Belonging: A Journey of Love’ - இத்தாலிப் பெண் இந்தியாவின் மகளான கதை!
22 Nov, 2026
இலங்கைத் தீவின் அரசியல் யாப்பு அவ்வாறு பெரிய மதத்துக்கு-அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்-பெரிய இனத்தைச்சேர்ந்த பெரிய மதத்துக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று அதன் ஒன்பதாவது பிரிவில் கூறியுள்ளது.அது இலங்கைத் தீவின் தேரவாத பௌத்தத்தை ஏறக்குறைய அரச மதமாக மேலுயர்த்தியுள்ளது.
புத்த பகவான் உலகியல் ஆசைகளைத் துறந்து சன்னியாசி ஆகியவர். நிலையாமையைப் போதித்தவர்.
ஆனால் அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இலங்கைத்தீவின் அரசியல் கலாச்சாரத்தில் அரசியல்வாதிகள் பௌத்த மதத்தை ஆக்கிரமிப்பின் கருவியாக மாற்றிவிட்டார்கள்.
இத்தகைய பொருள்படக்கூறின்,இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை என்பதே தீவின் பௌத்தமத சந்நியாசிகளும் அரசியல்வாதிகளும் புத்த பகவானின் போதனைகளைப் பின்பற்றத் தவறியதன் விளைவே.
புத்த பகவான் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சிபெற்றவர்.ஆனால் இலங்கைத் தீவின் மகா சங்கத்துக்குள்ளையே சாதி அடுக்குகள் உண்டு.
அதைவிடக் கொடுமையான விடயம் என்னவென்றால்,பௌத்த பிக்குகள் அணியும் காவி உடையிலும் சாதி உண்டு என்பதுதான்.
அதாவது சாதி ரீதியாக உயர்ந்த நிலைகளில் இருக்கும் பிரிவுகளைச் சேர்ந்த பிக்குகள் இந்துச் சந்நியாசிகள் அணிவதுபோன்ற காவி உடையை அணிவார்கள்.
ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் செங்கட்டி நிறக் காவியை அணிவார்கள்.
சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய அம்பேத்கர் பின்னாளில் பௌத்த மதத்திற்கு மதம் மாறினார்.
அவர் இலங்கைத்தீவின் மகா சங்கத்தினரின் விருந்தாளியாக இங்கு வந்து தங்கியிருந்த காலகட்டத்தில் மகா சங்கத்துக்குள் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைக் கண்டு,மனம் நொந்து நாடு திரும்பினார்.
காவிக்குள் சாதியை வைத்திருக்கும் சன்னியாசிகள்,அரசியலில் என்ன செய்வார்கள்?புத்தர் சிலையை ஒரு முன்தடுப்பாக,கவசமாகப் பயன்படுத்துவார்கள்தானே?
ஆனால் அது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிர்வாணமாக்கியிருக்கிறது. இந்த அரசாங்கம் தன்னை முன்னைய மேட்டுக்குடி அரசாங்கங்களில் இருந்தும் வித்தியாசப்படுத்திக் காட்ட முயற்சிக்கிறது.
தாங்கள் இனவாதத்துக்கு தலைமை தாங்கவில்லை என்று அது எப்பொழுதும் கூறிக்கொள்கிறது.
முன்னைய அரசாங்கங்கள்தான் தேர்தல் தேவைகளுக்காக இனவாதத்தை கிளப்பின,இனவாதத்தைக் கையாண்டன என்று கூறுகிறது.தனக்கும் இனவாதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல அது காட்டிக்கொள்கிறது.
தமிழ்ப் பகுதிகளில் அதற்குக் கிடைத்த எட்டு ஆசனங்களை வைத்து தமிழ் மக்களின் ஆணை தனக்கு உண்டு என்று கூறிக்கொள்கிறது.ஆனால் திருமலை புத்தர் சிலை இந்த அரசாங்கத்தை நிர்வாணமாக்கியிருக்கிறது.
