தீவிரமாகும் எரிபொருள் நெருக்கடி
19 Oct, 2026
முதலாவது காலாட்படை அணியின் தளபதி
விடுதலை புலிகள் 1991 ஆம் ஆண்டில் தங்களது முதலாவது காலாட்படை அணியை அமைத்தனர். அந்த படையணிக்கு 1983 ஜூலையில் மீசாலையில் இறந்த பிரபாகரனின் நெருங்கிய தோழனும் நம்பிக்கைக்குரிய சகாவுமான சார்ள்ஸ் அன்ரனியின் பெயர் சூட்டப்படடது. அந்த சார்ள்ஸ் அன்ரனி படையணியின் முதலாவது விசேட தளபதியாக பிரபாகரன் பால்ராஜையே தெரிவு செய்தார். அதன் தளபதியாக 1993 ஆம் ஆண்டு வரை பால்ராஜ் பணியாற்றினார்.
இராணுவத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்குவதற்கு புறம்பாக பால்ராஜ் கேந்திர பாதுகாப்பு(Strategic defense) நடவடிக்கைகளிலும் தனது திறமையை வெளிக்காட்டினார். இலங்கை ஆயுதப்படைகளினால் மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களை தோற்கடிப்பதற்கு, தடுப்பதற்கு, கட்டுப்படுத்துவதற்கு அல்லது செயலிழக்கச் செய்வதற்கு பால்ராஜ் பிரதானமாக பொறுப்பாக இருந்தார்.
வவுனியாவில் " ஒப்பரேசன் வன்னிவிக்கிரம " , மணலாறு /வெலிஓயாவில் " ஒப்பரேசன் லைற்னிங் ", யாழ்ப்பாணத்தில் " ஒப்பரேசன் லீப் ஃபோர்வாட்", கிளாலி / புலோப்பளையில் "ஒப்பரேசன் யாழ்தேவி" மற்றும் ஆனையிறவில் " ஒப்பரேசன் அக்னி கீல " ஆகியவை அத்தகைய இராணுவ நடவடிக்கைகளில் சிலவாகும்.
யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தெற்கே 1993 ஆம் ஆண்டில் இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்ட " ஒப்பரேசன் யாழ்தேவியை" பால்ராஜும் அவரது பிரதி தளபதி தீபனும் எதிர்த்துப் போரிட வேண்டியிருந்தது.
புலோப்பளையில் நடந்த சண்டையில் பால்ராஜ் கடுமையாகக் காயமடைந்தார்.ரி -- 55 தாங்கி ஒன்றை நோக்கி ஆர்.பி.ஜி. லோஞ்சரை பயன்படுத்த தாக்குதல் தொடுத்த வேளை பால்ராஜுக்கு ஒரு காலில் காயமேற்பட்டது. அந்த காயம் காரணமாக அவர் சற்று நொண்டி நொண்டி நடக்க வேண்டியதாயிற்று. நீண்ட தூரம் நடக்கும்போது அவரது காலில் நோவு ஏற்படத் தொடங்கியது.
1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து போர்நிறுத்தம் செய்யப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடங்கின.
1995 ஏப்ரிலில் போர்நிறுத்தம் முறிவடைந்து மீண்டும் போர் மூண்டது. தொடக்கத்தில் குடாநாட்டில் " லீப் ஃபோர்வாட் " ஒப்பரேசனை முன்னெடுத்த இராணுவம் வலிகாமம் பிரதேசத்தில் முன்னேறியது.
அதை எதிர்த்து விடுதலை புலிகள் "ரைகர் லீப்" என்று பெயரிடப்பட்ட தாக்குதலை மேற்கொண்டனர். இராணவம் பின்வாங்கியது. இதில் பால்ராஜ் முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்தார். ஆனால், இராணுவம் விரைவாகவே " ஒப்பரேசன் றிவிரச " என்ற நடவடிக்கையை முன்னெடுத்தது. அதன் விளைவாக பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்ட விடுதலை புலிகள் 1996 ஆம் ஆண்டில் வன்னிக்குள் சென்றனர்.
