சட்டத்தின் முன் சரணடையும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம்;கம்பி எண்ணப்போகும் ராஜபக்ஸ குடும்பத்தினர்
18 Sep, 2026
மதுரை மீனாட்சியம்மன் கோயில்
விஜயநகர பேரரசு காலத்தில் கிபி 1530 முதல் 1546 வரையிலான அச்சுதராயர் என்பவரின் காலத்திய கல்வெட்டில் தான் சித்திரை திருவிழா பற்றிய முதல் குறிப்பு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெற்றதும், அதன் செலவுகளுக்காக பல கிராமங்கள் அளிக்கப்பட்டதும் குறிக்கப்பட்டுள்ளன.
கிபி 1736ம் ஆண்டு வரை மதுரையில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றுள்ளது. நாயக்கர்களால் பாதுகாக்கப்பட்டு நமக்கு அளிக்கப்பட்டது தான் இப்போதுள்ள கோயில்.
அம்மன் பெயர் மீனாட்சி அல்ல :
கல்வெட்டு ஆய்வில் கண்டறியப்பட்ட மிக முக்கியமான குறிப்பு, மீனாட்சி என்ற பெயர் எங்குமே இல்லை என்பது தான். 1752ம் ஆண்டு வரை மீனாட்சி என்ற பெயரே அம்மனுக்கு கிடையாது. 1710ல் தான் சொக்கநாதர் என்ற பெயரே சுவாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்பு வரை சுவாமியை, "மாடக்குளக்கீழ் மதுரோதய வளநாட்டு மதுரையில் திரு ஆலவாய் உடைய நாயனார் திருக்கோயில்" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்மனை, "திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்" என்றே குறிப்பிட்டுள்ளனர். 1898ம் ஆண்டின் கல்வெட்டில் தான் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என்று இப்போது நாம் குறிப்பிடும் பெயர் காணப்படுகிறது.
சீர்பாதம் தாங்கும் தொழிலாளர்கள் போராட்டம் :
கிபி 1710ல் விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் சுவாமிகளின் பல்லக்கை சுமக்கும் சீர்பாதம் தாங்கும் தொழிலாளர்கள் 64 பேருக்கு சாமநத்தம் உள்ளிட்ட 4 கிராமங்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன. அவரது ஆட்சிக்கு பின்னால், அந்த கிராமங்கள் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்து சீர்பாதம் தாங்கிகள் கோயில் முன்பாக போராட்டம் நடத்தினர்.
அப்போது குட்டி என்பவர் சொக்கநாதர் சன்னதிக்கு நேரே உள்ள வாயில் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து இறந்தார்.
அதனால், அப்பகுதியில் பக்தர்கள் செல்வது நிறுத்தப்பட்டது. அந்த வாயிலில் பக்தர்கள் செல்வது நிறுத்தப்பட்டதால் திருமலை நாயக்கர் காலத்தில், அம்மன் சன்னதிக்கு நேரே அமைக்கப்பட்ட வாயில் வழியாக தான் நாம் தற்போது சென்று கொண்டிருக்கிறோம்.
சோழவந்தான் கிராமத்தின் உண்மையான பெயர் :
கிபி 946 - 966 வரை ஆட்சி செய்த வீரபாண்டியன் என்ற மன்னன் சோழ மன்னன் ஒருவனின் தலை கொண்டதை குறிக்கும் வகையில் 'சோழாந்தக சதுர்வேதி மங்கலம்' என குறிக்கப்பட்ட பெயரே பின்னாளில் 'சோழவந்தான்' என பெயர் மாறியுள்ளது. சோழவந்தான் ஊரின் ஆதிபெயர் பாகனூர் கூற்றம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சோழர்கள் செய்யாததும், செய்ததும் :
சோழர்கள் 200 ஆண்டு காலம் மதுரையை ஆட்சி செய்துள்ளனர். எந்த மன்னரும் மீனாட்சி கோயிலுக்கு எந்த திருப்பணிகளையும் மேற்கொள்ளவில்லை. 3ம் குலோத்துங்கன் - 'முடிகொண்ட சோழபுரம்' என மதுரையின் பெயர் மாற்றினான். ஆனால், அந்த பெயர் நிலைக்கவில்லை.
ராஜராஜசோழன் சோழவந்தான் பெயரை 'ஜனநாத சதுர்வேதி மங்கலம்' என மாற்றினான். அதுவும் நிலைக்கவில்லை.
நில தானம் பற்றிய குறிப்பு:
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாத்தியமாக சோழவந்தான், வாடிப்பட்டி, காரியாபட்டி, இளையான்குடி உள்ளிட்ட 80 கிராமங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
திருமலை நாயக்கர் பஞ்ச கம்மாளர்களுக்கு சில கிராமங்களை தானமாக அளித்துள்ளார். மடங்கள் கட்டி அவை இயங்குவதற்கு நிலங்கள் கொடுக்கப்பட்டதை 2 கல்வெட்டுகள் குறிக்கின்றன.
மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டு
பிற குறிப்புகள் :
தேவராயர் காலத்தில் சாதி வரி என்ற வரி நீக்கப்பட்டு உள்ளதற்கான குறிப்புகள் உள்ளன. பிராமணர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன.
அதில் 'நாவித பிராமணர்' என்றும் ஒரு குறிப்பு உள்ளது. மறவர், பறையர் தொடர்பான குறிப்புகள் உள்ளன. மறவர்கள் நிலவுடைமை சமுதாயமாக இருந்ததும் தெரிய வருகிறது.
இவ்வளவு பெரிய மீனாட்சி கோயில் கல்வெட்டுக்களில் அரசியல் வரலாறு பற்றியோ மக்கள் வாழ்வு பற்றியோ எந்த செய்தியும் இல்லை என்று தெரிவிக்கும் சாந்தலிங்கம், 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் வேளாண் சமுதாய எழுச்சிக்கு பின்னர் அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டே பெண் தெய்வங்கள்/கிராம பெண் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுவாமிக்கு இணையாக அம்மனுக்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!