news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து விலக மறுத்தார் விக்னேஸ்வரன்

21 Jan, 2016

CM-WIGNESWARANதமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ளும்படி, வடக்கு மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த, வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டத்தில், மாகாணசபை உறுப்பினர்களான ஆர்னோர்ட், பரஞ்சோதி, அஸ்மின், சுகிர்தன், சயந்தன் ஆகியோர், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியில் இருந்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் விலக வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தினர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட், “வடக்கு மாகாண முதலமைச்சராக நாம் தான் உங்களைப் பதவிக்குக் கொண்டு வந்தோம். எம்மால் தான் நீங்கள் முதலமைச்சராகினீர்கள்.அதனை மற்றவர்கள் தமது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

நாம் உங்கள் தலைமையின் கீழ் பல விடயங்களை முன்னேற்றங்களை கொண்டு செல்வோம். நாம் உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப் போவதாக வெளியான செய்தி தவறானது.

ஆனால், நீங்கள் தமிழ் மக்கள் பேரவையிலிருந்து விலக வேண்டும். எங்களுடன்தான் நீங்கள் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மற்றொரு மாகாண சபை உறுப்பினரான பரஞ்சோதியும் முதலமைச்சரை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், ” எமது தலைமை எம்முடன் கலந்து பேசாமல்தான் முடிவெடுகின்றார்கள். எமது கரிசனையை நாம் வெளிப்படுத்த வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தங்களுடைய தீர்வு யோசனையை முன்வைக்கலாம். தமிழர் கரிசனையை அரசுக்கு காட்டுவதாக இது அமையும்.

எம் எல்லோருடைய கோரிக்கையும் 2013 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையின்படி அமைவதால் அனைவரும் அதனையே சொல்கிறோம் என்பதை காட்டமுடியும்.

அதேவேளை தமிழ் மக்கள் பேரவையில் இருந்து விலகும் அவசியம் எனக்கில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்த வேளையில் குறுக்கிட்டமாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதி, “நீங்கள் பேரவையிலிருந்து வெளியேற வேண்டும்” என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

எனினும், முதலமைச்சர் “வெளியே வரும் அவசியம் எனக்கு இல்லை” என்று தெரிவித்தார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!