பிரதி இராணுவ தளபதி
1996 ஆம் ஆண்டில் தான் பிரபாகரன் பால்ராஜுக்கு தனது மிகப்பெரிய இராணுவ கௌரவத்தை வழங்கினார். அவர் பால்ராஜை பிரதி இராணுவ தளபதியாக நியமித்தார்.பிரபாகரன்தான் விடுதலை புலிகளின் இராணுவ தளபதி. விடுதலை புலிகளின் இராணுவ கடடமைப்பு படிநிலையில் இரண்டாவது ஆளாக பால்ராஜ் வந்தார். விடுதலை புலிகளின் இந்த பிரதி இராணுவ தளபதி சண்டைகளில் தனது கைவரிசையைக் காட்டத்தொடங்கினார்.
முல்லைத்தீவு இராணுவ முகாமை விடுதலை புலிகள் 1996 ஜூலை 18 ஆம் திகதி நிர்மூலம் செய்தனர். ஒரு ஆயிரம் படையினர் அதில் கொல்லப்பட்டனர்." ஓயாத அலைகள் " என்ற நடவடிக்கையை பால்ராஜ் ஒருங்கிணைத்து நடத்தினார்.
1997 " ஒப்பரேசன் ஜெயசிக்குரு" இராணுவ நடவடிக்கையின் முதல் கட்டம் பால்ராஜினால் தடுக்க முடியாமல்போன ஒரு முக்கியமான இராணுவத் தாக்குதலாகும்.
அதில் ஆயுதப்படைகள் ஓமந்தையையும் நெடுங்கேணியையும் கைப்பற்றினர். புளியங்குளம் வீழ்ச்சி காணும் வரை ஜெயசிக்குருவின்போது விடுதலை புலிகளின் பாதுகாப்பு நிலைகளுக்கு பால்ராஜே முழுமையாக பொறுப்பாக இருந்தார். அதற்கு பிறகு தீபனுடன் சேர்ந்து பாதுகாப்பு நிலைகளின் ஏற்பாடுகளை விடுதலை புலிகளின் கிழக்கு பிராந்தியத்தின் முன்னாள் தளபதி " கேணல் " கருணா பொறுப்பேற்றார்.
1998 பெப்ரவரியில் ஓயாத அலைகள் -- 2 நடவடிக்கையில் விடுதலை புலிகள் கிளிநொச்சியை தாக்கினார்கள். பெரும் இழப்புக்களைச் சந்தித்த பிறகு படையினர் வாபஸ் பெற்றனர்.
அந்த நடவடிக்கைக்கு முழுமையாக பொறுப்பாக இருந்த பால்ராஜ் ஒரு இராணுவ தந்திரோபாயமாக உளவியல் போர்முறையை கடைப்பிடித்ததாக கூறப்பட்டது. அந்த நடவடிக்கை இலங்கையின் 50 வது சுதந்திர தினக் கொண்டாட்ட நேரத்தில் நடத்தப்பட்டது.
பிறகு 1999 நவம்பரில் ஓயாத அலைகள் -- 3 நடவடிக்கையின்போது ஒருங்கிணைந்த தொடர்ச்சியான தாக்குதல்களில் விடுதலை புலிகள் ஒட்டிசுட்டான், கரிப்பட்டமுறிப்பு, மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் மற்றும் பல இடங்களில் இருந்த இராணுவ முகாம்களை நிர்மூலம் செய்தனர்.
இலங்கை இராணுவத்தினர் 18 மாதகால கட்டத்தில் மொத்தமாகப் பெற்ற ஜெயசிக்குருவின் பயன்களை ஒன்பது நாட்களில் விடுதலை புலிகள் தலை கீழாக்கினார்கள்.
ஆனையிறவு தளம்
ஓயாத அலைகள் தொடர்ச்சியான ஒரு நடவடிக்கை. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் பல சண்டைகள் தொடர்ந்து மூண்டன. இவற்றில் மிகப்பெரியது. ஆனையிறவில் அமைந்திருந்த கேந்திர முக்கியத்துவமுடைய இராணுவ தளத்தை கைப்பற்றுவதற்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நீண்ட நடவடிக்கைகளாகும்.
