உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
யார் இந்த கமலினி?
16 வயதேயான கமலினி, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த குணாளன் - சரண்யா தம்பதியின் மகள் ஆவார். லாரி உரிமையாளரான குணாளன், கல்லூரி மாணவராக இருந்த போது கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாத நிலையில் தனது மகனை கிரிக்கெட் வீரராக்க அவர் விரும்பியுள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய குணாளன், "கொரோனா கால கட்டத்தில் என் மகனுக்கு வீட்டிற்கு அருகே உள்ள மைதானத்தில் வலை கட்டி தினசரி கிரிக்கெட் பயிற்சி அளித்தேன். எங்களுக்கு உதவியாக கமலினி கூடைகளில் பந்துகளை சேகரித்து கொடுத்து வந்தார்.
அப்போது 12 வயதாக இருந்த கமலினி பந்தை எடுத்து அசாதாரணமாக வீசியதை பார்த்து பிரமித்துப் போனேன். அதன் பின்னரே மகளுக்கும் கிரிக்கெட் பயிற்சி அளித்தேன்." என்று கூறினார்.
குணாளன் அளித்த பயிற்சியில் நன்றாக விளையாட தொடங்கி இருக்கிறார். ஆனால் மதுரையில் கிரிக்கெட் வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்கான உயர்தர புல் தரை மைதானம் இல்லாததால் அவர் குடும்பத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
அதன் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் சேர்ந்து கமலினி பயிற்சி பெற்றார். மாதம் ரூ.8 ஆயிரம் கட்டி தினமும் 5 மணி நேரம் அவர் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
தமக்கு கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திய கமலினி, உள்ளூர் போட்டிகளில் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற பெயரை பெற்றார்.
2021ஆம் ஆண்டு 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக கமலினி விளையாடினார். 36 மாநிலங்கள் கலந்து கொண்ட அந்த தொடரில் அதிக ரன்கள் (485 ரன்கள்) குவித்து அவர் முதல் இடத்தை பிடித்தார். ஆனால் தமிழ்நாடு அணி அரை இறுதியில் தோல்வியடைந்தது.
பின்னர் 19 வயதுக்குட்டோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி அதிக ரன் குவித்தவர்களில் இரண்டாவது இடம் பிடித்தார்.
அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான கமலினி, அவ்வப்போது சுழற்பந்து வீசவும் செய்வார். தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் விளையாடி வருகிறார்.
அண்மையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போட்டியில் கமலினி ஆட்டம் இழக்காமல் 29 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
"என் மகளின் கனவு நனவாகியுள்ளது"
"என் மகளை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் விளையாட ரூ.1.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது, பேச வார்த்தைகள் இல்லை" என கமலினியின் தந்தை குணாளன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"என் மகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்து விளையாட வேண்டும் என்பது கனவு. அதற்காக மூன்று முறை பயிற்சிக்காக மும்பை சென்றுள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி கமலினியை ஏலத்தில் எடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் குடும்பத்தின் ஐந்து வருட உழைப்புக்கு கிடைத்த பரிசு. மகளிர் பிரீமியர் லீக்கில் என் மகள் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
எனது மகள் ஒவ்வொரு முறையும் விளையாடச் செல்லும் போது என்னிடம் ஒரு சில அறிவுரைகளை கேட்டு பெற்று விளையாடி வருகிறார். எனவே ஒரு தந்தை என்பதை காட்டிலும் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்", என்றார் குணாளன்.
படக்குறிப்பு, குடும்பத்தினருடன் கமலினி
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!