பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனடியாகப் பதவி விலக வேண்டும் – நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்
பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது அவர், நாட்டின் கலாசாரம் மற்றும் ஆன்மீக பண்பாடுகளை புறக்கணித்து மேற்குலக நாடுகளின் தேவைகளுக்கேற்ப என்.பி.பி. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இவ்வாறு தொடர்ந்தால் வெனிசுலாவில் நடந்த சம்பவங்கள் போன்று இலங்கையிலும் ஏற்படக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் கூறுகையில், பாடப் புத்தகங்களில் உள்ள அடிப்படை விடயங்களே அறியப்படாத நிலையில், நாட்டின் மக்களையும் அவர்களின் பண்பாட்டையும் இந்த அரசு எவ்வாறு புரிந்து கொள்ளும் என்ற கேள்வியை எழுப்பினார். கலாசாரம் மற்றும் ஆன்மீக மதிப்பீடுகள் இன்றி சில மேற்குலக நாடுகளின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாட்டை வழிநடத்துவது மிகுந்த ஆபத்தான பயணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெனிசுலாவில் நடந்ததை உதாரணமாக எடுத்துக் காட்டிய நாமல் ராஜபக்ச, அங்கு ஒரு நாட்டில் விமானம் வந்து ஜனாதிபதியை அழைத்துச் சென்றது போன்ற நிலை இலங்கையிலும் ஏற்படக்கூடும் எனக் கூறினார். நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என கூறப்பட்டாலும், ஆளுங்கட்சியினருக்கு வேறுபட்ட விதத்தில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதேவேளை, கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான சீரழிவுகளுக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதனைக் கருத்தில் கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!