ஏ-9 நெடுஞ்சாலை ஓரமாக எழுதுமட்டுவாளுக்கும் இயக்கச்சி / ஆனையிறவுக்கும் இடையில் விநியோகங்களை துண்டிப்பதே ஆயுதப் படையினரைச் " சுற்றிவளைத்து பலவீனப்படுத்துவதற்கு " விடுதலை புலிகள் கடைப்பிடித்த முக்கிய தந்திரோபாயமாக அமைந்தது. துண்டிப்பின் மூலமாக ஆனையிறவு தளத்தை தனிமைப்படுத்த வேண்டியிருந்தது.
அவ்வாறு இடம்பெறுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக ஆயுதப்படைகள் குடாநாட்டில் வடமராட்சி கிழக்கு கரையோரமாக தாளையடி -- மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாணம் -- கண்டி வீதியில் புதுக்காட்டு சந்திவரை விரிவடையும் ஒரு நாற்கோணப் பகுதியை பலப்படுத்தின.
இந்த பகுதி வத்திராயன், புல்லாவெளி, சோரன்பற்று மற்றும் மாசார் உள்ளடங்கிய " வத்திராயன் பெட்டி " என்று அறியப்பட்டது. அதன் மூலமாக நாட்டுப் பகுதிக்குள் எழுதுமட்டுவாள் தொடங்கி கரையோரத்தில் தாளையடியில் இருந்து ஆனையிறவுக்கு தொடர்ச்சியான விநியோகங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
பால்ராஜின் தலைசிறந்த சாதனை
ஊடுருவ முடியாத இந்த பாதுகாப்பு நிலைகளை விடுதலை புலிகள் உடைத்தெறிந்த விதம் ஒரு நவீன இராணுவ அதிசயமாகும்.
அது பால்ராஜின் தலைசிறந்த சாதனையாகும். 2000 மார்ச் 26 ஆம் திகதி கடலில் இருந்து தரைநோக்கி மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் " கேணல் " சூசை தலைமையிலான கடற்புலிகள் பிரதான நிலப்பகுதி கரையோரத்தில் இருந்து குடாநாட்டுக் கரையோரத்துக்கு 1200 போராளிகளை கொண்டுவந்து இறக்குவதில் வெற்றிகண்டனர்.
பால்ராஜ் தலைமையிலான இந்த போராளிகள் குடாரப்பு -- மாமுனையில் தரையிறங்கி " கண்டல் " என்று கூறப்படும ஏரி மற்றும் சதுப்பு நிலப்பகுதிகள் ஊடாக நடந்து இரகசியமாக உட்பகுதிக்குள் நகர்ந்தனர்.
சோரன்பற்றிலும் மாசாரிலும் இருந்த இராணுவ நிலைகள் இராணுவ நிலைகள் நிர்மூலம் செய்யப்பட்டன.அடுத்து விடுதலை புலிகள் புதுக்காட்டு சந்திக்கு அண்மையாக ஏ -- 9 வீதியை அடைந்தனர்.
அதையடுத்து பால்ராஜ் தலைமையிலான விடுதலை புலிகள் பளைக்கு அண்மையாக இத்தாவில் என்று அழைக்கப்படும் ஒரு இடத்தில் தங்களது நிலைகளை அமைத்து இயக்கச்சி / ஆனையிறவுக்கான இராணுவ விநியோகங்களை தடுத்தனர்.
அடுத்த சில வாரங்கள் தீவிரமான மோதல்கள் இடம்பெற்றன. பால்ராஜும் அவரது துணிச்சல்மிக்க போராளிகள் அணியினரும் பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியில் இத்தாவிலை தங்களது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருந்தனர். பல நெளிவு சுழிவுகளுக்கு மத்தியில் பால்ராஜ் விட்டுக்கொடுக்காமல் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்கான தொடர்ச்சியான பல முயற்சிகளை முறியடித்தார்.
24 நாட்கள் தொடர்ச்சியான சண்டைகளுக்கு பிறகு இராணுவம் பின்வாங்கியது ஏப்ரில் 19 இராணுவம் ஆனையிறவைக் கைவிட்டது.
ஏப்ரில் 22 வைபவரீதியாக விடுதலை புலிகள் தங்களின் கொடியை ஆனையிறவில் பறக்கவிட்டனர்.
