புத்தளத்தில் இரு லொறிகளில் அடுத்தடுத்து மோதிய பஸ்ஸின் சில்லில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் காயம்
புத்தளம் - அனுராதபுரம் வீதியில் அமைந்துள்ள 6ஆம் கந்தை பகுதியில் பஸ்ஸின் மிதிபலகையில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கருவலகஸ்வெவ மேல் புளியங்குளம் பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் என்றும் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதிக்கு செலுத்த முற்பட்ட லொறியில் மோதியதையடுத்து, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியின் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பேருந்தின் மிதிபலகையில் நின்றுகொண்டிருந்த இருவர் தவறுதலாக வீதியில் வீழ்ந்துள்ளனர்.
அவ்வேளை, வீதியில் விழுந்த இருவரில் ஒருவர் மீது பஸ் சக்கரம் ஏறியதால் அந்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி, நடத்துநர் மற்றும் லொறி சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக புத்தளம் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!