மலையகத்தை ஆச்சரியப்படுத்திய ஜனாதிபதி அநுர
இ லங்கை அரசியல் வரலாற்றில் அரச தலைவர்கள் என்பவர்கள் எப்போதும் பலத்த பாதுகாப்பு வளையங்களுக்குள்ளும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மேடை நாகரிகங்களுக்குள்ளும் மட்டுமே மக்களைச் சந்திப்பார்கள் என்ற பிம்பத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் ஒருமுறை உடைத்தெறிந்துள்ளார்.
நுவரெலியா, நானுஓயா பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு, அதிகாரத்திற்கும் சாதாரண மக்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் ஒரு மைல்கல்லாக அமைந்தது. நுவரெலியாவிலுள்ள கிரகரி வாவி பூங்காவில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான “ரட்டம எகட” தேசிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதி வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தார்.
இதன்போது, ரதல்ல குறுக்கு வீதிக்கு அருகிலுள்ள சமர்செட் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்ட ஜனாதிபதி, தனது வாகனத் தொடரணியை நிறுத்திவிட்டு திடீரென தேயிலை மலைக்குள் இறங்கினார்.
எந்தவித ஆடம்பரமும் இன்றி, ஒரு சாதாரண பிரஜையாகத் தேயிலைச் செடிகளுக்கு ஊடாக நடந்து வந்த ஜனாதிபதியைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். தங்களின் அன்றாடப் பணிகளுக்கு மத்தியில் நாட்டின் தலைவரை இவ்வளவு நெருக்கமாகச் சந்திப்போம் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதியை மிகுந்த அன்புடன் வரவேற்றனர். அவர் அங்குள்ள பெண் தொழிலாளர்களுடன் சரிசமமாக நின்று அவர்களின் சுகதுக்கங்களை விசாரித்தார்.
மலையக மக்களின் நீண்டகாலப் போராட்டங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மிகவும் அக்கறையுடன் கேட்டறிந்தார்.
இந்தச் சந்திப்பின் போது தொழிலாளர்கள் குறிப்பிட்ட மிக முக்கியமான விடயம் சம்பள உயர்வு. நீண்டகால இழுபறிகளுக்குப் பின்னர் மலையகத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்காக அவர்கள் ஜனாதிபதிக்குத் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.
“எங்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லாதபோது, நீங்கள் எமது கோரிக்கைகளைச் செவிமடுத்து எமக்குச் சம்பள உயர்வைப் பெற்றுத் தந்தீர்கள்” எனத் தொழிலாளர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
இந்த விஜயம் வெறும் அரசியல் நோக்கம் கொண்டதல்ல, மாறாக, உழைக்கும் வர்க்கத்தின் மீது ஜனாதிபதி கொண்டுள்ள மதிப்பையும், அவர்களின் வாழ்வியலை நேரில் கண்டுணர அவர் காட்டிய ஆர்வத்தையுமே இது பிரதிபலிக்கிறது. ஜனாதிபதி தொழிலாளர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
நெகிழ்வுத்தன்மை மிக்க பாதுகாப்பே காணப்பட்டதால் அதிகப்படியான கெடுபிடிகள் இன்றி மக்கள் ஜனாதிபதியை நெருங்க அனுமதித்தது.
இதன்மூலம் இடைத்தரகர்கள் இன்றி மக்களின் உண்மையான உணர்வுகளை ஜனாதிபதி புரிந்துகொண்டார்.
தேயிலைத் தொழிலாளர்களின் கடின உழைப்பிற்கு அரச தலைவரே நேரில் வந்து கௌரவம் அளித்தமை பலராலும் வியந்து பாராட்டப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்த சமர்செட் தோட்ட விஜயம், மலையக மக்கள் நாட்டின் பிரதான நீரோட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கான ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
தேயிலைக் கூடையில் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, அவர்களின் குரலைக் கேட்க ஒரு தலைவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை இந்த சந்திப்பின் மூலம் விதைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து அவர் “ரட்டம எகட” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து இளம் தலைமுறையைப் பாதுகாப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, தோட்டப் பகுதிகளில் நிலவும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வழங்கினார்.
இவ்விதமான எளிய மற்றும் நேரடியான மக்கள் சந்திப்புகள், இலங்கையில் ஒரு புதிய ஜனநாயகப் பண்பு மலர்வதையே சுட்டிக்காட்டுகின்றது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!