சவூதியின் விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
30 Oct, 2026
கடந்த வருடம் நவம்பரில் லண்டனில் இருந்து தொலைபேசிமூலம் தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இதே போன்று அறிக்கையொன்றை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் தன்னுடன் அண்ணன் (பிரபாகரன் ) தொடர்புகொண்டு கேட்கட்டும்,அதற்கு பிறகு அறிக்கையை வெளியிடுவதாக தான் பதிலளித்ததாகவும் சீமான் கூறியிருக்கிறார்.
போர்க்களத்தில் தமிழ் மக்களை கைவிட்டு தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொண்டு தப்பியோடுகின்ற கோழை அல்ல பிரபாகரன் என்றும் சீமான் சொன்னார்.
நெடுமாறனின் அறிவிப்பு குறித்து இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்தோ அல்லது தமிழ்நாடு அரசாங்கத்திடமிருந்தோ இந்த பத்தி எழுதப்பட்டுக்கொண்டிருந்த தருணம் வரை பிரதிபலிப்பு எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
ஆனால், இந்திய ஊடகங்கள் இதற்கு பெருமுக்கியத்துவம் கொடுப்பதையும் அரசியல் அரங்கிலும் ஆய்வாளர்கள் மத்தியிலும் பெருமளவில் வாதப்பிரதிவாதங்கள் மூண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
நெடுமாறனின் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என்று அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணியின் தலைவரான மனிந்தர்ஜீத் சிங் பிட்டா திருமலையில் செய்தியாளர்கள் மகாநாடொன்றில் வைத்து கேட்டதாக ' டெக்கான் ஹெரால்ட் ' பத்திரிகை வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது.
இந்த விவகாரத்தை இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறிய முன்னைய சந்தர்ப்பங்களில் கொடுக்காத முக்கியத்துவத்தை இத்தடவை இந்தியாவின் பிரதான பத்திரிகைகளும் ஏனைய ஊடகங்களும் கொடுப்பது குறிப்பாக கவனிக்கவேண்டிய அம்சமாகும்.
எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவரின் அறிவிப்பை இலங்கை இராணுவம் உடனடியாகவே நிராகரித்திருக்கிறது.
2009 மே 18 பிரபாகரன் இறந்ததை அன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மரபணு சோதனை மூலம் உறுதிப்படுத்தியதாகவும் அந்த தகவலை அன்றைய இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு ஜனாதிபதி மகிந்த தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதாகவும் வெளியான செய்திகளையும் விடுதலை புலிகளின் சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராக இருந்த செல்வராசா பத்மநாதன் (கே.பி.) 2009 மே 24 பி.பி.சி.க்கு வழங்கிய நேர்காணலில் " எமது இணையற்ற தலைவர் வீரமரணமடைந்துவிட்டார் " என்று கூறியதையும் அரசியல் ஆய்வாளர்களும் ஊடகங்களும் கடந்தவாரம் நினைவூட்டின.
தன்னால் வெளியிடப்பட்ட தகவல்களுக்கு ' சான்றாக ' நெடுமாறன் விடுதலை புலிகளின் தலைவரின் குடும்ப உறுப்பினர்களுடன் தான் வைத்திருக்கும் தொடர்பையே முன்வைத்திருக்கிறார்.
அத்துடன் அவர் பிரபாகரன் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு தற்போதைய சர்வதேச நிலைவரமும் இலங்கையில் மக்கள் கிளர்ச்சியில் கடந்த வருடம் ராஜபக்ச ஆட்சி வீழ்த்தப்பட்டதற்கு பின்னரான சூழ்நிலையும் பொருத்தமான தருணம் என்று கூறிய கருத்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
அத்துடன் தற்போதைய அறிவிப்பும் முன்னைய அறிவிப்புக்களைப் போன்று இருந்ததே தவிர, பிரபாகரனின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறியதற்கு புறம்பாக வெளியுலகம் நம்பக்கூடியதாக புதிய தகவல்கள் எதையும் நெடுமாறன் வெளியிடவில்லை.
முன்னைய சந்தர்ப்பங்களை விடவும் இந்த தடவை ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் நெடுமாறனின் அறிவிப்பின் பின்னணியில் அரசியல் காரணிகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை இயல்பாகவே எழுப்புகிறது.
தமிழ்நாடு மாநில அரசியல் காரணிகள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டதற்கு அவ்வாறு எதுவும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்ததாக இந்து ஆங்கிலப் பத்திரிகையின் இணை ஆசிரியர் தி.இராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நெடுமாறன் அடுத்து வரக்கூடிய எந்தவொரு தேர்தலையும் மனதிற்கொண்டு இந்த அறிவிப்பை செய்திருக்க வாய்ப்பில்லை.
வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கடசியின் தலைவர் வேல்முருகன் போன்ற ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் நேச அணியினருடன் சேர்ந்து தஞ்சாவூர் செய்தியாளர்கள் மகாநாட்டை நடத்தி தனது அறிவிப்புக்கு ஒரு பரந்த ஏற்புடைமையை தோற்றுவிப்பதற்கு நெடுமாறன் மேற்கொண்ட முயற்சி இறுதி நேரத்தில் பயனளிக்கவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.
இந்த நிகழ்வுப்போக்குகள் எல்லாம் இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழர் அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது முக்கியமான ஒரு கேள்வி.
வடக்கு,கிழக்கு பகுதிகளில் இராணுவமயத்தை குறைக்கவேண்டும் என்ற தமிழ் மக்களின் இடையறாத கோரிக்கைக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என்பது பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது.
அதேவேளை, அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தபோவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்த அறிவிப்புக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருக்கும் சிங்கள தேசியவாத சக்திகளுக்கும் மகாசங்கத்துக்கும் 'தீனி' போட்டதாகவும் இது அமைந்திருக்கிறது எனலாம்.
ராஜபக்சாக்களும் மீண்டும் சிங்கள மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை வளர்க்க புதிய சூழ்நிலையைப் பயன்படுத்த முயற்சிப்பார்கள்.
நாட்டைப் பாதுகாக்க மீண்டும் தாங்களுக்கே அதிகாரத்தை தரவேண்டும் என்று மககளை அவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
முக்கியமான தமிழ் அரசியல்வாதியொருவரிடம் கருத்து கேட்டபோது , " காணாமல்போன எவராவது அல்லது இறந்துவிட்டதாக நம்பப்பட்ட எவராவது உயிருடன் திரும்பிவந்தால் மகிழ்ச்சியடைவதுதானே மனிதத்தன்மை " என்று மாத்திரம் கூறினார்.
இறுதியாக, நெடுமாறன் கூறியதை நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். பிரபாகரன் ஒரு நாள் உயிருடன் திரும்பிவந்தால் என்ன செய்வீர்கள்? என்று சீமானிடம் செய்தியாளர் கேட்டபோது அவர் சுவாரஸ்யமான பதிலொன்றைச் சொன்னார் ;
" கடவுள் இல்லை என்ற கொள்கையுடைய பெரியாரிடம் கடவுள் ஒரு நாள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ' சரி வந்திட்டார் என்று சொல்லிவிட்டுப் போவோம் என்று அவர் பதிலளித்தார்."
-வீரகத்தி தனபாலசிங்கம்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!