அரசாங்கம் எல்லாவற்றிக்கும் எதிர்கட்சிகளைக் குற்றஞ்சாட்டுகிறது.கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கையில் எடுத்து மீண்டும் தாக்கும் நிலைக்கு முன்னேற முயற்சிப்பதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.
திருகோணமலையில் சம்பந்தப்பட்ட காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ரெஸ்ரோரன்ட் ஒரு ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தருக்குரியது. எனவே இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகள் நேரடியாகச் சம்பந்தப்படுகின்றன என்று அரசாங்கம் கூறக்கூடியதாக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உணர்ச்சிகரமான ஆதரவைத் திரட்டும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கையில் எடுத்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.
கடந்த பல தசாப்த கால இன முரண்பாட்டு அரசியலில், ஆளுங்கட்சி அதன் இனவாதப் பண்பை அடக்கி வாசித்தால் எதிர்க்கட்சிகள் இனவாதத்தை உச்ச நிலைக்கு கொண்டு போவதே இலங்கைத் தீவின் அரசியல் பாரம்பரியம் ஆகும். இப்பொழுதும் அது நடக்கின்றது.
ஆனால் அதற்காக,நுகேகொட ஆர்ப்பாட்டத்தில்,வடக்குக் கிழக்கு மக்கள் ஆர்வம் காடடவில்லை என்பதை,தமிழ்மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்ப விரும்பவில்லை என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
மாறாக,தமிழ்மக்கள் எதிர்க் கட்சிகளையும் நம்பவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.திருமலைச் சிலை எதிர்க் கட்சிகளை,குறிப்பாக சஜித் பிரேமதாசாவை அம்பலப்படுத்தியிருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வாக்களிக்குமாறு கேட்ட சுமந்திரனை அம்பலப்படுத்தியிருக்கிறது.அருண் ஹேமச்சந்திரவை ராஜினாமாச் செய்யுமாறு கேட்கும் சுமந்திரன்,ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரிப்பது என்று தான் எடுத்த முடிவுக்குப் பொறுப்பேற்று இப்பொழுது கட்சிப் பொறுப்புகளைத் துறப்பதற்குத் தயாரா?
கடந்த புதன்கிழமை ஜனாதிபதியைச் சந்தித்தபோது,இனப்பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது தொடர்பாக அவர் தெரிவித்தவற்றை தன்னுடைய “எக்ஸ்” தளத்தில் சுமந்திரன் பதிவிட்டிருந்தார்.அப்பதிவின்படி,ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில்,நிலைமாறு கால நீதியின் கீழ், உருவாக்கப்பட்ட தீர்வு முன்மொழிவின் இடைக்கால வரைபை முழுமைப்படுத்தும் நோக்கம் அவரிடம் இருப்பது தெரிகிறது.
2021ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து நிலைமாறு கால நீதியை ஒரு “தோல்வியடைந்த பரிசோதனை” என்று அவர் சொன்னார்.அந்தத் தோல்விக்கு அவர் இதுவரை பொறுப்பேற்கவில்லை.இப்பொழுது அந்தத் தோல்வியின் விளைவாக வந்த தீர்வு முன்மொழிவை மேசையில் வைக்க வேண்டும் என்று கேட்கிறாரா?
சட்டவிரோத கட்டுமானம் ஒன்றுக்கு எதிரான நடவடிக்கைகளைத் திசை திருப்புவதற்காக,இடையில் கொண்டுவரப்பட்ட ஒரு புத்தர் சிலையின் விடயத்தில், இனவாதிகளுக்குப் பணிந்த ஓர் அரசாங்கம்,பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும்; அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்கும்; ஒரு புதிய யாப்பை குறிப்பாக,தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வை உள்ளடக்கிய யாப்பைக் கொண்டு வரும் என்று எப்படி நம்புவது?
குறிப்பாக அந்த யாப்பு பொதுஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் போது இனவாதத்தை கையாள்வதற்கு இந்த அரசாங்கத்தால் முடியும் என்று எப்படி நம்புவது?
Spread the love
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!