பொதுமக்களின் காணிகளை ஜனவரியில் மீள கையளிப்போம் : பிரதமர் ரணில்
வடக்கிலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.
இதன்பிரகாரம் ஜனவரி மாதமளவில் மீதமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இரண்டு தரப்பினராலும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. இது குறித்து உண்மைகளை கண்டறிந்து விசாரணை செய்து குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சிவில் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து நேற்று
சுதந்திரத்திற்கான அரங்கம் என்ற தொனிப்பொருளில் கீழ் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இவ்வாறு மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படும் என்று நாம் யாவரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம். கடந்த காலங்களில் மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்க கூடிய சூழல் இலங்கையில் காணப்படவில்லை. எனினும் ஜனவரிக்கு பின்னர் அதற்கான சூழல் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில் அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் அளப்பரியதாகும். இதற்காக வீதியிலிறங்கி பாரிய போராட்டங்களை நடத்தியது சிவில் அமைப்புகளாகும்.
கடுமையான போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் மத்தியில் ஜனவரி புரட்சியை வெற்றிக்கொண்டோம். இனங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு புதிய அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். எனினும் இறுதியில் தேசத்துரோகி நாமமே எனக்கு கிடைத்தது.
ஜனவரி 8 ஆம் திகதி வெற்றிக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியை ஏற்படுத்தினார். ஜனநாயக ரீதியாக பல்வேறு வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு பாரிய தியாகங்களை அவர் முன்னெடுத்துள்ளார். இதன்படி நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியுள்ளோம். ஜனவரி 8 ஆம் திகதி புரட்சிக்கு எதிராக மாற்று புரட்சி முன்னெடுப்பதற்கு சில குழுவினர் தயாராகி வருகின்றனர்.
முன்னைய ஆட்சியின் போது 44 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். இவ்வாறு ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படும் போது மாற்று புரட்சி செய்ய கூடியவர்களின் கண்ணுக்கு புலப்படவில்லை. மக்களின் சேவைக்கு உரித்தான வைத்தியர்கள் ராஜபக்ஷவினர்களாக செயற்படுகின்றனர்.
தற்போது விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் போது யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முழு சர்வதேச நாடுகளையும் ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு எம்மால் முடிந்துள்ளது.
விடுதலை புலிகள் இயக்கமானது மிகவும் கொடூரமான பயங்கரவாதமாகும். இதனை சர்வதேசமும் ஏற்றுக்கொண்டுள்ளது. யுத்ததின் போது இரு தரப்புக்களினாலும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. ஆகவே இது தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இதனூடாக குற்றம் இழைக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் உண்மை கண்டறியப்பட வேண்டும்.
அத்துடன் காணாமல் போனோர் தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு விசேட அலுவலகமொன்றை கட்டமைக்கவுள்ளோம். மேற்படி கட்டமைப்பின் கீழேயே உள்ளக விசாரணை பொறிமுறை அமையும். எமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சிவில் அமைப்புகளின் பொறிமுறைகள் கட்டாயம் தேவையாகும்.
அதேபோன்று எமது ஆட்சியின் போது வடக்கில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் ஏக்கர் கணக்கில் விடுவிக்கப்பட்டன. எனினும் மிகுதமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்துடன் நாம் பேச்சுவார்த்தை ர்த்தை நடத்தி கலந்துரையாடி வருகின்றோம். வடக்கில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளிலும் முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆகையால் இது தொடர்பில் ஆராயந்து வருகின்றோம். இதன்படி ஜனவரி மாதமளவில் மிதமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
மேலும் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பிலான சர்வதேச சாசனத்திற்கு கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆகவே புதிய பயணத்திற்கு எம்முடன் இணையுங்கள் என்றார்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!