பால்ராஜின் நம்பமுடியாத சாதனை இராணுவ கையேடுகளில் நுணுகி ஆராயப்பட்டது. எதிரியின் பிராந்தியத்துக்குள் ஆழமாகச் சென்று வலிந்துதாக்கும் தாக்குதல்களையும் தற்காப்பு தாக்குதல்களையும் தங்களால் நடத்த முடியும் என்பதையும் மிகவும் பலம்பொருந்திய ஆயுதப்படைகளுக்கு எதிராக ஆகாயமார்க்க ஆதரவு இல்லாமல் சண்டையிட்டு தங்களால் வெற்றிபெற முடியும் என்பதையும் பால்ராஜின் தலைமையின் கீழ் விடுதலை புலிகள் நிரூபித்தனர். அது " மட்டுப்படுத்தப்பட்ட போர்களை " நடத்துவதில் ஒரு முன்னுதாரணமான மாற்றம் என்று பாராட்டப்பட்டது.
அது நடந்து 25 வருட இடைவெளிக்குப் பிறகு 2013 ஆம் ஆண்டில் எனது பிறந்த மண்ணுக்கு நான் சென்றபோது இத்தாவிலைப் பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தேன். ஏ -- 9 வீதியில் இத்தாவிலில் எமது வாகனத்தில் இருந்து இறங்கிய நாம் வீதியை விட்டிறக்கி உட்பகுதிக்கு செல்ல முடியவில்லை. சுற்றவர இருந்த பகுதிகளில் கண்ணி வெடிகள் இருந்ததே அதற்கு காரணமாகும். அப்போது அந்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
" ஒப்பரேசன் அக்னிகீல "
ஆனையிறவு வீழ்ச்சிக்கு பிறகு ஒரு வருடம் கழித்து தற்காப்பு போர்முறையில் பால்ராஜின் உன்னதமான சாதனை நிகழ்ந்தது.2001 ஏப்ரில் 24 ஆம் திகதி இராணுவம் " ஆரம்பித்த ஒப்பரேசன் அக்னிகீல " நடவடிக்கையை விடுதலை புலிகள் எதிர்க்க வேண்டியிருந்தது.
ஆனையிறவை மீளக்கைப்பற்றும் ஒரு முயற்சியாக கிளாலி -- எழுதுமட்டுவாள் -- நாகர்கோவில் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகளில் இருந்து ஆயுதப்படைகள் நகர்ந்தன.
இராணுவத்துக்கு கடுமையான இழப்புக்களை விடுதலை புலிகள் ஏற்படுத்தினர். ஆனையிறவு வெற்றியையும் ஆனையிறவை தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக " ஒப்பரேசன் அக்னிகீலவை" எதிர்த்து நிற்பதில் காட்டிய மகத்தான சாதனையையும் அடுத்து விடுதலை புலிகளின் பிரதி இராணுவ தளபதியின புகழ் மேலோங்கியது. பால்ராஜ் ஒரு காவிய நாயகனானார்.
உடல்நிலை பாதிப்பு
ஆனால் , பால்ராஜின் உடல்நிலை குன்றத் தொடங்கியது. அவரது இருதயத்தின் ஆரோக்கியம் எப்போதுமே பாதிக்கப்பட்டிருந்தது.
அது மேலும் மோசமடையத் தொடங்கியது. அதற்கு மேலதிகமாக நீரிழிவுடன் சிறுநீரக சிக்கலும் இருந்தது. போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது நவீன மருத்துவ சிகிச்சைக்காக இரு மெய்க்காவலர்களுடன் பால்ராஜ் 2003 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சென்றார்.
அங்கு அவருக்கு இருதய சத்திரசிகிச்சைக்கு உள்ளானார். நாடுதிரும்பி வரும் வேளையிலேயே சில இராணுவ அதிகாரிகள் அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தித்தனர். வழமைக்கு மாறான இந்த சந்திப்பு குறித்து இந்த கட்டுரையின் முற்பகுதியில் விபரிக்கப்பட்டிருக்கிறது.
உடல்நிலை மோசமடைந்ததன் விளைவாக பால்ராஜ் ஒப்பீட்டளவில் ஒரு எழுச்சியற்ற வாழ்க்கையை தொடர வேண்டியதாயின்று.
