹிந்த, சந்திரா, கோட்டாபய, ப்ரீத்தி, பசில், டட்லி, கந்தானி என ஒன்பது குழந்தைகள். இவர்களில் மூன்றாவது குழந்தையான மஹிந்தவும் ஐந்தாவது குழந்தையான கோட்டாபயவும் பிற்காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியானார்கள்.
தன் தந்தை இறந்தவுடன் 21 வயதிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசியலுக்கு வந்தார் மஹிந்த. படிப்படியாக உயர்ந்து 2005ஆம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதியானார் அவர்.
அவரது சகோதரர் கோட்டாபய, பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டார். 2009ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது, இந்த சகோதரர்களின் செல்வாக்கு உச்சத்தைத் தொட்டது. அதற்கு அடுத்துவந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு மிகப் பெரிய வெற்றி மஹிந்தவுக்குக் கிடைத்தது. இந்தத் தருணத்தில், இலங்கையின் மிக சக்தி வாய்ந்த குடும்பமாக மஹிந்தவின் குடும்பம் உருவெடுத்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முரண்பாடு ஏற்பட, பிரதமராக நியமிக்கப்பட்டார் மஹிந்த.
2019ல் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு, அன்றைய ஆளும் அரசின் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது
மோசமான ஆட்சியே காரணம்
"இப்போது ராஜபக்ஷ என்ற பெயரே மக்கள் மத்தியில் பெரும் அதிருப்திக்குரிய பெயராகிவிட்டது. ஜனாதிபதி தேர்தலில் சொந்தத் தொகுதியான முள்கிரிகல தொகுதியிலேயே அவர்களது கட்சி படுதோல்வி அடைந்தது.
இவர்களுடைய செல்வாக்கு இந்த அளவுக்கு சரிய, கோட்டாவின் ஆட்சிக்காலம்தான் மிக முக்கியக் காரணம். நாட்டு மக்களின் மனநிலையை அறியாமல் முடிவுகளை எடுத்தார் அவர். ஒரு சர்வாதிகாரியைப் போல செயல்பட்டார்.
உதாரணமாக, ரசாயன உரத்திற்குப் பதிலாக இயற்கை உரத்தைப் பயன்படுத்த விவசாயிகளை நிர்பந்திக்கும் முடிவை யாரையும் கலந்தாலோசிக்காமல் எடுத்தார். அதேபோல, அரிசி ஆலை அதிபர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவோம் என்றார்.
இது நடக்கவில்லை. அங்கேதான் இந்தச் சரிவு ஆரம்பித்தது. இலங்கையின் வரலாற்றிலேயே, அவர் விரட்டப்பட்டதைப் போல, ஒரு ஜனாதிபதி விரட்டப்பட்டதில்லை. அதற்குப் பிறகு இப்போதுவரை மக்களை அவரால் நேரடியாக சந்திக்க முடியவில்லை. மக்கள் அவர்களை முழுவதுமாக நிராகரித்துவிட்டார்கள். அதிலிருந்து இவர்கள் மீள்வதற்கான சாத்தியமே இல்லை" என்கிறார் சிவராஜா.
கொரோனா பரவலை அடுத்து சுற்றுலா வருவாய் குறைந்து இலங்கையின் அந்நியச் செலாவணித் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, ரசாயன உரங்களின் இறக்குமதிக்குத் தடை விதித்தார் அப்போதைய ஜனாதிபதியான கோட்டாபய.
இது விவசாயத்தைக் கடுமையாகப் பாதித்தது. உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்படவே, அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. இதனால், அந்நியச் செலாவணி மேலும் குறைய ஒரு கட்டத்தில் எரிபொருள் வாங்கக்கூட டாலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மிகப் பெரிய நெருக்கடி உருவானது. இதையடுத்து மக்கள் போராட்டத்தில் இறங்க கோட்டாபய ராஜபக்ஷவும் மஹிந்தவும் பதவியிலிருந்து விலகினர்.
நாட்டு மக்களின் மனநிலையை அறியாமல் முடிவுகளை எடுத்தார் கோட்டபாய. இலங்கையின் வரலாற்றிலேயே, அவர் விரட்டப்பட்டதைப்போல, ஒரு ஜனாதிபதி விரட்டப்பட்டதில்லை.
"பாரம்பரிய தேசியக் கட்சிகளுக்கு இனி வாய்ப்பு குறைவு"
இதற்குப் பிறகு நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவால் ஓரளவுக்கு நெருக்கடியை சமாளிக்க முடிந்தது என்றாலும் பொருளாதார நெருக்கடியின் போது உயர்ந்த விலைவாசி அப்படியே நீடித்தது. வேலைவாய்ப்பின்மையும் தொடர்ந்தது.
இந்த நிலையில்தான் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணி ஆகியவை அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன.
ராஜபக்ஸக்கள் மட்டுமல்ல பாரம்பரிய தேசியக் கட்சிகளைச் சேர்ந்த வேறு எந்தத் தலைவர்களுக்கும் இனி அரசியல் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதவில்லை என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேராசிரியரான அகிலன் கதிர்காமர்.
"ராஜபக்ஷக்கள் மட்டுமல்ல, கொழும்பிலுள்ள மேட்டுக்குடி அரசியலிலேயே மொத்தமாக ஒரு பெரிய குழப்பம் வந்திருக்கிறது.
இனி பழைய பாணியில் இவர்கள் மக்கள் அணுகுவது கடினமாகவே இருக்கும். தேசிய மக்கள் சக்தி மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் ஆட்சியை முன்னெடுத்துச் செல்லாவிட்டாலும்கூட, கடந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய கட்சிகளுக்கு மீண்டும் ஆதரவு கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. புதிதாக ஒரு வலதுசாரி சக்தி உருவாகலாம் என்றுதான் நினைக்கிறேன்" என்கிறார் அவர்.
2019ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவின் சகோதரர் கோட்டாபய ஜனாதிபதியாக வெற்றிபெற்றார்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!