மடப்புரம் காவலாளி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றதாக நீதிமன்றத்தில் புதிய மனு - நாளை விசாரணை
மடப்புரம் காளி கோவில் காவலர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கில் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றதாக கூறி அந்நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணைக்கு வருவதால் இந்த வழக்கையும் சேர்த்து விசாரணை செய்வதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மகாராஜன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 28 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண்மணி கோவில் காவலர் அஜித்குமார் வசம் தனது காரை வாகன நிறுத்தத்தில் நிறுத்த சொல்லிக் கொடுத்துள்ளார்.
அதில் தனது வைத்திருந்த நகை திருடு போனதாக போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீஸார் அஜித்குமாரை அடித்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், சம்பவத்தன்று திருப்புவனம் காவல்துறையுடன் இணைந்து அப்பகுதியை சேர்ந்த பிரமுகர்கள் கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்துள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனையின்போது காயங்களை மறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். சிலர் அஜித்குமார் குடும்பத்தினரை அவரது உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு உரிய பணம் பெற்று தருவதாக கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர்.
மனித உரிமைக்கு எதிரான சட்ட விரோத காவல் மரணங்களை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க வேண்டும்.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரமுகர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளீட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணை செய்த நீதிபதிகள், அஜித்குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு வர உள்ளதால் இந்த வழக்கையும் நாளை சேர்த்து விசாரிப்பதாக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!