விடுதலை புலிகளின் இராணுவ அகாடமியில் அதிகாரிகளுக்கு விரிவுரையாளராகவும் பயிற்றுனராகவும் அவர் செயற்பட்டார்.
இராணுவ தந்திரோபாயம், திட்டமிடல் மற்றும் வியூகங்கள் குறித்து அவர் போதித்தார். விடுதலை புலிகளின் கமாண்டோக்களுக்கும் விசேட படைகளுக்கும் அவர் விசேட பயிற்சிகளையும் வழங்கினார்.
இதற்கு முன்னதாக பால்ராஜ் விடுதலை புலிகளின் பல்வேறு பயிற்சி முகாம்களில் வருகைதரு பயிற்றுநராகவும் பணியாற்றினார். இயக்கத்தில் சேர்க்கப்படுபவர்கள் பால்ராஜிடம் படிப்பதற்கும் பயிற்சி பெறுவதற்கும் விரும்பினார்கள்.
உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், பால்ராஜ் படிப்படியாக தனது நேரத்தை புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஒன்றிலேயே செலவிட்டார்.
ஆனால் , இராணுவ முனையில் அவரது சேவைகள் எந்த வகையிலும் முடிவுக்கு வர முடியவில்லை. 59 வது படையணியை திரட்டுவதும் அதை மணலாறு / வெலிஓயாவில் நிலைவைப்பதும் விடுதலை புலிகளுக்கு புதிய சிக்கல்களை தோற்றுவித்தன. இந்த கேந்திர முக்கியத்துவ நிலப்பரப்பில் இலங்கை ஆயுதப்படைகளை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக இருந்தது.
மீண்டும் ஒரு தடவை பிரபாகரன் பால்ராஜின் சேவையை நாடினார். தனது சுகவீனத்துக்கு மத்தியிலும் ஒரு நீண்டகாலத்துக்கு பால்ராஜ் முன்னரங்க நிலைகளில் தங்கியிருந்தார்.
அதனால் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இருந்தாலும், வைத்தியசாலையில் இருந்து வெளியேறி பாதுகாப்பு நிலைகளை மேற்பார்வை செய்வதற்கு முன்னரங்க நிலைகளுக்கு நீண்ட பயணங்களை அவர் மேற்கொண்டார். அதற்கு பிறகு விடுதலை புலிகளின் சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம், பானு ஆகியோர் பால்ராஜின் சுமையைக் குறைப்பதற்கு உதவ மணலாறுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இறுதிப்போரில் விடுதலை புலிகள் வெற்றியடைவர் என்று நம்பிக்கை தளராத பால்ராஜ் 2006 மே மாதத்தில் ஊடகங்களுக்கு பகிரங்கமாகக் கூறினார் .
" நான்காவது ஈழப்போரே இறுதிப் போராக இருக்கும். அது ஒரு பயங்கரமான போராகவும் இருக்கும். அது எமது மககளுக்கும் எமது தாயகத்துக்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் விடுதலையைக் கொண்டுவரும். நாம் நிசசயமாக வெற்றியாளர்களாக விளங்குவோம். மக்கள் எங்களுடன் நிற்கிறார்கள்.எமது தலைவர் வெற்றிக்கு எம்மை வழிநடத்திச் செல்வார்" என்று பால்ராஜ் கூறினார்.
மாரடைப்பு
பால்ராஜ் எதிர்வு கூறியதைப் போன்று நிலைவரம் அமையவில்லை மூன்று வருடங்களுக்கு பிறகு 2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டனர்.
முல்லைத்தீவில் பால்ராஜின் சொந்த மண்ணிலேயே இறுதிக்கட்டப் போர் நடந்தது. அப்போது அவர் உயிருடன் இருக்கவில்லை. ஒரு வருடம் முன்னதாக அவர் இறந்துவிட்டார். புதுக்குடியிருப்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போது 2008 மே 20 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் அவர் மாரடைப்பினால் மரணமடைந்தார்.
விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதை காணும் அவமானம் பால்ராஜுக்கு ஏற்படவில்லை. இறந்த பிறகு அவரை பிரபாகரன் " பிரிகேடியர் " தரத்துக்கு பதவியுயர்த்திக் கௌரவித்தார்.
டி.பி.எஸ். ஜெயராஜ்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!