சட்டத்தின் முன் சரணடையும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம்;கம்பி எண்ணப்போகும் ராஜபக்ஸ குடும்பத்தினர்
18 Sep, 2026
மஹிந்தவை பதவி விலகக் கோரும் மகாசங்கம் உள்ளிட்ட தரப்புகள், கோட்டா தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில், சஜித் பிரேமதாஸவை அங்கம் வகிக்கக் கோரும் அழுத்தங்களை வழங்குகின்றன.
இதன்மூலம், ராஜபக்ஷர்களுக்கு எதிரான மக்களின் கோபத்தை, பிரதான எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் மீதும் திசை திருப்பிவிடும் நோக்கமும் இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏழாமல் இல்லை.
ராஜபக்ஷர்களுக்கு எதிரான போராட்டங்களைக் கைவிட்டு, இடைக்கால அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு, தனக்கு எச்சரிக்கை விடுக்கும் தொலைபேசி அழைப்புகள் வருவதாக, சஜித் அண்மையில் கூறியிருந்தார். அவரின் இந்த வெளிப்படுத்தலை, பலரும் நகைப்புக்குரிய ஒன்றாகவே பார்த்தனர்.
ஆட்சி அமைப்பதற்காக ஆணை கோரி, மக்களிடம் செல்லும் ஒருவர், தொலைபேசி வழியாக விடுக்கப்படும் எச்சரிக்கைக்குப் பயம் கொள்வாரா? இவ்வாறான ஒருவர்தான், நாளை எங்களை ஆளப்போகிறாரா? என்கிற கேள்விகள் எழுந்தன.
ஆனால், தொலைபேசி வழியாக வரும் எச்சரிக்கைகளை, ஆட்சிக்கு வர விரும்பும் எந்த அரசியல்வாதியும் உடனடியாக வெளிப்படுத்தமாட்டார்கள்.
அதனை புறந்தள்ளவே நினைப்பார்கள். ஆனால், தொலைபேசி வழியாக வரும் எச்சரிக்கைகளை வெளிப்படுத்தும் சூழல் அமைகின்றது என்றால், அது முக்கியமான கட்டமாகவே இருக்கும். அவ்வாறான கட்டத்தில்தான், சஜித்தை தொலைபேசியில் மிரட்டியது யார் என்கிற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகின்றது.
இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை என்றால், எதிர்க்கட்சியும் கூட தங்களிடம் ஆசீர்வாதம் வாங்க வரக்கூடாது என்கிற பெளத்த மகாசங்கத்தின் மறைமுக அறிவிப்புக்கும், தொலைபேசி வழியாக வரும் எச்சரிக்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது.
ராஜபக்ஷர்களை விரட்டியடிக்கும் போராட்டங்கள் எழுச்சிபெற ஆரம்பித்ததும், அதனோடு சேர்த்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு என்கிற விடயமும் மீண்டும் மேலெழுந்தது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதன் மூலம், அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் மீண்டும் சேர்ப்பிக்கலாம் என்பது தொடர்ச்சியான வாதம்.
அப்படியான நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதற்குத் தான் தயாராக இருப்பதாக சஜித் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அதன்மூலம், எதிர்காலத்தில் ஜனாதிபதி என்கிற ஒருவருக்கு கட்டுப்படாத பாராளுமன்றத்துக்குக் கட்டுப்படும் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்பது அவரது நிலைப்பாடு.
ஆனால், அவ்வாறான நிலை உருவானால், தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளின் வகிபாகம், ஆட்சி அதிகாரத்துக்குள் அதிகரித்துவிடும் என்பது, தென் இலங்கை இன அடிப்படைவாதிகளுக்கு பெரும் பயம். அதனால்தான், அவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை பேண நினைக்கிறார்கள்.
அதன் போக்கில், நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படாத வகையில், தற்போதுள்ள மக்களின் எழுச்சியை நலிவடையச் செய்ய நினைக்கிறார்கள். அதற்கு, கோட்டா தவிர்ந்த ஏனையை ராஜபக்ஷர்களை ஆட்சியிலிருந்து சிறிது காலம் விலகியிருக்குமாறு கோருகிறார்கள்.
அதுதான், கோட்டாவை விடுத்து மஹிந்தவை பதவி விலகுமாறு மகாசங்கம் கோரிய பின்னணியில் இருக்கும் சூட்சுமம். ஆனால், தான் பதவி விலகினால் தன்னுடைய மகன்களின் எதிர்கால ஆட்சி அதிகாரக்கனவு பாழாகிவிடும் என்பதாலேயே, மஹிந்த பதவி விலகுவதை எப்படியாவது தவிர்க்க நினைக்கிறார்.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகலாம். அப்படியான நிலையில், இடைக்கால அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சிகளை கொண்டு வருவது என்பது, ராஜபக்ஷர்களின் மீதான மக்களின் கோபத்தை மடைமாற்றிவிடும் திட்டமாகும். அதன்மூலம், ராஜபக்ஷர்களை எதிர்காலத்துக்காக பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது, தென் இலங்கையில் இனவாத வாளைச் சுற்றும் தரப்புகளின் எண்ணம்.
அதைப் புரிந்து கொண்டும், தென் இலங்கையில் புதிய இடைக்கால அரசாங்கத்துக்கான காட்சிக் கட்டங்களை பார்க்க வேண்டும்.
-புருஜோத்தமன் தங்கமயில்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!